Wednesday, May 16, 2018

வைகோ தமிழர் இல்லை என்றால் அப்புறம் யாரை தமிழர் என்பது? சுபவீ கேள்வி

•ஈழத் தமிழருக்காக இரண்டரை வருடம் சிறை சென்ற வைகோ தமிழர் இல்லை என்றால் அப்புறம் யாரை தமிழர் என்பது? சுபவீ கேள்வி
•லண்டனில் எதிரொலித்த திராவிட, தமிழ்தேசிய மோதல்!
லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் நேற்று (12.05.18) மாலை 6 மணியளவில் சுப வீரபாண்டியன் அவர்களின் உரையாடல் நடைபெற்றது.
முதலில் “அரசியல் அறம்” பற்றி ஒரு மணி நேரம் சுபவீ அவர்கள் உரையாற்றினார். பின்னர் வந்திருந்தவர்களின் கேள்விகளுக்கு ஒரு மணி நேரம் பதில் அளித்தார்.
சிறப்பான உரையாடல். இன்னும் கொஞ்ச நேரம் அதிகமாக உரையாடியிருக்கக்கூடாதா என நினைக்கத்தூண்டிய உரையாடல்.
அதுமட்டுமன்றி முதன் முதலாக ஈழத் தமிழரும் தமிழக தமிழரும் ஒன்று சேர்ந்து அதுவும் பெரியாரிய அம்பேத்காரிய கருத்துகளை உரையாடியுள்ளார்கள்.
மண்டபம் நிறைந்த கூட்டம். பலருக்கு உட்கார இருக்கைகள் கிடைக்கவில்லை. இருப்பினும் கூட்டம் முடியும்வரை பொறுமையாக நின்றுகொண்டே உரையாடலை செவிமடுத்தது இதுவரை காணாதது.
இந்த கூட்டம் நிச்சயம் பெரியார் அம்பேத்கார் குழுவினருக்கு; இனி இவ்வாறான பல உரையாடல்களை நடத்த வேண்டும் என்ற உற்சாகத்தை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்த கூட்டம் தெரிவிக்கும் ஒரு முக்கிய செய்தி என்னவெனில் தமிழக தமிழரும் ஈழத் தமிழரும் இனி ஒருமித்து செயற்படுவதற்கான ஆரம்பத்தை கொடுத்துள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரம் ஆரம்பித்திருக்கும் இவ் வேளையில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுகிறார்கள் என்ற செய்தி நிச்சயம் எதிரிக்கு கலக்கத்தைக் கொடுக்கும்.
பெரியாரிய கருத்துகiளை பரப்பிவரும் சுபவீ அவர்கள் நிபந்தனை இன்றி திமுக வை அதிரிப்பதும் அது குறித்து கேட்டபோது “அது என் விருப்பம், அதைவிட வேறு எதை ஆதரிக்க முடியும்?” என்று அவர் பதில் கூறியதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அதேவேளை, தோழர் தியாகுவினுடான தொலைபேசி உரையாடலின்போது
திமுக குறித்து எதிரான கருத்துகளை சுபவீ அவர்கள் கூறியதை தான் அருகில் இருந்து கேட்டதாக கவிஞர் தாமரை கூறியுள்ளார்.
ஏதோவொரு நிர்ப்பந்தம் காரணமாக சுபவீ அவர்கள் திமுகவை ஆதரித்து வருவதாகவே தாமரையின் கூற்றில் இருந்து உணர முடிகிறது.
சுபவீ அவர்கள் விடுதலைக்குயில்கள் என்னும் ஆயுதபோராட்ட அமைப்பை உருவாக்கியதாகவும் அதற்காக அதன் சில உறுப்பினர்கள் பணம் கொள்ளையடித்தபோது பொலிசாரிடம் பிடிபட்டதாகவும் அதில் தான் கைது செய்யப்படுவதில் இருந்து தப்புவதற்காகவே திமுக ஆதரவை சுபவீ மேற்கொண்டார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஆனாலும், பிரபாகரின் வயதான தாயார் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது கலைஞர் அரசால் திருப்பியனுப்பியதைக்கூட சுபவீ அவர்கள் நியாயப்படுத்தியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும், கலைஞரால் ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் இன்றும் இருக்கின்ற நிலையில் அதில் அப்பாவி ஈழத்தமிழ் அகதிகள் அடைபட்டுக்கொண்டிருக்கிற நிலையில் சுபவீ அவர்களால் எப்படி திமுக வை நிபந்னையின்றி ஆதரிக்க முடிகிறது என்று தெரியவில்லை.
எனினும், “ஈழத் தமிழர்களை ஆதரித்தமைக்காக இரண்டரை வருடம் சிறை இருந்தவர் வைகோ. அவர் தமிழன் இல்லை என்றால் தமிழரின் நன்றியுணர்ச்சியை எவ்வாறு அழைப்புது?” என்ற அவரின் கேள்வி சிந்திக்க தூண்டுகிறது.
அதுமட்டுமன்றி, நெருக்கடியான காலகட்டத்தில் வைகோ, கௌத்தூர் மணி, கோவை ராமகிருஸ்னன் போன்றவர்களே புலிகளை ஆதரித்தார்கள். அவர்களை தமிழன் என்றுதானே தலைவர் பிரபாகரனும் உறவு வைத்திருந்தார்” என்றும் சுபவீ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
தமிழ்நாடு தனிநாடு ஆக வேண்டும் என்று விரும்புவர்கள் தாராளமாக வந்து அதற்காக செயற்படலாம் என சுபவீ அவர் தெரிவித்திருந்தாலும் திராவிடம் தமிழ்தேசியத்திற்கு எதிரானதா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்த தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது.
ஆனாலும் சுபவீ அவர்களின் நேற்றைய கூட்டம் லண்டனிலும் திராவிடம் மற்றும் தமிழ்தேசியம் குறித்த உரையாடலை ஆரம்பித்து விட்டது என்றே கூறவேண்டும்.

No comments:

Post a Comment