Wednesday, May 16, 2018

தமிழக விடுதலைப் போராட்டமும் தோழர் தமிழரசனின் பங்கும் - புலவர் கு. கலியபெருமாள்

தோழர் தமிழரசன் கொல்லப்பட்டபோது புலவர் எழுதிய நினைவுக் குறிப்பு வருமாறு,

தமிழக விடுதலைப் போராட்டமும் தோழர் தமிழரசனின் பங்கும்
- புலவர் கு. கலியபெருமாள்

இந்திய துணைக் கண்டத்தில் தெலுங்கானா உழவர்கள் கருவி ஏந்திப் போராடி மூன்றாயிரம் சிற்றூர்களை விடுதலை செய்தனர். நிலவுடமையாளர்களிடம் இருந்த நிலங்களைப் பறிமுதல் செய்தனர். அம் மக்களை ஒடுக்க இந்திய கூலிப்படை சென்றது. அம் மக்களின் போராட்டத்திற்குத் தலைமை ஏற்றிருந்த இந்தியப் பொதுவுடமைக்கட்சி உறுதியாக நிற்கவில்லை. “முற்போக்காளர்கள் இரத்தம் சிந்த வேண்டாம். நிலம் இல்லாதவர்களுக்கு நிலமும் உழவர்களுக்கு சட்ட முறைப்படி உரிமையும் பாதுகாப்பும் கொடுக்கப்படும். எனவே கருவிகளை ஒப்படையுங்கள்” என்று நேரு கூறினார். புரட்சியை நடத்திச் சென்ற அன்றைய தலைமை மீது உழவர்கள் நம்பிக்கை வைத்துக் கருவிகளை ஒப்படைத்தனர்.

அதன் விளைவு உழவர்கள் கைப்பற்றிய நிலங்கள் மீண்டும் நில உடமையாளர்கள் கையில் நேரு அரசால் ஒப்படைக்கப்பட்டன.
அன்றைய திருத்தல் தன்மையான கட்சியின் தலைமையை எதிர்த்துதான் 1967ல் மேற்கு வங்கத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் சிற்றூரில் உழவர்கள் கருவிப் போராட்டத்தை தொடங்கினர்.

தமிழகத்தில் தோழர் அப்பு தலைமையில் உழவர்களின் கருவிப் போராட்டம் தொடங்கியது. அதற்கு ஏராளமான தமிழ் உழவர்களும் இளைஞர்களும் மாணவர்களும் ஆதரவாக வந்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தோழர் கணேசன் தலைமையில் பல மாணவர்களும், கோவைப் பொறியல் கல்லூரியில் இருந்து தோழர் தமிழரசன் தலைமையில் ஒன்பது பேர்களும் இன்னும் பல்வேறு கல்லூரியில் இருந்து பல மாணவர்கள் தங்கள் கல்வியை முடிக்காமலே வெளியில் வந்தனர்.

தோழர் கணேசன் 1979ல் வெடி விபத்தில் இறந்து போனார். தோழர்கள் அப்பு, பாலன், கண்ணாமணி, சீராளன் இன்னும் பலர் எதிரிகளால் கொல்லப்பட்டனர். தோழர் வேலு காவல்துறை ஒற்றர்களால் கொல்லப்பட்டார்.

தோழர் வேலு கொல்லப்பட்ட பின் உளவுத்துறையினர் புதிய ஒடுக்குமுறையைக் கற்றுக் கொண்டனர். காவல்துறையினர் கொன்றால் மக்கள் எதிர்ப்பு வருகிறது என்று மக்கள் என்ற பெயரில் கருங்காலிகளும் உளவுத்துறையினரும் கொன்றால் மக்கள் எதிர்ப்பு இல்லாமல் போகின்றது. அத்தோடு புரட்சிகர இயக்கத்தை வளர விடாமல் தடுக்க முடிகின்றது என்கிற புது வழிமுறையைக் கையாண்டனர். இந்த அடிப்படையில்தான் பொன்பரப்பியில் தோழர் தமிழரசனையும் தோழர்கள் தர்மலிங்கம் செகநாதன் பழனிவேல் அன்பழகன் ஆகியோரை திட்டமிட்டு படுகொலை செய்தனர், காவல்துறையினரும் அவர்களின் கூலி பெற்ற கருங்காலிகளும்.

இந்தியாவில் ஏற்றத்தாழ்வான வளர்ச்சி நிலையில் பல்வேறு தேசிய இனங்கள் நிறைந்து இருக்கின்றன. எல்லா இனங்களும் அல்லது ஆதிக்கம் செலுத்தும் தேசிய இனத்தின் பாட்டாளி வகுப்பும் ஓர் அரசியல் ஆற்றலாக உருவாகவில்லை. இந்தி இனத்தின் பாட்டாளி வகுப்பு அரசியல் ஆற்றலாக ஆளும் வகுப்பை தூக்கியெறியும்வரை சிறு தேசிய இனங்கள் ஒடுக்கலைச் சகித்துக்கொள்ள வேண்டும் என்பது மாக்சியம் அல்ல. ஏற்றத் தாழ்வான தேசியஇன வளர்ச்சியால் எந்த தேசிய இனங்கள் ஒடுக்கலுக்கும் சுரண்டலுக்கும் சுமையாக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அங்கே மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்கள் தங்கள் விடுதலையை நோக்கி முன்னேறும்போதுதான் பிற தேசிய இனங்களிலும் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படவும் இந்திய அரசை தூக்கியெறியவும் முடியும். ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் விடுதலையில்தான் தனிநாடு அடைவதில்தான் ஒடுக்கும் தேசிய இனத்தின் வெற்றி அமையும். “சுயநிர்ண உரிமை” என்கிற பெயரில் தனிநாடு விடுதலைப் போராட்டங்களை மறைப்பது வல்லாளுமை மற்றும் அடிவருடிகளின் ஆளுமையைச் சரிந்து விடாமல் முட்டுக்கொடுத்து காத்து நிலை நிறுத்துவதில்தான் போய் முடியும்.

மேலும் இன்றைய இந்தியத் துணைக் கண்டத்தில் கூர்மை அடைந்து இருப்பது இனச் சிக்கல்தான். 1967ல் தொடங்கிய தெலுங்கானா உழவர் கருவிப் போராட்டம்  கடந்த 20 ஆண்டு காலம் நிகழவில்லை. இன்றைக்கு இவ் விடுதலைச் சிந்தனையை மேற்கொண்ட பிறகே அது வெளிப்படுகிறது. இலங்கையில் இந்தியக் கூலிப்படை தலையிட்டபின் அதை மேலும் தெளிவாக காணமுடிகிறது. இந்த புறநிலை உண்மைதான் உண்மையான தேசபக்தர்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் வழிகாட்டியது.
அந்த வழிகாட்டல்தான் தமிழ்நாட்டின் விடுதலைக்கு பாடுபட வேண்டும் என்றும் பிற விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் உணர வைத்தது. இதன் அடிப்படையில்தான் தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சியின் தோற்றமும் கட்சியின் தலைமையில் படை அமைக்கப்பட்டதின் நோக்கமும் அமைந்தது.

அவ்வகையில் தமிழகத்தில் தமிழ்தேச விடுதலை இயக்கத்திற்கு தலைமை ஏற்றும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழீழத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்றும் போராடியவர்களே தோழர் தமிழரசனும் அவரின் தோழர்களும் ஆவர். அவர்களைக் கண்டு இந்திய அரசும் உளவுத்துறையும் நடுநடுங்கினர். தோழர்களை கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என்று தில்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள செய்தி தாள்கள், வானொலி, தொலைக்காட்சி ஆகியன பிரச்சாரம் செய்தன. தமிழக மக்களுக்காகவும் தமிழக விடுதலைக்காகவும் போராடிய அவர்களை ஏற்காதவர்கள் காத்திருப்பதாக கூறும் சில கனவுப் புரட்சியாளர்கள் கூட இந்த தோழர்களின் செயற்பாட்டில் தில்லி ஆளும் கும்பலோடு ஆதரவாக இருந்துகொண்டு கருத்து பிரச்சாரம் செய்தது புரட்சியையே கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது. இப்படிப்பட்டவர்களையும் மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழக விடுதலைக்குத் தலைமை ஏற்ற தோழர் தமிழரசன் 1968ல் இருந்து புரட்சியைப் பற்றியும் விடுதலையைப் பற்றியும் பேசியதோடு நிற்கவில்லை. அவரும் தோழர்களும் படுகொலை செய்யப்பட்ட 1.09.87 முடிய இருபது ஆண்டு காலம் பல்வேறு போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்திய உண்மையான புரட்சியாளர் ஆவார். அவர் ஓர் உண்மையான தேசபக்தர். தேசிய நலனுக்கும் அனைத்துலக நலனுக்கும் அல்லும் பகலும் தொடர்ந்து பாடுபட்டவர்.

விடுதலை இயக்கத்தின் தொடக்கத்தில் உண்மையான தேச பக்தர்களுக்கு இப்படி நடப்பது தவிர்க்க முடியாததுதான்.
அவர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது.
அவர்களின் மரணம் தமிழக விடுதலைப் போராட்டத்திற்கு வித்தாக அமையும் என்பது மறுக்க முடியாதது.
அந்த தலைவரின் வரலாறு தமிழக மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்கிற நிலையில் தொடங்குகிறோம்

இவ் நினைவுக் குறிப்பு அடிமைத் தமிழகத்தின் விடுதலைக் குரல் (1988)ல் பிரசுரிக்கப்பட்டது.

தோழர் தமிழரசன் குறித்து புலவர் தான் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்ற சுயசரிதை நூலில் தெரிவித்திருப்பது வருமாறு,


தமிழரசன் அறிமுகம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து என்னை விழுப்புரம் அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு தோழர் அப்பு அழைத்துச் சென்றார். அங்கு தோழர் தமிழரசனை எனக்கு அறிமுகப்படுத்தினார். தோழர் தமிழரசன் மதகளிர் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர். தோழர் தமிழரசன் கோவை பொறியியற் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது“கல்லூரியை விட்டு வெளியேறுவோம் கிராமங்களுக்கு செல்வோம்” என்று சாருமசும்தாரின் வேண்டுகோளை ஏற்றுக் கல்லூரியில் இருந்து வெளியேறியவர். துடிப்பு மிக்க இளைஞர். தமிழரசன் வீட்டிற்குகூட நான் சென்றிருக்கிறேன். இதற்கு முன் அறிமுகம் இல்லை. என்னையும் தமிழரசனையும் அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என்று கூறிவிட்டு தோழர் அப்பு அங்கிருந்து சென்றுவிட்டார்.

பிறகு தோழர் தமிழரசன் என்னை நெய்வேலிக்கு அழைத்துச் சென்றார். அங்கு கேரளாவைச் சேர்ந்த தோழர் சிவதாசு வீட்டில் தங்க வைத்திருந்தார். பின்பு சேத்தியாதோப்பு அருகில் உள்ள குப்பம் சிற்றூருக்கு சென்று தங்கியிருந்தோம். குப்பம் என்னுடைய தாய் பிறந்த சிற்றூர். அங்கேயே தங்கியிருந்து அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவது என்று நானும் தமிழரசனும் முடிவு செய்தோம்.

திருமுட்டம் இராஜகோபால் பிள்ளையை முதலில் அழித்தொழிப்பு செய்வது என்று முடிவு செய்தோம். 1971ம் ஆண்டு ஜனவரி 22ம் நாள் தோழர் தமிழரசன் தலைமையில் நான்கு தோழர்கள் அந்த அழித்தொழிப்பு நடவடிக்கையில் பின்வாங்கி திரும்பி வந்து விடுகின்றார்கள். இறுதியாக சென்ற இரண்டு தோழர்களில் ஒருவர் காவலுக்கு நின்று கொள்கிறார். ஒரு தோழர் மட்டும் தமிழரசனோடு செல்கிறார்.

