Monday, March 19, 2018

இவர்கள் குரல் அற்றவர்களா?

செய்தி- வவுனியாவைச் சேர்ந்த தமிழ் அரசியல்கைதி ஒருவர் சிறையில் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் குரல் அற்றவர்களா?
இவர்களுக்காக ஏன் நம் தலைவர்கள் குரல் கொடுப்பதில்லை?
இவர்களுடைய மரணம்தான் இவர்களுக்கான விடுதலைக்கு ஒரே வழியா?
இவர்கள் அத்தனை பேரும் சிறையிலேயே இறந்து போகட்டும் என்று விட்டுவிடப் போகிறார்களா?
இவர்கள் தமது இறுதிக்காலத்திலாவது தமது உறவுகளுடன் சேர்ந்து வாழ எம் தலைவர்களால் எதுவும் செய்ய முடியாதா?
இவர்களைக்கூட விடுவிக்க முடியாத நம் தலைவர்கள் இனப் பிரச்சனைக்கு தீர்வு பெற்று தருவார்கள் என்று எப்படி நம்புவது?
வவுனியாவைச் சேர்ந்த சண்முகநாதன் தேவகன் என்பவர் வெலிக்கடை சிறையில் மரணமடைந்துள்ளார். அவர் வயது 70.
புலிகளுக்கு வாகனம் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 2008ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இரண்டு வருட தண்டனையை பெறுவதற்காக இவர் 10 வருடம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இனியாவது விடுதலை கிடைத்துவிடும் என நம்பியிருந்தவேளை கடந்த மாதம் புதிதாக இன்னொரு வழக்கு இவர் மீது போடப்பட்டுள்ளது.
இனி ஒருபோதும் விடுதலை பெற முடியாது என்று விரக்தியடைந்த வேளை நோய் அவரை வாட்டியது.
அவர் மீது தொடர்ந்து வழக்குபோட்டு சிறையில் அடைத்து வைக்க அக்கறைகாட்டிய அரசு அவருக்கு சிகிச்சை வழங்க அக்கறை காட்டவில்லை.
இறுதியாக அவர் மரணமடைந்து சிறையில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.
சிறையில் உள்ள அரசியல் கைதிகள் யாவரும் மரணமடைந்து விடுதலை பெறட்டும் என நல்லாட்சி அரசு நினைத்து விட்டது போலும்.
இதனையே எம் தலைவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர்போலும் . ஏனெனில் இவர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்காதது மட்டுமல்ல இவர்கள் மரணமடைந்த பின்னரும்கூட ஒரு கண்டனத்தை இவர்களால் தெரிவிக்க முடியவில்லை.
என்னே அவலம் இது!

No comments:

Post a Comment