Thursday, December 27, 2018

•சம்பந்தர்கடையடி- சில நினைவுகள்

•சம்பந்தர்கடையடி- சில நினைவுகள்
ஈராக் அதிபர் சதாம் உசைன் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது பெரிய சண்டியன் சின்ன சண்டியன் மீது நடவடிக்கை எடுக்கிறான் என்ற வரியை பலரும் படித்திருப்பீர்கள்.
இதே வரியை நான் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னர் சம்பந்தர் கடையடியில் கேட்டிருக்கிறேன்.
ஒருநாள் சோனப்பில் பிடித்ததாக கூறி ஒருவரை “மாட்டுக்கள்ளன்” என்று ஊர்வலமாக சம்பந்தர் கடையடி வழியாக பருத்தித்துறை கொண்டு சென்றார்கள்.
அந்த மாட்டுக்கள்ளன் பெயர் பாக்கியராசா. அவரும் கரவெட்டியைச் சேர்ந்தவர்தான்.
ஊரில் களவு போன அனைத்து மாடுகளையும் அவர்தான் களவெடுத்தார் என்றுகூறி ஊரில் அறியப்பட்ட பெரிய சண்டியர்கள் அடித்து ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
இதனை நான் ஆச்சரியமாக சம்பந்தர் கடையடியில் பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு இளைஞர் கூறினார் “ பெரிய கள்ளர்கள் சின்ன கள்ளனை தண்டிக்கிறார்கள்” என்று.
இந்த வரியை கேட்டதும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அனைத்து விடயத்தையும் மிக அற்புதமாக சுருக்கமான வார்த்தையில் கூறியிருந்தார்.
அந்த இளைஞர் வேறு யாருமில்லை. கரவெட்டியில் பலருக்கும் தெரிந்திருந்த தோழர் ரத்தினம்.
நான் மார்க்சியம் படிக்க பலர் காரணமாக இருந்துள்ளனர். அதில் முக்கியமானவர் இந்த தோழர் ரத்தினம். ( இவரைப் பற்றி இன்னொரு தருணத்தில் நிச்சயம் விரிவாக எழுதுவேன்)
இந்த பாக்கியராசா சில வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணத்தில் ரெலோ இயக்கத்தின் முக்கிய தளபதியாக இருந்தார் என் கூறுகிறார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
கரவெட்டியில் சோனப்பு வீதியில் இந்த சம்பந்தர் கடையடி இருக்கிறது. மதவடியில் இளைஞர் கூட்டம் இருந்ததுபோல் இந்த கடையடியிலும் எப்போதும் ஒரு இளைஞர் கூட்டம் இருக்கும்.
இந்த கடையடியில் இருக்கும் இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட்’ கட்சி உறுப்பினர்களாக அல்லது ஆதரவாளர்களாக இருந்தனர்.
1977 தேர்தலில் ; தமிழீழத்தை முன்வைத்து தமிழர்விடுதலைக் கூட்டணி பெரும் வெற்றி பெற்றிருந்தது. அதையொட்டி வல்வெட்டித்துறையில் வெற்றிவிழாக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
கூட்டணி தலைவர்களில் ஒருவரான சிவசிதம்பரம் வெற்றிவிழாக் கூட்டத்தை முடித்தவிட்டு கரவெட்டியில் உள்ள தன் வீட்டிற்கு சம்பந்தர்கடை வழியாக வந்தார்.
சம்பந்தர் கடையடியில் நின்ற இளைஞர்கள் சிவசிதம்பரத்தை மறித்து “ ஐயா! எப்ப தமிழீழம் கிடைக்கும்?” என்று கேட்டனர்.
அதற்கு சிவசிதம்பரம் “ தமிழீழம் ஒருபோதும் கிடைக்காது. சந்தையில் பேரம் பேசுவதுபோல் அரசுடன் பேரம் Nபுசும் பொருளாகவே தமிழீழத்தை நாம் முன் வைத்திருக்கிறோம்” என்றார்.
உண்மைதான். தமிழர்விடுதலைக்கூட்டணி ஒருபோதும் தமிழீழத்திற்காக போராடவில்லை. அதனால்தான் இலங்கை அரசு தர முன்வந்த மாவட்டசபை, மாகாணசபை எல்லாவற்றையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் இங்கு எனது வருத்தம் என்னவெனில் அன்று சம்பந்தர் கடையடியில் கூறியதை சிவசிதம்பரம் உரத்து கூறியிருந்தால் இவர்கள் முன்வைத்த தமிழீழத்தை நம்பி உயிர்விட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் உயிர் தப்பியிருப்பார்கள் என்பதே.

No comments:

Post a Comment