Saturday, December 21, 2019

இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும்.

இன்று சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் ஆகும்.
அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா போன்ற நாடுகளில் உள்ள வெள்ளை இனத்தவர்கள் எல்லாம் ஒரு கால கட்டத்தில் அந்த நாடுகளுக்கு புலம் பெயர்ந்தவர்களே.
ஆனால் இன்று அவர்கள் தங்கள் நாட்டுக்குள் யாரும் புலம் பெயர அனுமதிக்க முடியாது என்று கூறுகிறார்கள். அதுவும் அமெரிக்கா மெச்சிக்கோ நாட்டு எல்லையில் மிகப் பெரிய மதில் சுவரை கட்டி வருகிறது.
அதுபோல கைபர் கணவாய் ஊடாக இந்தியாவுக்குள் புலம் பெயர்ந்தவர்கள் தாய் தமிழகத்தில் குடியேற ஈழ அகதிகளுக்கு உரிமை இல்லை என்கிறார்கள்.
அதுவும் பாகிஸ்தான் பங்களாதேஸ் நாடுகளில் இருந்து வரும் இந்து அகதிகள் குடியேறலாமாம். ஆனால் ஈழ அகதி இந்துவாக இருந்தாலும் குடியேற முடியாதாம்.
புலம் பெயர்ந்தவர்களை மனிதாபிமானமாக நடத்த வேண்டும் என்று ஜ.நா கூறுகிறது. ஆனால் பசு மாட்டுக்கு இரக்கம் காட்டும் இந்திய அரசு ஈழ அகதிக்கு இரக்கம் காட்ட மறுக்கிறது.
ஈழ அகதிகளுக்கு 1972 முதல் இந்திய குடியுரிமை வழங்கப்படுவதாக இந்திய அமைச்சர் ஒருவர் பொய் கூறியுள்ளார். அதை ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஆராயாமல் பிரசுரித்துள்ளது.
சிறிமா- சாத்திரி ஒப்பந்தத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கே இந்த குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அகதிகள் இல்லை. அவர்கள் ஒப்பந்தந்தின் கீழ் அழைத்து வரப்பட்டவர்கள்.
ஆனால் 1983 க்கு பிறகு இந்தியாவுக்கு அகதியாக வந்த ஈழத் தமிழர்கள் எவருக்கும் இதுவரை குடியுரிமை வழங்கப்படவில்லை
இந்த வரலாறு தெரியாமல் ஒரு அமைச்சர் பேசுகிறார். அதைக்கூட மறுத்து பேசுவதற்கு ஒரு தமிழ் தலைவர் நம்மிடம் இல்லை .
ஈழத் தமிழர் இந்தியாவில் அகதியாக இருப்பது கொடுமை என்றால் அதைவிடக் கொடுமை அவர்கள் பற்றி இந்திய அரசுக்கு மட்டுமல்ல தமிழக அரசுக்கூட வரலாறு தெரியவில்லை.
இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஈழத் தமிழர்கள்கூட விபரம் தெரியாமல் “ஏன் இந்தியாவில் இருக்க வேண்டும். இலங்கைக்கு திரும்பி வரலாம்தானே?” என்று பொறுப்பில்லாமல் எழுதுகிறார்கள்.
சிறப்புமுகாமுக்கும் சாதாரண அகதி முகாமுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் கூட பலர் இருக்கின்றனர். அதனால்தான் பாராளுமன்றத்தில் குடியுரிமை மசோதாவை ஆதரித்துவிட்டு தமிழகத்தில் வந்து ஈழத் தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று அதிமுக. பாமக கட்சிகளால் இரட்டை வேடம் போட முடிகிறது.
30 வருடமாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறார்கள். உயர்கல்வி கூட அகதி என்பதால் மறுக்கப்படுகிறது. சுதந்திரமாக நடமாட முடியாமல் கட்டுப்படுத்துகிறார்கள்.
இதனால் வேறு வழியின்றி வேறு ஏதாவது நாட்டுக்கு போக முயன்றால் பிடித்து சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாமில் அடைத்து வைக்கிறார்கள்.
சரி. இலங்கைக்கே திரும்பிச் செல்வோம் என்று பதிவு செய்தால் அனுமதி வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல தாயகம் திரும்புவோருக்கு கப்பல் சேவை கேட்டு பல வருடமாகிவிட்டது. ஒரு கப்பலை கூட ஏற்பாடு செய்ய மறுக்கிறார்கள்.
இந்நிலையில் களவாக நாடு திரும்ப முற்பட்டால் இந்தியாவிலேயே கைது செய்யப்படுகிறார்கள் அல்லது இலங்கையில் கைது செய்யப்படுகிறார்கள்.
இதுதான் இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளின் நிலை. இந்த நிலையில் இருக்கும் ஒரு அகதி என்ன செய்ய முடியும்?
அதனால்தான் வேறு வழயின்றி “குடியுரிமை தாருங்கள் இல்லையேல் கடலில் தள்ளி கொன்று விடுங்கள்” என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
எனவே தயவு செய்து இனியாவது அவர்களின் வலியை புரிந்து கருத்து பகிருங்கள் உறவுகளே.

No comments:

Post a Comment