Sunday, November 20, 2016

•இலங்கையில், ஏன் சிலர் வெளியேற்றப்படுகிறார்கள்? ஏன் சிலர் வெளியேற்றப்படுவதில்லை?

•இலங்கையில்,
ஏன் சிலர் வெளியேற்றப்படுகிறார்கள்?
ஏன் சிலர் வெளியேற்றப்படுவதில்லை?
சில வருடங்களுக்கு முன்னர் தோழர் சண்முகதாசன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நூல் அறிமுக நிகழ்வு ஒன்றை ஊடகவியலாளர் தனபாலசிங்கம் அவர்கள் கொழும்பு நகரில் ஏற்பாடு செய்திருந்தார்.
அதில் உரையாற்றுவதற்காக இந்தியாவில் இருந்து அ.மாக்ஸ் என்ற மாக்சிய அறிஞர் அழைக்கப்பட்டிருந்தார்.
நிகழ்வில் அ.மாக்ஸ் அவர்கள் உரையாற்ற இருந்தபோது திடீரென அரங்கினுள் நுழைந்த இலங்கை அரச அதிகாரிகள் அவர் உரையாற்ற முடியாது என தடுத்து விட்டார்கள்.
அ.மாக்ஸ் அவர்கள் சுற்றுலா விசாவில் வந்துள்ளமையினால் கூட்டத்தில் உரையாற்ற சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று கூறியே தடுக்கப்பட்டார்.
அ.மாக்ஸ் இதற்கு முன்னர் பல தடவை இலங்கைக்கு வந்திருக்கிறார். பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அப்போதெல்லாம் தடுக்கப்படாத மாக்ஸ், தோழர் சண்முகதாசன் கூட்டத்தில் மட்டும் ஏன் தடுக்கப்பட்டாh?
தோழர் சண்முகதாசன்தான் முதன் முதலில் தமிழ் பொடியன்களை போராளிகள் என்று அழைத்தவர். அவர்தான் பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதம் ஏந்திய போராட்டத்தை போதித்தவர்.
எனவேதான் இலங்கை அரசுக்கு தோழர் சண் நினைவு கூட்டம் நடைபெறுவது சகித்துக் கொள்ள முடியவில்லை.
கடந்த வருடம் நடிகர் ஜெயபாலன் இலங்கைக்கு வந்திருந்தார். அவர் வாழ்ந்த இடம் வன்னியாகும்.
எனவே அங்கு உள்ள தனது தாயாரின் சமாதிக்கு அஞ்சலி செய்ய அவர் விரும்பினார். ஆனால் இலங்கை அரசு அதற்கு அனுமதிக்காது உடனே அவரை வெளியேற்றியது.
அவர் முறைப்படி விசா எடுத்து வந்திருந்தார். அவர் எந்த அரசியல் நிகழ்விலும் பங்கு பற்றவில்லை. இருப்பினும் அவரது தாயாருக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்காமல் அவர் வெளியேற்றப்பட்டார்.
ஆனால் கடந்த மாதம் ஊடகவியலாளர் என்று ஒரு ஜெயபாலன் இலங்கை வந்தார். அவர் தான் எழுதிய “வட்டுக் கோட்டையில் இருந்து முள்ளிவாயக்கால்” என்னும் நூலை கிளிநொச்சியில் வெளியீடு செய்தார்.
நடந்து முடிந்துவிட்ட அனைத்து அழிவுகளுக்கும் பிரபாகரனே காரணம் என்றும் எனவே இன்னொரு ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்றும் ஜெயபாலன் அந்த நிகழ்வில் அரசியல் பேசியிருந்தார்.
ஜெயபாலன் தற்போது பிரிட்டன பிரஜை. அவர் எப்படி இலங்கை வந்து அரசியல் பேச முடியும் என்று அரச அதிகாரிகள் ஏன் கேள்வி எழுப்பவில்லை. ஏன் அவருடைய நிகழ்வை தடுக்கவில்லை?
ஊடகவியலாளர் ஜெயபாலனின் நூலும் அதில் அவர் வெளியிட்டுள்ள கருத்தும் தமக்கு சார்பானதாக இருப்பதால்தானே அதிகாரிகள் தொடர்ந்தும் அனுமதியும் ஆதரவும் வழங்குகின்றனர்.
குமார் குணரட்னம் என்று ஒரு தமிழர். அவர் இலங்கையில் தங்கியிருக்க முடியாது என்று அவரை அவுஸ்ரேலியாவுக்கு நாடு கடத்த இலங்கை அரசு முனைகிறது. ( அவர் தற்போது 12 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்)
ஏனெனில் அவர் தமிழ் மக்களுக்கு சம உரிமை உண்டு என்பதோடு சிறையில் உள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறும் கேட்டதே அவர் மீதான நடவடிக்கைக்கு காரணமாகும்.
இலங்கை இந்திய அரசுகளைப் பொறுத்தவரையில் அவர்கள் தமக்கு சார்பானவர்களையும் அவர்களது எழுத்துகளையும் இனம் கண்டு ஆதரவும் உதவியும் வழங்கி வருகின்றனர்.
ஆனால் தமிழ்மக்கள்தான் தமக்கு சார்பான எழுத்து எது? எதிரிக்கு உதவும் எழுத்து எது? என்பதை இனம் காண முடியாமல் குழம்புகிறார்கள்.

No comments:

Post a Comment