Sunday, November 20, 2016

•விமர்சனம்!

•விமர்சனம்!
எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருத்தல் வேண்டும்.
நண்பன் மீதான விமர்சனம் அவனை திருத்துவதாக இருத்தல் வேண்டும்.
ஆயிரம் மலர்கள் மலரட்டும். நூறு கருத்துகள் முட்டி மோதட்டும் என்று மாவோ சேதுங் கூறினார்.
அதன்படி பல கருத்தகள் தோன்ற வேண்டும். அவை ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி சரியான கருத்தை அடைய வழி செய்ய வேண்டும்.
மாற்று கருத்தகளுக்கும் இடமளிக்க வேண்டும் என்பது எதிரிக்கு உதவும் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டும் என்று பொருள் அல்ல.
மக்களின் நலன்களுக்கு எதிரான , மக்களின் எதிரிக்கு சார்பான கருத்துகளை இனம் கண்டு அம்பலப்படுத்த வேண்டும்.
இலங்கை இந்திய அரசுகளுக்கு சார்பான கருத்துகளை இனம் கண்டு அவற்றை அம்பலப்படுத்த வேண்டும்.
இவ்வாறான மக்கள் விரோத கருத்தகளை மாற்றுக் கருத்துகளாக நினைத்து அவை மக்கள் மத்தியில் ஊடுருவ சிலர் வழி செய்கின்றனர்.
மக்கள் விரோத கருத்துகள் ஒருபோதும் மாற்றுக் கருத்துகளாக இருக்க முடியாது. அவை மக்கள் மத்தியில் ஊடுருவ ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.
பாலஸ்தீனத்தில் பல காலமாக போராட்டம் நடைபெறுகிறது. பல்லாயிரம் மக்கள் இஸ்ரேலினால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஆனால் அங்கே யாரும் போராடிய விடுதலை அமைப்புகள் மீது பழி கூறியதில்லை.
காஸ்மீரில் பல்லாயிரம் மக்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்படுகின்றனர். அனால் எந்த காஸ்மீர் மக்களும் தமது போராளிகள் மீது பழி கூறியதில்லை.
ஆனால் இலங்கையில் மட்டும் சில தமிழர் விமர்சனம் என்ற போர்வையில்; பல்லாயிரம் மக்களை கொன்ற மகிந்தமீது பழி கூறாது புலிகள் மீதே குற்றம் சுமத்துகின்றனர்.
அரசாங்கம் யுத்த தவிர்ப்பு வலையத்தை அறிவித்தது. அவ்வாறு இந்த வலையத்திற்குள் நம்பி வந்த பல்லாயிரம் அப்பாவி மக்களை அதே அரசு சுட்டுக் கொன்றுள்ளது.
இதனை தவறு என்று விமர்சிக்காதவர்கள் புலிகள் தப்பி செல்ல முனைந்த மக்களை சுட்டுக் கொன்றார்கள் என்று புத்தகம் எழுதுகிறார்கள்.
பல பெண்களை இலங்கை ராணுவம் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தமை சனல்-4 மூலம் உலகம் பூhவும் அறியப்பட்டுள்ளது.
ஆனால் அதுபற்றி எதுவும் எழுதாது தன்னை இராணுவம் நன்றாக நடத்தியது என்று இலங்கை ராணுவத்திற்கு நற்சான்றிதழ் வழங்குகிறார் இன்னொருவர் தனது நூலில்.
இலங்கை அரசின் தவறே பிரபாகரன்கள் உருவாவதற்கு காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கூறுகிறார். ஆனால் பயங்கரவாதிகளை நாம் ஒருபோதும் ஆதரிக்கமாட்டோம் என்று அவர்கள் மூலம் பதவி பெற்ற ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார்.
புலிகள் மக்களை சுட்டு விட்டார்கள். எனவே இன்னொரு ஆயுதப் போராட்டம் தேவையில்லை என்று வாராவாரம் இந்திய தூதருக்கு அறிக்கை அனுப்பும் ஒரு லண்டன் ஊடகவியலாளர் கூறுகிறார்.
புலிகளுக்கு புல்லு வெட்டிக் கொடுத்தேன் என்று கூறி கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற ஒருவர் முகநூலில் எழுதுகிறார் “ துரையப்பா ஒரு நல்ல மனிதர். அவரை அநியாயமாக சுட்டுக்கொன்றுவிட்டார்கள். எனவே இன்னொரு போராட்டம் தேவையில்லை” என்று.
இப்படி விமர்சனம் என்ற போர்வையில் தமிழ் மக்கள் நலனுக்கு விரோதமான, இலங்கை இந்திய அரசுகளுக்கு உதவும் கருத்துகளை சில தமிழர் செய்து வருகின்றனர்.
இவர்களுடைய இத்தகைய நச்சுக் கருத்துகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தூக்கியெறிய வேண்டும். மாறாக இவை மக்கள் மத்தியில் வேரூன்ற இடமளிக்க கூடாது.

No comments:

Post a Comment