தமிழரசனைப் பார்த்தவுடன் இராஜகோபால்பிள்ளை மயங்கி விழந்துவிடுகின்றான். இராஜகோபால்பிள்ளையைத் தோழர் தமிழரசன் ஓங்கி வெட்டிவிட்டு வந்துவிடுகின்றார். தோழர் தமிழரசன் வந்து என்னிடம் இராஜகோபால்பிள்ளை இறந்துவிட்டதாக சொன்னார்.

இராஜகோபால்பிள்ளை இறந்ததை உறுதிப்படுத்திக் கொள்ள ஒரு தோழரைச் சேத்தியாதோப்பிற்கு அனுப்பிச் செய்தியை தெரிந்துவரச் சொன்னேன். ராஜகோபால்பிள்ளைக்கு வாயில் வெட்டப்பட்டுப் பிழைத்தக் கொண்டதாகவும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்க சென்னைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அந்த தோழர் வந்து கூறினார். அதனால் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கு சாதாரண கத்தி சரியாக இருக்காது என்று முடிவு செய்தோம். பிறகு நான் தமிழரசன் மற்றொரு தோழர் மூவரும் ஜந்துபடி கூலிக்கு இரண்டு நாட்கள் நெல் அறுவடைக்குச் சென்றோம். கூலியாக கிடைத்த நெல்லை விற்று அந்தப் பணத்தில் பெரிய கத்தி (பிச்சவா) ஒன்றை தயார் செய்து தோழர் தமிழரசனிடம் கொடுத்தேன்.
அந்த நேரத்தில் நெய்வேலிப் பகுதியில் கந்துவட்டிக்காரனையோ அல்லது பெண்ணாடம் பகுதியில் பெரிய நிலவுடமையாளர் ஒருவரையோ அழித்தொழிப்பு செய்வது என்று முடிவு செய்தோம். அப்பொழுது சம்பேரி கிராமத்தைச் சேர்ந்த ஜயம்பெருமாள் என்பவன் காவல்துறைக்கு கைக்கூலியாக ஆள்காட்டி வேலை செய்து வந்தான்.

கிராமப்பகுதிகளில் வசதியுள்ள ஒரு சிலரிடம் மிரட்டிப் பணம் பறித்து வந்தான். பணம் கொடுக்க மறுக்கின்றவர்களின் வீட்டிற்கு புலவரும் தமிழரசனும் வந்து தங்குகிறார்கள் என்று காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்து விடுவான். உடனே காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் பெரும் பாதிப்புக்குள்ளாக்குவார்கள். புலவரையும் தமிழரசனையும் நான் பிடித்தக் கொடுக்கிறேன் என்று காவல்துறையினரின் வாகனத்திலேயே சுற்றிக்கொண்டிருந்தான். அதனால் கந்துவட்டிக்காரனை விடவும் கொடியவனாக இருக்கும் ஜயம்பெருமாளை முதலில் அழித்தொழிப்பது என்று முடிவு செய்தோம்.

1971ம் ஆண்டு பிப்ரவரி 22ம் நாள் தோழர் தமிழரசனுடன் மற்றொரு தோழரை அழித்தொழிப்பு செய்ய அனுப்பி வைத்தேன். ஜயம்பெருமாள் தற்காப்பிற்காக எப்பொழுதும் கையில் தடி வைத்திருப்பான். அன்று இரவு நேரத்தில் ஜயம்பெருமாள் வாள் பட்டறையில் இருந்து சம்பேரி நோக்கிச் சென்றதும் ஜயம்பெருமாள் சந்தேகப்பட்டு தோழர் தமிழரசனையும் அவருடன் சென்ற தோழரையும்  மிரட்டியுள்ளான். ஆனால் தோழர் தமிழரசன் வைத்திருந்த பெரிய கத்தியால் ஜயம்பெருமாளின் வயிற்றில் குத்திவிட்டார். ஜயம்பெருமாள் குத்தப்பட்ட செய்தி காவல்துறைக்கு தெரிந்துவிட்டது. காவல்துறையினர் வரும்பொழுது ஜயம்பெருமாள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். காவல்துறையினர் நினைத்திருந்தால் ஜயம்பெருமாளைக் காப்பாற்றியிருக்கலாம். எங்கள் குடும்பத்தினரை வழக்கில் சேர்த்து பழி வாங்க வேண்டும் என்பதால் அவனை காவல்துறையினர் காப்பாற்றவில்லை.

முதல் அழித்தொழிப்பு நடவடிக்கையில் திருமுட்டம் இராஜகோபால்பிள்ளை தப்பியதிலிருந்தே அடுத்த அழித்தொழிப்பு செயலில் தோல்வி எற்படக்கூடாது என்பதில் தோழர் தமிழரசன் கவனமாக இருந்தார். ஜயம்பெருமாள் அழித்தொழிப்பு செயலில் இறந்த செய்தியை அடுத்த நாள் பத்திரிகைகள் பெரிய அளவில் செய்தியாக வெளியிட்டிருந்தன. தோழர் தமிழரசன் அந்தப் பத்திரிகையை கையில் எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் காட்டினார்.

தமிழரசன் சிறைக்கு வருகை

தோழர் தமிழரசனை அரியலூர் பேருந்து நிலையத்தில் கைது செய்து திருச்சி நடுவண் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தார்கள். ஏற்கனவே சிறையில் ஆயுள் தண்டனை பெற்ற நக்சல்பாரி தோழர்கள் தர்மபுரி இராதாகிருட்டிணன், மனிராஜ், திருக்கோவிலூர் இராமகிருட்டிணன் ஆகியவர்களும் எங்களுடன் சிறையில் இருந்தார்கள்.
தோழர் தமிழரசன் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததால் சிறையில் அவருக்கு கட்டில் நாற்காலி மேசையெல்லாம் கொடுத்தார்கள். அவற்றையெல்லாம் எனக்கு கொடுத்துவிட்டுத் தமிழரசன் தரையில் படுத்துக் கொள்வார். தோழர் தமிழரசன் கைதாகிச் சிறைக்கு வந்ததில் இருந்தே சிறையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்தி வந்தார்.

