Wednesday, February 28, 2018

அன்ரனி மார்க் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

கனடாவில் இருக்கும் அன்ரனி மார்க் அவர்கள் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
வேலுர் சிறப்புமுகாமில் சில வருடங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த மார்க் அன்ரனி அவர்கள் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
கனடாவில் எனது “ சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் “ நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு தனது சிறப்புமுகாம் அனுபவத்தை பேசியிருந்தார்.
சிறந்த உணர்வாளரான மார்க் அன்ரனி அவர்கள் தொடர்ந்தும் எனது முயற்சிகளுக்கு தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்கி வருகிறார்.
எனது நூல் குறித்து கருத்துக்களை தெரிவித்த அன்ரனி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்ரனி அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு,
1990 ஆண்டு கலைஞர் ஆட்சிக்காலத்திலேதான் வேலூர் கோட்டையில் ஈழத் தமிழர்களை அடைத்து வைக்கப்படும் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாம் ஆரம்பிக்கப்பட்டது.
தம்மை விடுதலை செய்யுமாறு கோரிய இரண்டு அகதி இளைஞர்களை பிரியாணி கேட்டார்கள் என்று பொய்யாக கூறி கமிஷனர் தேவாரம் சுட்டுக்கொன்றதும் இதே சிறப்புமுகாமில்தான்.
வேலுர் கோட்டையில் உள்ள ஹைதர் மகாலில் ஆணகள் பெண்கள், குழந்தைகள் என சுமார் 300 பேர் அடைக்கப்பட்டிருந்தனர். அருகில் இருந்த திப்புமகாலில் சுமார் 120 ஆண்கள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தனர்.
திப்புமகாலில் நான் அடைத்து வைக்கப்பட்டிருந்தவேளை 1992ம் ஆண்டளவில் தோழர் பாலன் அவர்களையும் கொண்டு வந்து எம்முடன் அடைத்தனர்.
அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்த காலங்களில் கொடைக்கானல் டிவி டவர் வெடிகுண்டு வழக்கிற்காக அவரை பொலிசார் நீதிமன்றம் அழைத்து சென்று வருவார்கள்.
அவ்வாறு சென்று வரும் நேரங்களில் தோழர் பாலன் மூலமும் அவர் தோழர்களிடமிருந்து பெற்றுவரும் பிரசுரங்கள் மூலமும் தோழர்கள் தமிழரசன், மாறன் பொன்றவர்கள் பற்றி அறிந்துள்ளேன்.
அதேபோல் தமிழரசன் மறைவிற்கு பின்னர் தமிழ்நாடுவிடுதலைப்படையை முன்னெடுத்த தோழர் லெனின் சுந்தரம் போன்றவர்களையும் அவர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் பற்றியும் அறிந்திருக்கிறேன்.
ஆனால் “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” என்ற இந்த நூலைப் படித்தபின்பே அவர்களை நன்கு அறிய முடிகிறது.
அவர்களின் வரலாற்றை மட்டுமன்றி அவர்கள் பின்பற்றிய தத்துவங்கள் பற்றியும் அவற்றின் இன்றைய அவசியம் பற்றியும் விரிவாகவும் விளக்கமாகவும் இந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார்.
தமிழக தமிழர்கள் மட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கும் அறிந்துகொள்ள நிறைய விடயங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது.
மேலும் ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள், சுந்தரம் மாறன் லெனின் போன்றவர்களை ஈழத் தமிழர்களுக்கு நன்கு அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நூல்.
தோழர் பாலன் அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். அவர் இதுபோன்று பயன்மிக்க நூல்களை இன்னும் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment