Monday, December 30, 2019

•தோழர் சண் அவர்கள் பற்றிய ஒரு குறிப்பு

•தோழர் சண் அவர்கள் பற்றிய ஒரு குறிப்பு
இன்று தோழர் மாசேதுங் பிறந்த நாள். இந்த நாளில் அவரின் உற்ற தோழரான தோழர் சண்முகதாசன் பற்றிய ஒரு குறிப்பை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
இலங்கையில் மாவோயிசத்தை அறிமுகப்படுத்தியவர். மாசேதுங்குடன் பலமுறை நேரில் சந்தித்து உரையாடியவர். இறுதிவரை மாவோயிசத்தில் உறுதியாக இருந்தவர் என்ற பெருமைகளைப் பெற்றவர் தோழர் சண்.
இலங்கையில் தேர்தல் பாதையை நிராகரித்து மக்கள் யுத்தப்பாதையை முன்வைத்தவர். தமிழ் இளைஞர்களை “போராளிகள்” என்று அழைத்து அவர்களின் போராட்டத்தை இறுதிவரை ஆதரித்த இடதுசாரித் தலைவர் அவர்.
அவர் சிங்கள மக்கள் மத்தியில் மதிப்பு பெற்ற ஒரு தமிழ் தலைவர் மட்டுமன்றி சர்வதேசத்திலும் புரட்சிகர இயக்கங்கள் மத்தியில் மதிப்பு பெற்றிருந்த ஒரு தலைவராக விளங்கினார்.
1971ல் ஜே.வி.பி இயக்கம் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது இலங்கை அரசு இவரை கைது செய்து பத்து மாதம் சிறையில் அடைத்து வைத்திருந்தது.
ஜே.வி.பி இயக்கம் இவருடைய கட்சியில் இருந்து விலகிய ரோகண விஜயவீராவின் இயக்கமாக இருந்தாலும் அவர்களின் ஆயுதப் போராட்டத்திற்கும் இவருக்கும் எந்த தொடர்பும் இருக்கவில்லை.
இருந்தும் இலங்கை அரசு வேண்டுமென்றே இவரை கைது செய்து சித்திரவதை செய்தது. சிறையில் இருந்து விடுதலை ஆகி வந்ததும் ஜே.வி.பி யினரின் விடுதலைக்காக குரல் கொடுத்தார்.
அதுமட்டுமல்லாமல் தனது ஆசானாக கருதிய மாசேதுங் இன் சீன அரசு இலங்கை அரசுக்கு செய்த ஆயுத உதவிக்காக தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.
1989களில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் அவரிடம் பல அரசியல் விடயங்களில் விளக்கம் பெறவும் முடிந்தது.
அப்போது இந்திய நக்சலைட் தோழர்கள் நேரில் காண விரும்பி “அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடியுமா?” என என்னிடம் கேட்டனர்.
ஆனால் அவர் உடல்நலம் அதற்கு இடம் தரவில்லை. பைபாஸ் ஆப்பிரேசன் செய்து மிகவும் பலவீனமான நிலையில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.
எனவே என்ன செய்யலாம் என நான் யோசித்துக்கொண்டிருந்தவேளை எனது நண்பர் வரதன் “ஒரு வீடியோ பேட்டி எடுத்து அதைக் கொண்டுபோய் காட்டலாம் என்றும் அதற்கு தான் உதவுவதாகவம்” கூறினார்.
அவர் கூறியபடி நான் தோழர் சண் அவர்களிடம் இலங்கைப் பிரச்சனை, சர்வதேச பிரச்சனை. மாக்சிய தத்துவ பிரச்சனை என 17 கேள்விகள் கேட்டேன். அதற்கு அவர் விரிவாக பதில் அளித்தார்
இந்த வீடியோ பேட்டி சுமார் இரண்டு மணி நேரம் கொண்டது. இதை வரதனின் நண்பர் ஊடகவியலாளர் சீவகன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
இங்கு வருத்தம் என்னவெனில் இந்த வீடியோவின் ஒரு பிரதிகூட இப்போது என்னிடமோ அல்லது வேறுயாரிடமோ இல்லை என்பதுதான்.
இந்நிலையில் தோழர் சண் அவர்கள் “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்னும் நூலை எழுதியிருந்தார். இதன் ஆங்கில பதிப்பு முதலில் வெளியிடப்பட்டது. தமிழ் பதிப்பு வெளிவரவில்லை.
எனவே தமிழ் பதிப்பை அச்சிட்டு வெளியிடுமாறு அவர் என்னிடம் கேட்டார். அதனால் நான் உடனே இந்தியா சென்று தமிழ்நாடு அமைப்புக் கமிட்டியினரின் “கிளாரா” பதிப்பகத்தில் இந் நூலை அச்சிட்டு வெளியிட்டேன்.