நான் நான்கு ஆண்டுகளாகத் திருச்சி நடுவண் சிறையில் இருந்ததால் சிறைக் காவலர்களுக்கு என்மீது பற்றுதல் இருந்தது. நான் ஒரு காவலரிடம் இரும்புக்கம்பி அறுக்கும் தகடு (பிளேடு) வேண்டும் என்று கேட்டேன். அந்த காவலர் மறுக்காமல் இரும்புக்கம்பி அறுக்கும் தகடு (பிளேடு) வாங்கி வந்து கொடுத்தார். என்னுடைய கட்டிலுக்குள் அந்த தகட்டை மறைத்து வைத்து இருந்தேன். அப்பொழுது எனக்கு ஜந்து வாரப் பரோல் கிடைத்தது. நான் பரோலில் வெளியே வந்தவுடன் தலைமறைவாக வேண்டும் என்று கட்சியிலிருந்து எனக்கு தகவல் கொடுத்தார்கள். நாங்கள் ஜந்துபேரும் சிறையில் இருந்து தப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று நான் திரும்பவும் கட்சி தலைமைக்கு தெரிவித்துவிட்டேன். ஜந்துவாரப் பரோல் முடிந்தவுடன் மீண்டும் நான் சிறைக்குச் சென்றுவிட்டேன்.

தப்பிக்க முயற்சி

அப்பொழுது சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி என்று திட்டமிட்டோம். ஒரு தோழர் தீக்குச்சி மருந்துகளால் தற்காப்புக்காக வெடிகுண்டு தயார் செய்யலாம் என்று சொன்னார். அதனால் நான் தீப்பெட்டி வாங்கும் முயற்சியில் தீவிரம் காட்டினேன். காவலர் ஒருவரின் உதவியால் தீப்பெட்டிகளை வாங்கினேன். தீக்குச்சியில் இருந்த மருந்தைச் சேகரித்து எனது படுக்கைக்கு அடியில் வைத்துக் கொண்டேன்.
ஒருநாள் பகல் 11 மணிக்குச் சிறை அதிகாரிகள் கும்பலாக எங்கள் அறைக்கு வந்தார்கள். எங்கள் அறைகளில் சோதனை செய்தார்கள். அப்பொழுது எனது படுக்கையைப் புரட்டியவுடன் மருந்தும் தீக்குச்சியும் வைத்திருப்பதைக் கண்டு பிடித்துவிட்டார்கள். எங்களை அடைத்து வைத்திருந்த கொட்டடிகளைத் திறக்க மாற்றுச்சாவி தயாரிக்கத் திட்டமிட்டோம். அப்பொழுது காவலர் ஒருவரிடம் எங்கள் திட்டத்தைச் சொன்னேன். அந்த காவலர் சிறிதும் மறுக்காமல் அவரிடமிருந்த சாவிக் கொத்தை எடுத்து என்னிடம் கொடுத்தார். அதைவைத்து மாற்றுச் சாவிகளையும் தயார் செய்து மறைத்து வைத்திருந்தோம். அவற்றை அவர்கள் கவனிக்கவில்லை. பிறகு சாவிகளையும் கத்திகளையும் எடுத்து மறைத்து வைத்துவிட்டேன்.
அதையடுத்து எங்களைச் சிறையில் தனித்தனிக் கொட்டடிகளில் பிரித்து வைத்தவிட்டார்கள்.

மறுநாள் சிறைக் கண்காணிப்பாளர் வாசுதேவன் வந்து தீக்குச்சி மருந்து எதற்காக வைத்திருந்தீர்கள் என்று என்னிடம் கேட்டார். மூட்டுவலிக்கு தீக்குச்சி மருந்து தடவினால் வலி போய்விடும் என்று சொன்னார்கள். எனக்கு மூட்டுவலி இருப்பதால் வலி வரும்போது தடவலாம் என்று வைத்திருந்தேன் என்று சொன்னேன். நான் சொன்னதைச் சிறைக் கண்காணிப்பாளர்ரும் நம்பி விட்டார்.

அடுத்து ஒரு வாரம் கடந்தபின் சிறைக் கண்காணிப்பாளர் என்னை சந்தித்தார். என்னை மட்டும் அறையில் தனியாக வைத்திருக்கின்றீர்கள் எனக்கு துணையாக ஒரு தோழரை அனுப்பி வையுங்கள் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் கேட்டேன். என்னுடைய வேண்டுகோளை ஏற்று தோழர் தமிழரசனை என் அறைக்கு அனுப்பி வைத்தார்.

சிறையிலிருந்து தப்பிக்கும் நோக்குடன் வெடிகுண்டுகள் தயார் செய்ய தீப்பெட்டிகள் வாங்கும் முயற்சியை தொடங்கினோம். தீக்குச்சியிலிருந்து மருந்தை எடுத்துக்கொண்டு குச்சியை எரித்துவிட்டோம். சிறைக் கதவுகளில் இருந்த இரும்புக் கம்பிகளை ஒருபுறமாக பாதிக்குமேல் அறுத்து வைத்திருந்தோம். அருகில் இருந்த வேப்ப மரத்தில் இரண்டு நீளமான கம்புகளை ஒன்றாகக் கயிற்றால் கட்டி அதை வராண்டாவிற்கு முன்னால் இருந்த திடலில் புதைத்து வைத்துவிட்டோம். தீக்குச்சி மருந்தைக்கொண்டு சில வெடிகுண்டுகள் தயார் செய்தோம். அதை மண் பானையில் போட்டு எதிரில் இருந்த திடலில் புதைத்து வைத்துவிட்டோம்.

