Sunday, November 20, 2016

•லண்டனில் நடைபெற்ற மலையகம் தொடர்பான நிகழ்வு!

•லண்டனில் நடைபெற்ற மலையகம் தொடர்பான நிகழ்வு!
நேற்றைய தினம் (05.11.2016) லண்டன் ஈஸ்ட்காம் நகரில் மக்கள் கலை பண்பாட்டுக் களம் சார்பில் மலையகம் தொடர்பான மூன்று நிகழ்வுகள் இடம்பெற்றன.
முதல் நிகழ்வாக, ஆவணப்பட இயக்குநர் தவமுதல்வன் தயாரித்து இயக்கிய “பச்சை ரத்தம்” ஆவணப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.
மலையக மக்களின் துயர வரலாற்றை பேசும் இவ் ஆவணப்படம் குறித்து யமுனா ராஜேந்திரன் அவர்களும் இன்னும் சிலரும் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர்.
அடுத்து, “மக்கள் கலை பண்பாண்டுக் களம்” குறித்த தோற்றம் மற்றும் அவசியம் குறித்து கோகுல ரூபன் விளக்கினார்.
இரண்டாவது நிகழ்வாக மக்கள் கலை பண்பாட்டுக் களம் வழங்கிய “பாட்டில் பறைவோம்” நிகழ்வு இடம்பெற்றது. கோகுலரூபன் மற்றும் மாசில்பாலன் ஆகியோர் இதனை தயாரித்து வழங்கியிருந்தனர்.
மூன்றாவது நிகழ்வாக மாசில்பாலன் தலைமையில் மலையக கல்வி வளர்ச்சியின் இன்றைய நிலைமை குறித்து சமூக செயற்பாட்டாளர் சிவஞானம் உரையாற்றினார்.
சிவஞானம் அவர்கள் தனது உரையில் மலையக கல்வி நிலைமை பற்றி விரிவாக கூறியதுடன் யாராவது தங்களால் இயன்ற உதவிகளை மலையக ஏழை மாணவர்களுக்கு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதையடுத்து “மலையக தமிழர் சிதைக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கும் தேசிய இனம்” என்னும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் காதர் அவர்கள் உரையாற்றினார்.
காதர் அவர்கள் தனது உரையில் எதிர்வரும் தேர்தல் தொகுதி உருவாக்கத்தின் தீமைகள் பற்றியும் மலையக கல்வி மற்றும் கருத்தடை பற்றியும் பேசினார்.
இறுதியாக பார்வையாளர்களின் கலந்துரையாடலுடன் இவ் நிகழ்வு முடிவுற்றது.
சில அவதானிப்பு –
(1) 6 மணிக்கு அரம்பமாகும் என்று அழைப்பிதழில் குறித்துவிட்டு தாமதமாக 7.30 மணிக்கு ஆரம்பிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடங்கும் என அறிவித்து அதன்படியே சரியாக 6 மணிக்கு நிகழ்வை ஆரம்பித்த ஏற்பாட்டாளர்களை உண்மையிலே பாராட்ட வேண்டும்.
(2) தமக்கு தாமே பாராட்டு கூட்டங்களை நடத்தி தமக்கு தாமே மாலை பொன்னாடைகளை அணிவித்து மகிழும் இந்த கால கட்டத்தில் மலையக மக்களின் பிரச்சனை தொடர்பாக அக்கறை கொண்டு அதற்காக ஒரு நிகழ்வை நடத்திய “மக்கள் கலை பண்பாட்டுக் களம்” பாராட்டப்பட வேண்டியதாகும்.
(3) சில நாட்களுக்கு முன்னர் மலையக மக்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் குரல் எழுப்பப்பட்டது. அதையடுத்து நேற்று லண்டனில் மலையக மக்களின் பிரச்சனைகள் குறித்து இவ் நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆரோக்கியமான இவ் நகர்வுகள் நம்பிக்கையும் மகிழ்வும் தருகின்றன.
அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

No comments:

Post a Comment