Sunday, November 20, 2016

•திமுக வும் தீப்பொறி ஆறுமுகமும்

•திமுக வும் தீப்பொறி ஆறுமுகமும்
1983 ன் இறுதியில் மதுரையில் வண்டியூர் என்னும் இடத்தில் தங்கியிருந்த தம்பாபிள்ளை மகேஸ்வரன் அவர்களின் இயக்க போராளிகளை சந்திக்க சென்றிருந்தேன்.
அப்போது வழியில் ஒரு இடத்தில் திமுக கட்சியின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தீப்பொறி ஆறுமுகம் பேசிக் கொண்டிருந்தார்.
அவர் நன்றாக பேசுவார் என சிலர் கூறியிருந்தமையினால் அவர் பேச்சைக் கேட்பதற்காக நானும் வண்டியில் இருந்து இறங்கி சென்றேன்.
1983 இனக் கலவரத்தையடுத்து ஆயிரம் ஆயிரமாக அகதிகள் வள்ளத்தில் தமிழகம் நோக்கி வந்துகொண்டிருந்த காலம் அது.
அதேபோல் தமிழக மக்களும் ஈழ அகதிகள் மீது மிகவும் அனுதாபம் கொண்டிருந்த காலம் அது.
இதனால் தீப்பொறி ஆறுமுகமும் தன் பேச்சின் போது ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து அதிகம் பேசினார்.
அவர் தன் பேச்சின்போது “தமிழ்நாட்டில் இருக்கும் 5 கோடி தமிழனும் ராமேஸ்வரம் கடற்கரையில் ஒன்றாக நின்று முக்கி மூத்திரம் பெய்தாலே இலங்கையும் சிங்களவனும் மூழ்கிவிடுவாங்கள்” என்றார்.
இதைக் கேட்டதும் பலத்த கைதட்டல். விசில் சத்தம் காதைப் பிளந்தது. ஆனால் எனக்கோ அதிர்ச்சியாகிவிட்டது.
ஒரு முக்கிய கட்சியின் முக்கிய பேச்சாளருக்கே எமது பிரச்சனை புரியவில்லையே, அப்படியிருக்க தமிழக மக்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ என நினைத்தேன்.
அதற்கு பிறகு தீப்பொறி ஆறுமுகத்தின் பேச்சு மட்டுமல்ல திமுக வின் பேச்சுகளையே நான் கேட்க விரும்பியதில்லை.
திமுக வில் கலைஞருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பேராசிரியர் அன்பழகன். அவர் “ஏன் தமிழீழம் வேண்டும்” என்று 3 மணி நேரம் காஞ்சிபுரம் கூட்டத்தில் பேசினார்.
சத்தியமாக, தமிழீழம் கேட்ட அமிர்தலிங்கம்கூட ஏன் தமிழீழம் வேண்டும் என்று 3 மணி நேரம் பேசமாட்டார்.
ஆனால் அன்பழகன் பேசினார். அது புத்தகமாகவும் அச்சிடப்பட்டு திமுக நிகழ்வுகளில் விநியோகிக்கப்பட்டு வந்தது.
திமுக பதவிக்கு வந்ததும் செய்த முதல் வேலை தமிழீழத்தை கைவிட்டது மட்டுமல்ல ஏன் தமிழீழம் வேண்டும் என்று அன்பழகன் பேசிய புத்தகத்தையும் எடுத்து விட்டார்கள்.
அந்த புத்தகத்தின் பரதி பெற்றுக்கொள்ள பல காலமாக முயற்சி செய்து வருகிறேன்.
யாரிடமாவது இந்த புத்தகம் இருந்தால் எனக்கு தந்து உதவும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இங்கு வருத்தம் என்னவெனில் இத்தனை வருடங்களின் பின்பும்கூட தமிழக மக்களுக்கு மட்டுமல்ல பல தமிழக தலைவர்களுக்கூட ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி சரியான புரிதல் இல்லை என்பதே.

No comments:

Post a Comment