சிறையிலிருந்து தப்பிச் செல்ல கயிறு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டோம். அப்பொழுது தோழர்கள் கனமான கயிறு தயார் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் நான் மெல்லிய கயிறு கொண்டுதான் தப்பி செல்ல வேண்டும் என்று சொன்னேன். அப்பொழுது எங்களோடு திருச்சி நடுவண் சிறையிலிருந்த சீவலப்பேரி பாண்டி தப்பிச் செல்லும்போது மெல்லிய கயிறு கொண்டுதான் தப்பிச் சென்றார் என்பதைத் தோழர்களுக்குச் சொன்னேன். அதனால் கனமான கயிற்றைப் பயன்படுத்தினால் தப்பிக்கும் முயற்சியில் தோல்வி எற்படும் வாய்ப்புள்ளது என்று நான் சொன்னேன். தோழர்கள் எல்லோரும் ஒரே நிலையில் இருந்தார்கள். அதனால் நானும் உங்களோடு வரத் தயார் என்று சொல்லிவிட்டேன். பிறகு போர்வையின் (பெட்சீட்) நூலைக் கொண்டு கயிறு தயார் செய்து கொண்டோம்.

சிறையிலிருந்து நாங்கள் திட்டமிட்டபடி தப்பிச் செல்வதற்கான நாளும் வந்தது. இரவு சுமார் 2 மணிக்குத் தோழர் முனிராஜ் வந்து என்னுடைய அறையின் கதவில் அறுத்து வைத்திருந்த கம்பிகளை முறித்துவிட்டு அறையைத் திறந்தார். நான் வெளியே வந்து அறைக் காவலரைப் பிடித்தக் கொண்டேன். அடுத்த அறையில் தயார் செய்து வைத்திருந்த சாவியைக் கொண்டு திறந்து கொட்டடிகளிலிருந்து தோழர்கள் வெளியே வந்தார்கள்.
சுவர் ஏறிக் குதித்தோம்

அந்த காவலரை ஓர் அறையில் வைத்துப் பூட்டி வைத்துவிட்டோம். நாங்கள் கயிறு கம்பு வெடிகுண்டுகளை எடுத்துக் கொண்டு எதிர்புறத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்தோம். அப்பொழுது சிறைக் காவலர்கள் எங்களை பார்த்து விட்டார்கள். அதனால் ஊதலை (விசில்) ஊதிவிட்டார்கள். தொடர்ந்து ஊதல் ஒலி கேட்டவுடனே அபாயச் சங்கை (அலாரம்) இயக்கிவிட்டார்கள். சிறைக் காவலர்கள் எங்களைத் துரத்திக்கொண்டு பின்தொடர்ந்து ஓடி வருகின்றார்கள். எங்களிடம் இருந்த வெடிகுண்டுகளை அவர்களை நோக்கி வீசினோம். குண்டு வெடித்ததும் காவலர்கள் அச்சப்பட்டுப் பின்வாங்கிக் கொண்டார்கள். கயிற்றை மதில் சுவற்றில் மாட்டும்போது கம்பு வளைந்து கொண்டது. பிறகுசரி செய்து தீவிர முயற்சி செய்து கயிற்றை சுவரில் மாட்டி ஒவ்வொருவராக மதில் சுவரின் மீது ஏறிக்கொண்டோம். அப்பொழுது சுவருக்கு மேலிருந்த மின் கம்பிகளில் மின்சாரத்தை செலுத்தி விட்டார்கள். தோழர் தமிழரசன் கொட்டடியிலிருந்து வரும்போதே மின் இணைப்பைத் துண்டிக்க இரு கம்பளிப் போர்வைகளை தயாராக எடுத்து வைத்திருந்தார். தோழர் தமிழரசன் கம்பளிப் போர்வையைக்கொண்டு மின் இணைப்பை துண்டிப்பதும் அவர்கள் மின் இணைப்பை கொடுப்பதுமாக நீண்ட நேரப் போராட்டம் நடந்தது.

பிறகு ஒவ்வொருவராக கீழே இறங்கித் தீக்குச்சி மருந்தால் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகளை வீசியடிக்கச் செய்து காவலர்களை அச்சுறுத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தோம். அந்நேரத்தில் காவலர்கள் எங்களை சுற்றி வளைத்து விட்டார்கள். அப்பொழுது நான் வெடிகுண்டை வீசுங்கள் என்று  சத்தம் போடுகின்றேன். தோழர் முனிராஜ் வெடிகுண்டு தீர்ந்து விட்டது என்று சொல்லிவிட்டார். தோழர் முனிராஜ் சொன்னது காவலர்களின் காதுகளுக்கு கேட்டுவிட்டது. எங்களிடம் வெடிகுண்டுகள் இல்லை. ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதைத் தெரிந்துகொண்ட காவலர்கள் எங்கள் நால்வரையும் பிடித்து விட்டார்கள்.

காவலர்கள் எங்களைக் கடுமையாகக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினார்கள். தோழர் தமிழரசனுக்கு தலையில் பலமாக அடிபட்டதால் நினைவிழந்துவிட்டார். தமிழரசனுக்கு மட்டும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். ஒருநாள் மட்டும் திருச்சி மருத்தவமனையில் சிகிச்சை அளித்துவிட்டு எங்களை காயங்களுடன் மீண்டும் சிறைக்கு கொண்டு சென்று விட்டார்கள்.
தோழர் முனிராஜ் மட்டும் தப்பித்து விட்டார். தப்பி ஓடி அருகில் உள்ள ஒரு குப்பைக் குழியில் காய்ந்த சருகுகளை அள்ளி மேலே போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டார். அன்று மாலையில் விளையாடப் போன குழந்தைகள் குப்பைக் குழியின் மீது சிறுநீர் கழித்துள்ளார்கள். அப்பொழுது தோழர் முனிராஜ் குப்பைக் குழியிலிருந்து நெளிந்திருக்கிறார். அதனால் காய்ந்த சருகுகள் அசைய குப்பைக் குழியில் எதோ இருக்கின்றது என்று மக்களும் காவலர்களும் வந்து முனிராஜைப் பிடித்து விடுகின்றார்கள். தோழர் முனிராஜைக் கைது செய்து அன்று மாலையே சிறைக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

