Thursday, December 27, 2018

சில நினைவுகள்

• சில நினைவுகள்
1980ம் ஆண்டு எமது பயிற்சி நடவடிக்கைகளுக்காக வன்னியில் நெடுங்கேணிக்கு அருகில் மாறாஇலுப்பை என்னும் இடத்தில் பண்ணை ஒன்றை ஆரம்பித்திருந்தோம்.
எமது வருமானத்திற்காக வெங்காயம் பயிரிட்டிருந்தோம். எமக்கு 5 அந்தர் விதை வெங்காயத்தை இலவசமாக தந்ததோடு எம்மை மாக்சியகல்வி கற்கும்படி வலியுறுத்தி போல்ஷ்விக்கட்சி வரலாறு புத்தகத்தையும் தந்தவர் மனோ மாஸ்டர்.
வெங்காயம் நல்ல விளைச்சல் வந்தது. எனவே செலவு எல்லாம் போக மிச்ச காசில் ஒரு றேடியோ பெட்டி வாங்கலாம் என ஆவலுடன் இருந்தோம்.
நெடுங்கேணியில் ஒரு தீவான் கடை வைத்திருந்தார். அவர்தான் வெங்காயத்தை தனது லாறியில் எடுத்து சென்று விற்று பணம் தருபவர்.
கடவுள் முருகன் தீவானுக்கு புகையிலை விற்றதாலே கோமணத்துடன் நிற்பதாக பகிடியாக் கூறுவார்கள். அது உண்மையோ பொய்யோ தெரியாது. ஆனால் நாங்கள் கிட்டத்தட்ட அந்த நிலைக்கு அவரால் சென்றோம்.
நாம் எதிர்பார்த்ததைவிட பாதிவிலைக்கு விற்றதாக கூறி பணம் தந்தார் அந்த கடைக்காரர். நாம் காரணம் கேட்டபோது காலியில் கலவரம் என்று பொய் கூறினார்.
அவர் பொய் கூறுகிறாh. அவர் எம்மை ஏமாற்றுகிறார் என்று நன்கு தெரிந்தும் எங்களால் எதுவம் செய்ய முடியவில்லை. ஏனெனில் அவருக்கு பொலிஸ் செல்வாக்கு இருந்தது.
எமக்கு பண நெருக்கடி. என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தவேளை நாம் எதிர்பாராத அளவிற்கு உளுந்து விளைச்சல் கொடுத்தது.
அந்த நேரம் தோழர் நெப்பொலியன் ஒரு ஐடியா கொடுத்தார். அதாவது சும்மா சுட்டு பழக கூடாது. ஏதாவது ஒரு மிருகத்தை சுட வேண்டும். அப்படி சுட்டால் அந்த இறைச்சியை விற்று பணம் பெறலாம் என்றார்.
முதலில் மயிலை சுட்டோம். அதில் இறைச்சி குறைவு. எனவே நாம் சமைத்து சாப்பிட்டு விட்டோம். கோழி இறைச்சி போல் இருந்தது. ஆனால் மயில் இறைச்சி சாப்பிட்டால் கால்வாதம் வரும் என்று ஊரவர்கள் கூறியதால் அதன்பிறகு மயிலை சுடவில்லை.
பன்றியை சுட்டால் நிறைய இறைச்சி வரும். ஆனால் அதை சுடுவதற்கு இரவில் நித்திரை முழித்து இருக்க வேண்டும்.
அதனால் காட்டுக்கு போய் குளுவன் மாட்டை சுடுவது என்று முடிவெடுத்தோம்.
ஏதோ மாடுதானே என நினைத்து போனோம். அங்கு போனபின்புதான் தெரிந்தது அது எவ்வளவு பயங்கரமானது என்று. கறுத்த உருவம் யானை சைஸ்க்கு இருந்தது.
கொஞ்சம் தவறினால் நாம் காலி. எனவே கவனமாக சுற்றிவழைத்து சுட்டோம். 6 தோட்டாக்கள் சுட்டும் அது விழவில்லை. அப்படியே நின்றது. அப்புறம் நெப்போலியனே மிக அருகில் சென்று சுட்டு வீழ்தினார்.
அதன் ஒரு காலைக்கூட எங்காளால் காவி வரமுடியவில்லை. அந்தளவு கனமாக இருந்தது. அதனால் ஊருக்குள் வந்து இன்ன இடத்தில் குளுவன் சுட்டு போட்டிருக்கிறோம். தேவையானவர்கள் போய் எடுத்துக் கொள்ளுங்கள் என்றோம்.
ஊரவர்கள் போய் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் நல்லவர்கள். அதனால் எடுத்துக்கொண்ட இறைச்சிக்குரிய பணத்தை தேடி வந்து தந்தார்கள்.
நாம் சயிக்கிளில் திரும்பி வந்துகொண்டிருந்தோம். சயிக்கிள் பாரில் எமது துப்பாக்கிகளை உரபையினால் சுற்றி கட்டியிருந்தோம். கரியரில் இறைச்சி சாக்கில் கட்டி வைத்திருந்தோம்
வரும் வழியில் எதிர்பாராத விதமாக ஒட்டிசுட்டானில் இருந்து வந்த பொலிஸ் ஜீப் வந்துவிட்டது. எங்களால் ஓட முடியவில்லை. மாட்டிவிட்டோம் என நினைத்தோம்.
அப்போது ஒரு பொலிஸ் “ யாரடா நீங்க? எங்கிருந்து வாறீங்கடா?” என்று கேட்டார். அதற்கு நாங்க “ கூலிக்கு மிளகாய் ஆய குழவிசுட்டானுக்கு போயிட்டு வாறோம் “ என்றோம்.
ஆனால் அந்த பொலிஸ்காரர் நம்பவில்லை. அவர் இறங்கி எம்மை சோதிக்க மயன்றார். அதற்குள் ஜீப் ல் முன்சீட்டில் இருந்த இன்ஸ்பெக்டர் எட்டிப் பார்த்து சிரித்துக்கொண்டே “ எப்பயிலிருந்து நீங்க எல்லாம் கூலி விவசாயி ஆனீங்கடா? என்று கேட்டார்.
அப்போதுதான் கவனித்தோம். அந்த இன்ஸ்பெக்டர் எமது கரவெட்டி ஊரைச் சேர்ந்தவர். அவருக்கு எங்களை நன்கு தெரியும். அதுமட்டுமல்ல நாங்கள் இயக்கம் என்பதும் அவருக்கு தெரியும்.
அவர் எமக்கு மட்டுமல்ல பல போராளிகளுக்கு உதவி செய்திருக்கிறார் என அறிந்திருக்கிறேன். ஆனாலும் பின்னர் புளட் இயக்கம் மேற்கொண்ட கன்னிவெடித்தாக்குதலில் அவர் இறந்தார் என்பதை அறிந்தோம்.
குறிப்பு- சில நினைவுகள் சில படங்களை நினைவூட்டும். சில படங்கள் சில நினைவுகளை மீட்க வைக்கும். இந்த மாட்டு படத்தை பார்த்ததும் வந்த நினைவுகள் இவை.

No comments:

Post a Comment