Monday, March 19, 2018

ஜனாதிபதி அங்கிள்!

செய்தி- தாயின் மரணத்திற்கு சிறையில் இருந்து வந்த தந்தையுடன் செல்ல விரும்பிய சிறுமி.
ஜனாதிபதி அங்கிள்!
நீங்கள் ரொம்ப நல்லவர் என்று சுமந்திரன் மாமா கூறுகின்றார்.
நீங்கள் ரொம்ப எளிமையானவர் என்று சம்பந்தர் தாத்தா கூறுகின்றார்.
உங்களை கொல்ல வந்தவரையே நீங்கள் மன்னித்து விடுதலை செய்ததாக பத்திரிகை மாமாக்கள் கூறுகின்றனர்.
அதுமட்டுமன்றி நீங்கள் உங்கள் வீட்டு சாப்பாட்டை உங்கள் கையாலே சாப்பிடுகின்றீர்களாம்.
இந்தளவு நல்லவாரன, எளிமையானவரான, அன்பு உள்ளம் கொண்ட நீங்கள் என்னையும் என் அப்பாவுடன் சேர்த்து சிறையில் அடைத்து விடுங்கள் பிளீஸ்.
நீங்கள் ஒருபோதும் என் அப்பாவை உயிருடன் விடுதலை செய்யப்போவதில்லை என்று எனக்கு தெரியும்.
ஏனெனில் நேற்றுகூட சிறையில் இருந்த ஒரு மாமாவை இறந்த பின்பு பிணமாகத்தானே வெளியில் விட்டுள்ளீர்கள்.
இப்போது என் அம்மாவும் இறந்துவிட்டார். நான் அப்பாவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்.
சம்பந்தர் தாத்தாவின் மகள் அவருடன் கூட இருந்து ஒவ்வொரு நாளும் தன் தந்தையை பார்க்கிறார்.
சுமந்திரன் மாமாவின் பிள்ளைகள் அவருடன் ஒன்றாக கூட திரிந்து மகிழ்கிறார்கள்.
மாவை சேனாதிராசா மாமாகூட தன் பிள்ளையை தன்னுடன் வைத்து பிரதேசபை உறுப்பினராக்கியுள்ளார்.
சரவணபவன் மாமாவின் மகள் பிறந்தநாளுக்கு நீங்களே வந்து கேக் ஊட்டுகின்றீர்கள்.
நானும் அவர்களது பிள்ளைகள் போல் என் அப்பாவுடன் சேர்ந்து இருக்க விரும்புகிறேன்.
நானும் என் அப்பாவின் கை பிடித்து பாடசாலை செல்ல விரும்பினேன். அது நடக்கவில்லை.
நானும் அப்பாவின் முதுகில் எறி உப்பு மூட்டை விளையாட்டு விளையாட விரும்பினேன். அதுவும் நடக்கவில்லை.
நான் சிறையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் என் அப்பாகூட இருக்க விரும்புகிறேன்.
என் விருப்பத்தை நிறைவேற்றுவீர்களா அங்கிள்?
நான் என்ன தவறு செய்தேன். எனக்கு மட்டும் ஏன் இந்த தண்டனை?
தமிழ் இனத்தில் அதுவும் ஏழையாக பிறந்தது என் குற்றமா அங்கிள்?
குறிப்பு- இந்த சிறுமியின் தந்தை இதுவரை விடுதலை செய்யப்படாதது மட்டுமன்றி மரணசடங்கில் கலந்துகொள்ள வெறும் 3 மணி நேரமே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுமை குறித்து இதுவரை ஒரு தமிழ் தலைவர்கூட குரல் கொடுக்கவில்லை.

No comments:

Post a Comment