நாங்கள் சிறையிலிருந்து தப்பித்த நாளில் சிறைக் கண்காணிப்பாளளர் வாசுதேவன் சிறைக் காவலர்களின் விளையாட்டு விழாவிற்காக கோவை சென்றிருந்தார். கண்காணிப்பாளர் வாசுதேவன் திருச்சி வந்தவுடன் சிறைக்கு வந்து என்னைப் பாhத்தார். நாங்கள் சிறையில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். சிறையில் இருந்து தப்பி போவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது. அதற்காக எங்களை தாக்குவதற்கும் கடுமையாக அடித்து சித்திரவதை செய்வதற்கும் சட்டப்படிகூட உங்களுக்கு அதிகாரம் இல்லை. தேவையானால் சட்டப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கு போட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னேன்.
நான் இருந்திருந்தால் உங்களை அடிக்க அனுமதித்திருக்கமாட்டேன். உங்களுக்கு சட்டப்படி என்ன உதவி செய்ய முடியுமோ அதை நான் செய்கிறேன் என்று கண்காணிப்பாளர் வாசுதேவன் சொன்னார்.
முதலில் எங்களை வெளி மருத்தமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். எங்கள் உறவினர்களுக்கு தகவல் அனுப்பி வைத்து அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சிறைக் கண்காணிப்பாளரிடம் வலியுறுத்தினேன். உடனே எங்களை வெளி மருத்துவமனையில் சேர்த்தார்கள். எங்கள் குடும்பங்களுக்கு செய்தி அனுப்பி வைத்தார்கள்.
என் துணைவியார் வாலாம்பாளும் மகள் கண்ணகியும் வந்து பார்ப்பதற்குச் சிறைக் கண்காணிப்பாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு வந்தார்கள். அப்பொழுது மருத்துவமனையில் எங்களுக்குக் காவலுக்கு இருந்த காவலர்கள் எங்களைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

பிறகு என் துணைவியார் வாலாம்பாள் இந்தியக்கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் தோழர் கல்யாணசுந்தரம் அவர்களைச் சந்தித்து நிலைமையைச் சொல்லியுள்ளார். தோழர் கல்யாணசுந்தரம் முயற்சியால் மூன்று நாட்களுக்குப் பிறகு துணைவியாரும் மகளும் என்னை வந்து சந்தித்தனர்.
அப்பொழுது சிறைத்துறை டி.ஜ.ஜி வந்து “உங்களுக்கு இந்த அளவிற்கு வாசுதேவனால்தான் உதவியிருக்க முடியும்” என்று என்னைக் கேட்டார். நீங்கள் சொல்வது முற்றிலும் தவறானது என்று நான் மறுத்து விட்டேன்.

வேலூர் சிறை

நாங்கள் மருத்துவமனையில் இருந்து வந்தவுடனே தோழர் தமிழரசனைக் கோவை சிறைக்கும் என்னை வேலூர் நடுவண் சிறைக்கும் மாறுதல் செய்து அனுப்பிவிட்டார்கள். வேலூர் சிறையில் தூக்குத் தண்டனை கைதிகளை அடைக்கும் ஒன்பது கொட்டடிகளை ஒதுக்கி அந்த தாழ்வாரத்தில் கனமான கம்பிகளால் வேலி அடைத்து விட்டார்கள். பகல் நேரத்தில் மட்டு;ம்தான் கம்பி வேலிக்குள் தாழ்வாரத்தில் உலாவ விடுவார்கள். மாலை நேரம் ஆனதும் என்னை அறைக்குள் வைத்துப் பூட்டி விடுவார்கள்.

தமிழக விடுதலையே தீர்வு

நான் வேலூர் சிறையில் இருந்த காலத்திலேயே தமிழ்நாடு விடுதலை குறித்து தோழர்களிடையே விவாதிக்க தொடங்கிவிட்டேன். தேசிய இனப்பிரச்சனைகள் குறித்த விவாதத்தையும் தொடர்ந்து இ.க.க(மா.லெ) அமைப்புக்குள் நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால் தேசிய இனப் பிரச்சனையில் கட்சித் தலைமை கவனம் செலுத்தவில்லை. தமிழீழப் போராட்டம் எழுச்சியோடு நடந்து கொண்டிருந்த நேரம் தமிழ்நாடு விடுதலைக் கருத்தியலில் உடன்பாடு உள்ள தோழர்களோடு ஆலோசித்து தமிழீழ விடுதலையை ஆதரித்தும் தேசிய இனங்களின் விடுதலையையும் வலியுறுத்தியும் மாநாடு ஒன்றை நடத்தத் திட்டமிட்டோம்.

தேசிய விடுதலைக்கான பெண்ணாடம் மாநாடு

1984ம் ஆண்டு மே திங்கள் 15 16 நாள்களில் பெண்ணாடத்தில் ஈழத் தமிழர்களுக்குத் தனிநாடு”தேசிய இனங்களின் விடுதலை” மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தேன். முதல் நாள் என் தலைமையில் ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு என்ற தலைப்பிலும் இரண்டாவது நாள் தோழர் தர்மலிங்கம் தலைமையில் தேசிய இனங்களின் விடுதலை மாநாடு என்ற தலைப்பிலும் நடந்தது. மாநாட்டில் அறிஞர்கள் பெருஞ்சித்திரனார், குணா, வே.ஆனைமுத்து, கே.என்.ராமச்சந்திரன், இப்ராகிம், எஸ்.என்.நாகராசன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மாநாட்டில் தோழர் குணா அவருடைய குழவின் சார்பில் ஓர் அறிக்கையை வைக்க அனுமதிக்கவில்லை. அதனால் குணா மாநாட்டில் கலந்து கொள்ளாமல் வெளியேறிவிட்டார். அந்த மாநாட்டில் இ.க.க (மா.லெ) மக்கள் யுத்தக்குழு தோழர்கள் தேசிய இனப் பிரச்சனையில் மார்க்சிய லெனினிய கோட்பாடுகளுக்கு எதிரான கருத்துகளை துண்டறிக்கையாக அச்சிட்டு வந்து வெளியிட்டார்கள். தேசிய இனப் பிரச்சனையில் கட்சியுடன் மாறுபட்ட கருத்துக் கொண்டிருந்த எங்களை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்தார்கள்.

