Saturday, December 14, 2019

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியும் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளும்

கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியும் ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளும் - தோழர் பாலன்

ஈழத் தமிழர்களின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்பதற்கு கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி பற்றி முதலில் பார்க்க வேண்டும். கோத்தபாய ராஜபக்சா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தவுடன் “கோத்தபாயா சீன ஆதரவாளர். அவர் பதவிக்கு வந்தால் இந்தியாவும் அமெரிக்காவும்  ஈழத் தமிழர்களை ஆதரிக்கும்” என்று சில தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் எழுதினார்கள். ஆனால் கோத்தபாயா வெற்றி பெற்றவுடன் முதல் வாழ்த்து தெரிவித்த அந்நிய நாட்டு தலைவர் இந்திய பிரதமர் மோடி அவர்களே. அதுமட்டுமல்ல கோத்தபாயா பதவி ஏற்றவுடன் அவரை சந்தித்த முதல் வெளிநாட்டு அமைச்சரும் இந்திய வெளியுறவு அமைச்சரே. அதையும்விட கோத்தபாயா பதவி எற்றதும் சென்ற முதல் நாடாகவும் இந்தியாவே இருக்கிறது.

ஆனால் எமது அந்த தமிழ் ஆய்வாளர்களோ வழக்கம்போல இதையும் “இந்தியா இலங்கைக்கு எச்சரிக்கை என்றும் தமிழருக்கு பாதகம் எற்பட்டால் இந்தியா பொறுக்காது” என்றும் எழுத ஆரம்பித்து விட்டார்கள். இன்று மட்டுமல்ல, 1983ம் ஆண்டு முதல் இந்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள்  இலங்கை வரும்போதெல்லாம் இப்படித்தான் இவர்கள் எழுதி வருகிறார்கள்.

உண்மையில் கோத்தா ஜனாதிபதியாக வருவதை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பியிருக்கின்றன என்றே நினைக்க தோன்றுகிறது. ஏனெனில் கோத்தா மூலம் தமது நலன்களுக்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடியும் என இவர்கள் நினைக்கின்றனர். “எட்கா” ஒப்பந்தத்தை இந்தியாவும் மிலேனியம் ஒப்பந்தத்தை அமெரிக்காவும் கோத்தா மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என நினைக்கின்றன. கடந்த ரணில் அரசு மக்களின் எதிர்ப்பு காரணமாக இந்த ஒப்பந்தங்களை செய்து கொள்ளாமல் தயக்கம் காட்டி வந்தது. எனவேதான் உறுதியான ஜனாதிபதியாக கோத்தாவை கொண்டு வந்தால் இவ் ஒப்பந்தங்களை இலகுவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என இந்தியாவும் அமெரிக்காவும் நினைத்திருக்கலாம்.

கோத்தா பதவிக்கு வருவதற்காகவே இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்தப்பட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் இது மோடி பதவிக்கு வருதற்காகவே நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் என தற்போது தெரிய வருகிறது. காஸ்மீரை அடுத்து தமிழ்நாட்டில் குண்டு வெடிக்க இருந்ததாகவும் ஆனால் அப்படி நடக்கப்போகிறது என்பது பலராலும் ஊகம் தெரிவித்தமையினால் அக் குண்டு வெடிப்பு இலங்கையில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஏனெனில் இந்த குண்டு வெடிப்பை அடுத்து இலங்கையில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களை விட அதிகளவு முஸ்லிம்கள் இந்தியாவில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதில் ஒருவரைக்கூட இலங்கை பொலிசார் விசாரணை செய்வதற்கு இந்திய அரசு இதுவரை அனுமதிக்கவில்லை.

அதுமட்டுமல்ல இச் சம்பவத்திற்கு சில மாதங்களுக்கு முன்னர் தன்னை கொலை செய்ய இந்திய உளவு நிறுவனமான றோ முயற்சி செய்கிறது என்று ஜனாதிபதி மைத்திரி குற்றம் சாட்டியிருந்தார். அது தொடர்பாக ஒரு இந்தியரைக்கூட இலங்கை பொலிசார் கைது செய்தனர். ஆனால் இந்திய தூதரின் தலையீட்டில் இந்த கைது செய்யப்பட்ட இந்தியர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையையும் ஊற்றி மூடி விட்டார்கள். இனி குண்டு வெடிப்பு வழக்கு விசாரணையும் கைவிடப்படலாம். என்ன நடந்தது என்ற உண்மை மக்களுக்கு தெரிய வராமலே மறைக்கப்படலாம். உண்மைகள் இப்படி இருக்கும்போது எமது ஆய்வாளர்களோ கோத்தா ஜனாதிபதியாக வந்தால் இந்திய அரசு ஈழத் தமிழருக்கு உதவும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியா சென்ற ஜனாதிபதி கோத்தாவுக்கு மோடியின் இந்திய அரசு செங்கள வரவேற்பு கொடுத்துள்ளது. தமிழர்களின் நலன்களில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறம் தமிழர்களைக் கொன்ற கோத்தாவுக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை மோடி அரசு வழங்கியுள்ளது. அத்துடன் கோத்தாவும் “ இந்தியாவின் நலன்களை பாதிக்கும் வண்ணம் தனது அரசு இருக்காது” என்று உறுதியளித்துள்ளார். அத்துடன் சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகையில் வழங்கப்பட்ட துறைமுக ஒப்பந்தத்தையும் தனது அரசு ரத்து செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

