Thursday, December 27, 2018

ராஜீவ்காந்தியை புலிகள் கொல்லவில்லையா?

ராஜீவ்காந்தியை புலிகள் கொல்லவில்லையா?
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை தாங்கள் கொல்லவில்லை என்று புலிகள் அமைப்பு சார்பில் லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி ஆகியோர் அறிக்கை விட்டுள்ளனர்.
யார் இந்த லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி? எதற்காக இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது இந்த அறிக்கை விட்டுள்ளார்கள்?
இந்த அறிக்கை மூலம் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்த விரும்புகிறார்களா? அல்லது இந்திய உளவுப்படையை திருப்திப்படுத்த விரும்புகிறார்களா?
ராஜிவ்காந்தி கொலை குறித்து உண்மை விபரம் கூறக்கூடிய தகுதி உள்ளவர்கள் மூன்றுபேர் மட்டுமே.1. பிரபாகரன் 2.பொட்டு அம்மான் 3.சிவராசன்
இந்த மூவரும் இப்போது இல்லை. எனவே இது குறித்து வேறு யாராவது கூறுவதாயின் இவர்களிடம் இருந்து பெற்ற ஆதாரத்தின் அடிப்படையிலேதான் கூறமுடியும்.
ராஜீவ்காந்தி கொலை நடந்தபோலு லண்டனில் இருந்து கிட்டு அறிக்கை விட்டிருந்தார். இக் கொலையை தமிழக நக்சலைட்டுகள் செய்திருக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.
கிட்டுவின் அறிக்கை தவறான அறிக்கை என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல தளபதி கிட்டுவுக்கூட ராஜீவ் கொலை பற்றி தெரிந்திருக்கவில்லை என்றே நினைக்க வேண்டியுள்ளது.
அதேபோல் புலிகளின் தளபதியாக இருந்த கருணா அம்மானும் ராஜீவ்காந்தி கொல்லப்படபோவது பற்றி தமக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை என கூறியுள்ளார்.
புலிகளின் தளபதிகளாக இருந்தவர்களுக்கே ராஜீவ்காந்தி கொலை பற்றி எதுவும் தெரிந்திராத நிலையில் இந்த லதன் சுந்தரலிங்கம் மற்றும் குருபரன் குருசாமி இருவருக்கும் எப்படி தெரிந்தது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
அதுமட்டுமல்ல பிரபாரன் மற்றும் பொட்டு அம்மான் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா என்பதே தெரியாத நிலையில் அவர்கள் இருவருக்கும் மட்டும் தெரிந்த உண்மை இவர்களுக்கு எப்படி தெரிந்தது?
அத்துடன் பிரபாகரனே அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று கூறியபின்பு இவர்கள் எதற்காக இத்தனை வருடம் கழித்து புலிகள் அதனை செய்யவில்லை என்று மறுக்க வேண்டும்?
ராஜீவ்காந்தி கொலை பற்றி இந்த அறிக்கை விட்ட இருவருக்கும் தெரிந்ததைவிட அதிகமான அளவு இந்திய அரசுக்கும் அதன் உளவுப்படைக்கும் தெரியும்.
எனவே இவர்கள் விடும் அறிக்கையை இந்திய அரசும் அதன் உளவுப்படையும் ஒருபோதும் நம்பப் போவுதுமில்லை. எற்றுக்கொள்ளப்போவதுமில்லை.
அத்தோடு “சிறீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்தியப் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்” என்றும் அறிக்கையில் கூறியுள்ளனர்.
இதன்மூலம் ராஜீவ்காந்தியைக் கொன்ற தானு, சிவராசன் போன்றவர்களை சிறீலங்கா அரசின் ஏஜன்ட் என்று கொச்சைப்படுத்தியுள்ளனர். மற்றும் சிறையில் இருக்கும் எழுவர்கூட சிறிலங்கா அரசின் சூழ்ச்சிக்கு உதவியவர்களாகவே சித்தரித்துள்ளனர்.
கடந்த 28 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் தான் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தமைக்காக வருத்தப்படவில்லை. விடுதலையானால் தொடர்ந்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவே இருப்பேன் என்று கூறியுள்ளார்.
அதேபோன்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளும் தன் மகன் மட்டுமல்ல தங்கள் குடும்பமும் தொடர்ந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம் என்றே கூறிவருகிறார்.
அப்படிப்பட்டவர்களின் தியாகத்தை அவர்கள் சிறீலங்கா அரசின் சூழ்ச்சிக்கு பலியானதாக கூறி கொச்சைப்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
புலிகள் செய்த தவறு ராஜிவ்காந்தியைக் கொன்றது அல்ல, மாறாக இந்திய ராணுவம் செய்த கொடுமைகளுக்கான தண்டனை அது என்ற உண்மையை கூறாததே.
அந்த உண்மையைக் கூறியிருந்தால் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத் தமிழர்களுக்குரிய நியாயம் கிடைத்திருக்கும் என்பது மட்டுமல்ல எதிர்காலத்தில் இப்படியான முட்டாள்தனமான அறிக்கைகள் வருவதையும் தடுத்திருக்கலாம்.
குறிப்பு- “தாணு ஒரு அப்பாவி. ராஜீவ்காந்தி தன் இடுப்பில் கட்டியிருந்த குண்டு வெடித்ததால்தான் தாணு இறந்தார். எனவே ராஜிவ்காந்தி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும”; என்று பழனிபாபா கூறியிருந்தார். இவரின் இந்த கூற்றை இதுவரை முட்டாள்தனமான கூற்று என நினைத்திருந்தேன். ஆனால் இந்த இருவரின் அறிக்கையை படித்தபின்பு பழனிபாபா பரவாயில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

No comments:

Post a Comment