Saturday, May 26, 2018

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்

கடவுள் முருகனும் தமிழ் பக்தனும்
முள்ளவாய்க்கால் படுகொலைகளும்
பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா?
முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா!
முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது கெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்?
பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு யார்தான் இருக்கிறார்கள்? “இயேசு சீக்கிரம் வருகிறார்” என்று கொஞ்சப் பேர் சொல்லித் திரியிறாங்க. அப்ப அவங்களிட்ட கேட்டுப் பார்க்கட்டுமா?
முருகன்- நவாலியில் அவரது தேவாலயத்தின் மீதே குண்டு போட்ட போது அவர் வந்தாரா? அல்லது அவரது பங்கு தந்தை கருணாகரன் அடிகளார் கிளைமோர் குண்டில் கொல்லப்பட்டபோது வந்தாரா? அல்லது சரணடைந்த வண.பிதாக்களையாவது கண்டு பிடித்துக் கொடுத்துள்ளாரா?
பக்தன்- இல்லை முருகா! அவர் இன்னும் வரவில்லைதான்.
முருகன்- அவர் மட்டுமல்ல இந்த ஏடறிந்த 2000 வருடத்தில் யாராவது ஒரு கடவுளாவது வந்திருக்கிறாரா? ஏன் எந்தக் கடவுளும் இப்ப வருவதில்லை என்று எப்பவாவது சிந்தித்திருக்கிறீர்களா?
பக்தன்- ஆமாம் ஆமாம் முருகா! அப்ப கடவுள் மதம் எல்லாம் பொய்யா?
முருகன்- “உழைத்து உழைத்து உருக்குலைந்துபோன மக்களை மேலெழும்பவிடாமல் அழுத்திவைக்கும் ஆபத்தான ஆயுதங்களே மதமும் கடவுளும்” என்று தோழர் லெனின் சொல்லியிருப்பதை நீ அறியவில்லையா?
பக்தன்- என்ன முருகா நீயும் கம்யுனிஸ்ட்; ஆகிவிட்டாயா?
முருகன்- ஹா ஹா ஹா! சரி இதை அப்புறம் பேசுவோம். இப்ப உன் பிரச்சனையைப் பார்ப்பம்.
பக்தன்- ஆமாம் முருகா! எம் இனம் விடுதலை பெற வழிகாட்டு முருகா.
முருகன்- உன் மூதாதையர் 100 வருடம் ஆண்ட போர்த்துக்கேயரை எப்படி விரட்டினார்கள்? 100 வருடம் ஆண்ட ஒல்லாந்தரை எப்படி விரட்டினார்கள்? 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயரை எப்படி விரட்டினார்கள்?
பக்தன்- எப்படி முருகா?
முருகன்- அப்போதும் நான் நல்லுர் கோவிலில் இருந்தேன். ஆனால் அவர்கள் உன்னைப்போல் வந்து என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கவில்லை. அவர்கள் நம்பிக்கையுடன் போராடி விரட்டியடித்தார்கள்.
பக்தன்- 150 வருடம் ஆண்ட ஆங்கிலேயர்களை விரட்டியடித்த எம்மால் 60 வருடம் ஆளும் இலங்கை அரசை விரட்டியடிக்க முடியவில்லையே. அது ஏன் முருகா!
முருகன்- அன்று, ஆங்கிலேயர் நல்லாட்சி செய்வதாக கூறுவதற்கு சம்பந்தர் சுமந்திரன்கள் உங்கள் மூதாதையர் மத்தியில் இருக்கவில்லை.
பக்தன்- இருந்தாலும், ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதிகள் என்று சம்பந்தர் அய்யா கூறுவது நியாயம்தானே?
முருகன்- அப்படியென்றால் உலகின் முதலாவது பயங்கரவாதி நான்தானே? நான் அகிம்சை வழியிலா சூரனை அழித்தேன்? வேலாயுதம் ஏந்தி போர் செய்துதானே சூரனை அழித்தேன்
பக்தன்- என்ன இருந்தாலும் போர் அழிவு அதிகமாக இருக்கிறது முருகா. நாங்க மீண்டும் எழும்ப முடியுமா?
முருகன்- வீழ்வது கேவலம் இல்லை. வீழ்ந்து கிடப்பதுதான் கேவலம். வீழ்வது மீண்டும் எழுவதற்கே! மிதிபடும் புழுகூட துடித்து எழுகிறது. வீரம் செறிந்த போராட்ட வரலாற்றைக் கொண்ட இனம் நீங்கள் மீண்டும் எழும்ப முடியும். அதுவும் முன்பைவிட பலமாக எழும்ப முடியும்.
பக்தன்- கேட்க நல்லாத்தான் இருக்கு முருகா! ஆனால் இது சாத்தியமா?
முருகன்- ஏன் சாத்தியமில்லை? 1971ல் அழிக்கப்பட்ட ஜே.வி.பி மீண்டும் எழவில்லையா? 1989ல் 60 ஆயிரம் இளைஞர்கள் கொல்லப்பட்ட பின்பும்கூட ஜே.வி.பி மீண்டும் எழுந்துதானே நிற்கிறது. சிங்கள் மக்களால் மீண்டும் எழுந்து நிற்க முடியுமென்றால் தமிழ் மக்களால் ஏன் முடியாது?
பக்தன்- ஆம் முருகா! இரந்து கேட்பதற்கு உரிமை ஒன்றும் பிச்சை அல்ல. அது போராடிப் பெற வேண்டியது. ஓடாத மானும் போராடாத இனமும் வாழ முடியாது.
முருகன்- போராடாத இனம் உரிமை பெறுவதில்லை. போராடிய இனம் உரிமை பெறாமல் விட்டதில்லை. தமிழ் இனம் நடத்தும் போராட்டமும் நிச்சயம் வெற்றி பெறும். வாழ்த்துகள்.

No comments:

Post a Comment