கோத்தா ஜனாதிபதியாகும் விடயத்தில் அமெரிக்காவும் இந்தியா போன்றே செயற்பட்டுள்ளது. கோத்தாவுக்குரிய அமெரிக்காவின் ஆதரவு தெரியாமல் அமெரிக்கா போர்குற்ற விசாரணையில் தமிழர்கட்கு உதவிபுரியுமென நம்மவர்கள் சிலர் அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விபரங்கள் வருமாறு.

12-04-2019ல் அமெரிக்காவில் இருந்து கோத்தா நாடு திரும்புகிறார், ஒருபோதும் இல்லாத பெரும் வரவேற்பு அவருக்கு அளிக்கப்படுகிறது.

17-04-2019ல் கோத்தா தனது அமெரிக்க பிரஜா உரிமையை ரத்து செய்யக்கோரி, அமெரிக்க தூதரகத்தில் விண்ணப்பத்தை கையளிக்கின்றார்.

21-04-2019ல் பயங்கரவாத குண்டுவெடிப்பு சம்பவங்கள் இலங்கையில் இடம் பெறுகின்றன

21-04-2019ல் குண்டுவெடித்து ஒரு சில நிமிடங்களில் பாதுகாப்பு செயலக ரகசிய ஆவணமொன்று கசியவிடப்படுகிறது, அதன் மூலம் குண்டு வெடிக்கப் போவது முதலே தெரிந்திருந்தும் ரணில் அரசு மக்களை காப்பாற்ற தவறி விட்டது என்ற கருத்து மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது..

28-04-2019ல் இந்த களேபரத்துக்கு மத்தியில் கோத்தா தன்னை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கிறார். நாட்டையும் மக்களையும் தன்னால் மட்டுமே பாதுகாக்க முடியும் என்று  பிரகடனம் செய்கிறார்

07-05-2019 பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் பூர்வாங்க பிரசார கூட்டம் இடம்பெறுகிறது. இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு, "புலி பயங்கரவாதத்தை ஒழித்த கோத்தாவினால் மட்டுமே இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்" என்று உரையாற்றுகிறார். 

மேற்கண்ட விபரங்களில் இருந்து இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடனே கோத்தா ஜனாதிபதியாகியிருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் தமிழ் மக்கள் கோத்தாவுக்கு தமது ஆதரவினை வழங்கவில்லை. மாறாக கோத்தா ஜனாதிபதியாக வரக்கூடாது என்றே வாக்களித்தார்கள். ஆயினும் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக கோத்தா பெற்ற வெற்றியானது தமிழ் மக்கள் இனி வெகுஜனப் போராட்டப்பதையில் அணி திரளவேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றது.

இன்று இலங்கையின் மொத்த கடன் 10313 பில்லியன் ரூபா என்று அறிய வருகிறது. அதாவது இன்று இலங்கை குடிமகன் ஒவ்வொருவர்; தலையிலும் 417913 ரூபா கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது. கடன் வாங்குவது தவறு அல்ல. ஆனால் அது பொருளாதார அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும். இலங்கையில் அவ்வாறு இல்லை. இலங்கையின் GDP growth rate  2.7 ஆகவே இருக்கிறது. வருமானத்தில் 70.1 வீதம் கடனுக்கு வட்டி கட்டுவதிலேயே போய்விடுகிறது. இதனால் எந்தவொரு அபிவிருத்தியையும் மேற்கொள்ள முடியாதநிலை காணப்படுகிறது. எனவேதான் மகிந்த அரசானாலும் சரி அல்லது ரணில் அரசானாலும் சரி யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒருபுறம் அரசுக்கு சொந்தமான சொத்துகளை தனியாருக்கு விற்கின்றனர். மறுபுறம் நாட்டின் வளங்களை சீனா, இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தாரை வார்க்கின்றன. கடந்த காலங்களில் இருந்த ஆட்சியாளர்கள் தங்கள் சுய இலாபங்களுக்காகவும், போலி பகட்டிற்காக கட்டுமானங்களை மேற்கொள்வதற்காகவுமே கடன்களை பெற்றனர். அதனால்தான் கடந்த காலத்தில் 11 பில்லியன் ரூபாய் கடன் பெறப்பட்டுள்ள போதிலும், வெறும் 1.8 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களே நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள், மிகவும் அதிகமான வட்டி வீதத்திற்கே பெறப்பட்டன. உதாரணமாக ஹபரண - கந்தளாய் வீதி புனரமைப்பிற்கு 0.75% என்ற வட்டி வீதத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கடன் பெறப்பட்ட அதேவேளை, வேறு பல கட்டுமான திட்டங்களிற்கு மிகவும் கண்மூடித்தனமாக 7.5% போன்ற அதிக வட்டிவீதத்திற்கு சில நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்பட்டுள்ளது. குறைந்த வட்டிக்கு கடன் வழங்க பல நிறுவனங்கள் இருக்கையில் இவ்வாறு கடன் பெறுவதற்கான பிரதான காரணம் ஊழல் மோசடியேயாகும். ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள் கடன் வழங்கும் போது சில நிபந்தனைகளை முன்வைக்கின்றன. உதாரணத்திற்கு, கடன் தொகை சரியாக முதலிடப்படுகின்றதா, குறித்த உத்தேச திட்டம் எந்தளவு பிரயோசமானது, அதனால் சூழலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றனவா, மக்கள் மீள குடியமர்த்தப்படும் நிலைமை வந்தால் அவர்களுக்கு சரியான விதத்தில் நஷ்டஈடு வழங்கப்படுகின்றதா எனபன அவற்றுட் சிலவாகும். இந்த நிபந்தனைகள் உண்மையில் நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை பயக்கின்ற நிபந்;தனைகளாகும்.