மா.இ.லெ கட்சியிலிருந்து நீக்கம்

எங்களை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதால் நாங்கள் ஒரு கிராமத்தில் கூடி கட்சி அமைப்பு பற்றி விவாதிக்கின்றோம். அப்பொழுது இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மா.லெ) தமிழ்நாடு என்ற பெயரில் இயங்குவது என்று தோழர்கள் கருத்து தெரிவித்தார்கள். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா.லெ) என்ற பெயரில் இயங்கலாம் என்று நான் கருத்து சொன்னேன். இறுதியாக தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி (மா.லெ) என்ற பெயரில் செயல்பட முடிவு செய்தோம்.

மீன்சுருட்டி சாதி ஒழிப்புக் கருத்தரங்கம்

தென்னார்க்காடு மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சாதி ஒழிப்பு மாநாடு என் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தோழர் தமிழரசன் சாதி ஒழிப்பையும் தமிழக விடுதலையையும் வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வைத்தார். அந்த மாநாட்டில் பாவலேறு பெருஞ்சித்திரனார்  கே.என்.ராமச்சந்திரன், ஆர்.கே.சுவாமிநாதன், அரங்ககுணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

ஓராண்டு கழித்து ஆதரவாளர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தோம். தோழர் தமிழரசனும் நானும் ஒன்றாக சாப்பிட்டுவிட்டு புறப்படும்பொழுது தஞ்சை குடமுருட்டிப் பாலத்தில் குண்டு வைத்த வழக்கில் உங்களை காவல் துறையினர் கடுமையாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறினேன்.

தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி

தமிழ்நாடு விடுதலைக்கான ஒரு கூட்டணி ஒன்றை உருவாக்குகிற முயற்சியின் கீழ் பெரிய முயற்சி எடுத்துக் கூட்டதைக் கூட்டினோம். தமிழ்நாடு பொதுவுடமைக்கட்சி (மா.லெ), இ.பொ.க(மா.லெ), இ.பொ.க (மா.லெ)மைய சீரமைப்புகுழு, உலகத்தமிழின முன்னேற்றக்கழகம், பெரியார்சமவுரிமைக் கழகம், அறிவியக்கப் பேரவை ஆகிய ஜந்து இயக்கங்களும் இணைந்து தமிழக மக்கள் விடுதலைக்கூட்டணி எனும் பெயரில் கூட்டணி உருவாக்கப்பட்டது.

நீண்ட அறிக்கை ஒன்று உருவாக்கி வெளியிடப்பட்டது. பெருஞ்சித்திரனாh,; சாலையார்,ஆனைமுத்து ஆகியோர் பெரிய அளவில் துணை நின்று செயல்பட்டனர். இருந்தாலும் மைய சீரமைப்புக் குழுவினர் அரசியலோடு உடன்பட முடியாமல் தொடர்ந்து விவாதம் முடிவடையாமல் முன்னணிச் செயல்கள் நின்றுபோயின.

தோழர் தமிழரசன் படுகொலை

பொன்பரப்பி தமிழரசன் படித்த ஊர் என்பதாலும் , அங்குள்ள மக்களுக்கு தான் அறிமுகம் என்பதாலும் அது சிற்றுர் என்பதாலும் , அருகில் பெரிய நகரங்கள் எதுவுமில்லாததால் காவல்துறையின் தாக்குதல் உடனடியாக வராது என்றும் பல கோணங்களில் சாதக பாதகங்களைச் சிந்தித்து ஒருநாள் குறிப்பிட்டு, அந்த நாளில் தனது நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிடுகிறார். ஆனால் அவர் கவனிக்க தவறியது தனது திட்டம் முழுவதையும் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்றும் இந்த நடவடிக்கை பற்றி அறிந்த அனைவரும் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்கள் என்றும் நம்பியதே ஆகும்.

தனது ரகசியங்கள் காவல்துறைக்குச் செல்கின்றன என்பதையும் அந்த ரகசியம் தன் நடவடிக்கைகளை முற்றிலும் அறிந்த ஒருவர் மூலம் செல்கின்றன என்பதையும் அறியாத தமிழரசன் தான் திட்டமிட்டபடி திட்டமிட்ட நாளில் பொன்பரப்பி வங்கி நடவடிக்கைகளில் இறங்குகின்றார். இந்த வங்கி நடவடிக்கையில் 5 பேர் ஈடுபடுகின்றார்கள். தமிழரசன் கையில் மெசின்கன் துப்பாக்கி இருந்தது. வங்கி உள்ளே சென்றதும் நேராக காசாளர் இருக்குமிடம் சென்றிருக்கிறார்கள். இவர்கள் அவரிடமிருந்து பணத்தைக் கைப்பற்ற முயலும்போது அவர் எதிர்ப்பு தெரிவிக்க காசாளரைச் சுட்டு விடுகிறார்கள். துப்பாக்கி சத்தமும் காசாளர் இறப்பும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட சிற்றூர் மக்கள் அணிதிரண்டு விடுகிறார்கள்.

