Saturday, December 21, 2019

•இந்திய உளவு?

•இந்திய உளவு?
இந்திய உளவுப்படை அனுப்பி வைத்த இந்திய தமிழர்களை யாழ்ப்பாணத்தில் தாங்கள் கைது செய்ததாக புலிப் போராளி ஒருவர் ஒருமுறை என்னிடம் பேசும்போது தெரிவித்தார்.
அப்போது நான் அவரிடம் “ இந்த பொட்டு அம்மானுக்கு வேற வேலை இல்லை. போறவாற எல்லோரையும் சந்தேகிக்கிறதே அவருக்கு வேலையாக இருக்கு” என்று சிரித்துக்கொண்டே கூறினேன்.
ஏனெனில் முழு தகவல்களையும் இந்திய உளவுப்படைக்கு வழங்குவதற்கு நம்மவர்களே பலர் தயாராக இருக்கும்போது எதற்காக இந்திய தமிழரை அதுவும் யாழ்ப்பாணத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதே அப்போது என் கேள்வியாக இருந்தது.
ஆனால் அந்த போராளி கூறிய விடயம் உண்மைதான் என்று நம்பும்படி துரோணர் என்பவர் அண்மையில் முகநூலில் எழுதிய பதிவு இது குறித்து பல விபரங்களை தெரிவிக்கிறது.
இந்திய உளவுப்படையால் பம்பாயில் பயிற்சி வழங்கப்பட்டு அனுப்பப்பட்ட இந்திய தமிழர் ஒருவர் யாழ் பஸ் நிலையத்தில் டெயிலர் கடை வைத்திருந்தவேளையிலும் இன்னொரு இந்திய தமிழர் சைனீஸ் சாப்பாட்டுக்கடை வைத்திருந்தவேளையிலும் புலிகளால் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
நான் லண்டன் வந்த பின்னர் லண்டனில் இருக்கும் இந்திய தமிழர் ஒருவரை குறிப்பிட்டு “அவருடன் கவனமாக பழகுங்கள். அவர் இந்திய உளவுத் துறையால் அனுப்பப்பட்டவர் “ என்று நண்பர் ஒருவர் என்னை எச்சரித்தார்.
ஆனால் அதை என்னால் நம்ப முடியவில்லை. ஏனெனில் பிரிட்டன் போன்ற ஜரோப்பிய வல்லரசு நாடுகளில் உளவு பார்ப்பதற்கு இந்திய உளவுப்படை துணியாது என்று நினைத்தேன்.
இலங்கை போன்ற சிறிய நாடுகளில் தைரியமாக இந்தியா உளவு பார்க்கலாம். ஆனால் இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளில் உளவு பார்ப்பது அந்தளவு இலகுவானது அல்ல.
ஏனெனில் தங்கள் நாடுகளில் இந்தியா உளவு பார்ப்பதாக இந்த நாடுகள் அறிந்தால் அப்புறம் இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டு அது இந்தியாவுக்கு பாதகமாய் முடிந்துவிடும்.
ஆனால் இந்திய அரசும் அதன் உளவுப்படைகளும் அது குறித்து எந்தவித அச்சமின்றி உளவு பார்க்கிறார்கள் என்பதை இப்போதுதான் அறிந்து கொள்கிறேன்.
ஜெர்மனியில் இருக்கும் சீக்கிய மற்றும் காஸ்மீர் மக்களை உளவு பார்த்ததாக மூன்று இந்தியர்கள் ஜெர்மானிய பொலிசாரால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்திய ஆக்கிரமிப்பு நலன்களுக்காக இந்திய உளவுப்படையானது உலகெங்கும் உளவு நடவடிக்கைகளில் இறங்கி விட்டது என்பதையே இந்த செய்தி உறுதிப்படுத்துகின்றது.
( இன்னும் வரும்)

No comments:

Post a Comment