ஆனால் இவற்றிற்கு கட்டுப்பட்டால் அரசியல்வாதிகளுக்கு நிதி மோசடியில் ஈடுபட முடியாது என்பதால், நிபந்தனைகளின்றி அதிக வட்டிக்கு கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன் பெறப்படுகின்றது. உமா ஓயா திட்டம், தெற்கு அதிவேக பாதை திட்டம், கடலோர ரயில் பாதையை விஸ்தரிக்கும் திட்டம், சூரியவெவ கிரிக்கட் மைதானத் திட்டம் போன்றவை இவ்வாறு அதிக வட்டிக்கு கடன் பெற்று செய்யப்பட்ட திட்டங்களாகும். 0.75% வட்டி வீதத்தில் 100 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டால் 40 வருடங்களில் மீள் செலுத்தும் போது 30 கோடி ரூபாய் வட்டியையே செலுத்த வேண்டியேற்படும். ஆனால் 7.5% வட்டிக்கு கடனை பெறுவதால், 40 வருடங்களின் பின் 300 கோடி ரூபாயை வட்டியாக செலுத்தும் நிலை உருவாகியுள்ளது. இது ஆட்சியாளர்களின் இலாபத்திற்காக அப்பாவி மக்களின் மீது ஏற்றிவைக்கப்படும் சுமையாகும்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஆனால் கோத்தா உட்பட  எந்தவொரு வேட்பாளருமே தாம் பதவிக்கு வந்தால் இந்த கடன் பிரச்சனையை எவ்வாறு தீர்ப்போம் என்பதை மக்களுக்கு விளக்கிக் கூறவில்லை. இந்த கடன் என்பது சிங்கள மக்கள் மீது மட்டுமல்ல தமிழ் மற்றும் முஸ்லிம் உட்பட அனைத்து இலங்கை மக்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 2015 தேர்தலுக்கு 1280 மில்லியன் ரூபா செலவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நடந்து முடிந்த இந்த தேர்தலுக்கு குறைந்தது 1500 மில்லியன் ரூபா செலவாகியிருக்கும். இத்தனை செலவு செய்து தெரிவு செய்யப்படும் ஆட்சியாளர்கள் தமது சுயநலன்களுக்காக நாட்டை விற்கின்றனர். அதனால்தான் “இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்த நபரும் அல்லது  எந்தக் கட்சியும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்று இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் கூறினார். இதன் அடிப்படையிலேதான் தேர்தல்களை பகிஸ்கரிக்கும்படி அவர் கோரினார்.

நாட்டின் இறைமை, சுதந்திரம், சுயாதிபத்தியம், சுயசார்பு ஆகியவற்றை ஏகாதிபத்திய, பிராந்திய வல்லாதிக்க சக்திகளிடமிருந்து பாதுகாக்கும் துணிவு புதிய ஜனாதிபதியான கோத்தபாயாவிடம் இல்லை. எனவே நாட்டின் அனைத்து உழைக்கும் மக்களும், ஒடுக்கப்படும் தேசிய இனங்களும் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், உரிமைகளுக்காகவும் வெகுஜனப் போராட்டப் பாதையில் அணிதிரள வேண்டியதன் அவசியம் உருவாகியுள்ளது. ஈழத் தமிழர்கள் தமிழக தமிழர்கள் மற்றும் சர்வதே சக்திகளுடன் சேர்ந்து இதனை நிச்சயம் செய்வார்கள்.




1 comment:

  1. A WELL WRITTEN ARTICLE BY COMRADE BALAN. IN ORDER TO PUBLICISE THE CONTENTS, I RECOMMEND AN ENGLISH TRANSLATION REALLY EARLY.-- PROF.
    KOPAN MAHADEVA, 17.12.2019.

    ReplyDelete