வங்கியில் இருப்பது புரட்சியாளர்கள் எனத் தெரியாத மக்கள் யாரோ கொள்ளையர்கள் என நினைத்து ஆவேசத்துடன் இவர்களைத் தாக்க வருகிறார்கள். அப்போதுதான் தாங்கள் கொள்ளையர்கள் அல்ல என்பதையும் தான்தான் தமிழரசன் என்றும் நக்சல்பாரிகள் தேசபக்தர்கள் எனவே எங்களை தாக்க வேண்டாம் என்றும் முழக்கமிட்டிருக்கிறார்கள். இதனால் மக்கள் தரப்பில் இருந்து தாக்குதல் குறைந்துவிட்டது. அயினும் இந்தத் தகவல்கள் முன்கூட்டியே உளவுத்துறைக்கு தெரிந்து விட்டதால் அவர்கள் பொலிசாரை சிவில் உடையில் வரவழைத்தவிட்டனர். அந்தப் பகுதியில் பொன்பரப்பி சந்தை என்பது மிகப் பெரிய சந்தையாகும். அன்று சுற்றுவட்டார சிற்றூர்களில் இருந்து பல்லாயிரணக் கணக்கில் மக்கள் கூடுவார்கள். இதுவும் காவல்துறைக்குச் சாதகமாக இருந்ததால் அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து விட்டார்கள். எனவே பொதுமக்கள் தாக்குதலைக்; குறைத்தபோதிலும் சிவில் உடையில் இருந்த காவலர்கள் தாக்குதலை நிறுத்தாமல் கற்களாலும் கம்புகளாலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள். இதனால் மூன்று புரட்சியாளர்கள் தாக்குதலின் வேகம் தாங்க முடியாமல் மயக்கமடைந்து வீழ்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழரசன் தன் கையில் இருந்த பணக் கட்டுகளை வாரி இறைத்துவிட்டு எங்களின் நோக்கம் கொள்ளை அல்ல லட்சியம் என்று கூறி, கையில் மெசின்கன் துப்பாக்கி இருந்தும் அதைப் பயன்படுத்தாதற்கு காரணம் எங்களுக்கு விரோதிகள் மக்கள் அல்ல, எனவே இந்தத் துப்பாக்கியைக்கூட பயன்படுத்தாமல் இருக்கிறேன் என முழக்கமிட்டிருக்கிறார். இத்துடன் கீழே விழுந்து கிடக்கும் தம் தோழர்களுக்கு தண்ணீர் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். சிற்றூர் மக்கள் தண்ணீர் கொடுக்க ஓடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களைச் சிவில் உடையில் இருந்த காவலர்கள் தடுத்துவிட்டு எஞ்சி நின்ற தமிழரசன் மீதும் மக்கள் என்ற போர்வையில் கொடும் தாக்குதல்களைத் தொடுத்து அவரையும் வீழ்த்தி விடுகின்றார்கள்.

இவர்கள் மயக்கமடைந்து கீழே விழுந்த பின்னர் காவல்துறையினர் வெறித்தனமாக அங்கிருந்த டயர் வண்டிகளை புரட்சியாளர்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள். மூவர் தாக்குதலில் கடுமை தாளாமல் அந்த இடத்திலேயே இறந்தவிட எஞ்சிய இருவரையும் காவல்துறை வேனில் ஏற்றிச் செல்லும்போதே கொன்றிருக்கிறார்கள். மறுநாள் ஜந்து புரட்சியாளர்களின் வீடுகளுக்கும் தகவல் அனுப்பப்பட்டு அவர்களின் பெற்றோர் உறவினர்ளிடம் புரட்சியாளர்களின் உடல்களை ஒப்படைக்க காவல்துறை எற்பாடு செய்தனர். அங்கே நடந்த காட்சிகள் என் எக்கு மனத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டது.

ஜந்து புரட்சியாளர்களும் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருந்ததின் விளைவு அனைவரது உடலும் முகமும் சிதைந்து உருவங்களே கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு மிக மிக மோசமாக இருந்தது. தமிழரசனின் தாயாரோ “இது என் மகனே அல்ல. அவன் உருவமே வேறு. அவன் வீரன். கோழைகளின் தாக்குதலில் அவன் இறந்திருக்க மாட்டான். அவன் எங்கோ ஓரிடத்தில் மக்களோடு மக்களாக தன் பணியை செய்து கொண்டடிருப்பான்” எனக்கூறி உடலைப் பெற முதலில் மறுத்துவிட்டார். ஆயினும் என் வற்புறுத்தலுக்கு பின்னர் அவர் உடலைப் பெற சம்மதித்தார். ஆயினும் அவர் இதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுநாள் தமிழரசனுக்கு இறுதி வணக்கம் செலுத்திவிட்டுத்தான் நான் என் சிற்றூருக்கு சென்றேன். அதேபோல் ஒவ்வொரு புரட்சியாளரின் இறுதிச் சடங்குகளை நடத்த ஏற்பாடு செய்தேன். இதில் தோழர் தர்மலிங்கத்தின் உடலை அவரின் உறவினர்கள் பெற வராததால் பொலிசே அடக்கம் செய்துவிட்டனர்.

புரட்சிகர போர்ப் பயணத்தில் ஒவ்வொரு புரட்சியாளனும் மரணத்தை சந்தித்தே ஆகவேண்டும் என்றாலும்கூட தோழர் தமிழரசன் மரணம் என்னைக் கடுமையாகவே பாதித்தது. என் குடும்பங்கள் தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டபோதுங்கூட கலங்காத நான் தமிழசனின் பூதவுடலைப் பார்த்துக் கதறினேன். கண்ணீர் விட்டேன். ஆம்! தமிழரசன் போன்ற ஆற்றல் மிக்க தோழனின் இழப்பு தமிழக புரட்சி வரலாற்றில் ஒரு பின்னடைவைச் சந்தித்து விட்டது. அவரது தன்னலமற்ற சிந்தனையும் செயல் வேகமும் மற்றவர்களுக்கு முன்னோடியாக அமையும் என்பது திண்ணம். அவரின் தவறான திட்டம்தான் இந்த மாபெரும் உயிர் இழப்புக்கு காரணம் என்றாலும் அவரின் கொள்கை மகத்தானது. உயர்ந்தது.

புலவர் கலியபெருமாள்
“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” நூலிலிருந்து

No comments:

Post a Comment