அச்சடித்தவுடன் உடனடியாக ஜந்து பிரதிகளை தோழர் சண் அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். அவரும் பெற்றுக் கொண்டதும் மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.
இதுதான் அவருக்கும் எனக்குமான கடைசி தொடர்பு ஆகும். ஏனெனில் அவரின் கடிதம் கிடைத்த சில நாட்களில் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டேன்.
வேலுர் சிறப்புமுகாமில் நான் இருந்தவேளை ஒருநாள் “தோழர் சண் அவர்கள் இங்கிலாந்தில் இறந்துவிட்டார்” என்ற செய்தி பத்திரிகைகளில் வந்தது. உடனே என்னுள் ஒரு கேள்வி எழுந்தது. அது என்ன என்பதை இறுதியில் கூறுகின்றேன்.
நான் சிறையில் இருந்து விடுதலையாகி இலங்கை வந்து கொழும்பில் தங்கியிருந்தபோது தினக்குரல் ஆசிரியர் தனபாலசிங்கம் அவர்களுடன் ஒருநாள் உரையாடிக் கொண்டிருக்கும்போது சண் அவர்களின் மருமகன் டாக்டர் தம்பிராசா அவர்களின் முகவரியை தந்து அவரிடம் சிலவேளை நான் எடுத்த பேட்டியின் வீடியோ பிரதி இருக்கக்கூடும் என்றார்.
நான் லண்டன் வந்ததும் பேர்மிங்காமில் இருந்த சண் அவர்களின் மருமகன் தம்பிராசா அவர்களுடன் தொடர்பு கொண்டேன்.
அவர் என்னை அழைத்துச் சென்று சண் அவர்கள் கடைசியாக தங்கியிருந்த வீடு, வழக்கமாக உட்கார்ந்து இருந்த சாய்மனைக்கதிரை, அவர் எழதிய டயறி எல்லாவற்றையும் காட்டினார். இறுதியாக சண் அவர்களை அடக்கம் செய்யப்பட்ட இடத்தையும் காட்டினார்.
ஆனால் சண் அவர்களிடமும் அந்த பேட்டி வீடியோ பிரதி இருக்க வில்லை. இது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. இறுதியாக விடைபெறும்போது நான் மேலே குறிப்பிட்ட நீண்டநாட்களாக என் மனதில் இருந்த அந்த கேள்வியைக் கேட்டேன்.
மிகவும் உறுதியாக செயற்பட்டு வந்த தோழர் சண் எப்படி போராட்டத்தைக் கைவிட்டு நாட்டை விட்டு வெளியெறி இங்கிலாந்தில் வந்து தங்கினார் என்பதே அந்த கேள்வியாகும்.
அவருடைய மகள் அவரைப் பார்க்கப் போனபோது அவருடைய கட்டில்; மேல் சுவரில் ஒரு துண்டு ஒட்டப்பட்டிருப்பதை கண்டிருக்கிறார். அதில் சண் அவர்கள் “ நான் இறந்தால் இதில் உள்ள என் மகளின் நம்பருக்கு போன் பண்ணி தெரிவியுங்கள்” என்று எழுதியிருந்தார்.
இதைப்படித்ததும் தன் தந்தை தனிமையில் படும் கஸ்டத்தை புரிந்து இனியும் அவரை தனியே விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து தன்னுடன் இங்கிலாந்து அழைத்து சென்றுள்ளார்.
சண் அவர்கள் இங்கிலாந்து செல்ல விரும்பவில்லை. அவர் தொடர்ந்தும் நாட்டில் இருக்கவே விரும்பியிருக்கிறார். ஆனால் மகள்தான் வற்புறுத்தி அழைத்து வந்ததாக மருமகன் தம்பிராசா கூறினார்.
தான் நேசித்த நாட்டையும் போராட்டத்தையும் விட்டுச் சென்றதை அவரால் தாங்க முடியவில்லை போலும் சில நாட்களில் அவர் மரணத்தை தழுவிவிட்டார்.
ஆனால் இங்கிலாந்தில் இருந்த அந்த சொற்ப காலத்திலும்கூட அவர் சர்வதேச புரட்சிகர இயக்கங்களை ஒன்று சேர்த்து ஒரு சர்வதேச அகிலத்தை கட்ட முனைந்துள்ளார் என்பதை அறிந்தபோது உண்மையில் தோழர் சண் இறுதிவரை புரட்சிக்காக உழைத்த உண்ணதமான தோழர் என்பதை உறுதி செய்து கொண்டேன்.
இத்தகைய தோழருடன் குறகிய காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியே என்றாலும் அவரது வாயால் நான் “தோழர்” என்று அழைக்கப்பட்டதையே பெருமையாகவும் பாக்கியமாகவும் கருதுகிறேன்.
குறிப்பு- ஊடகவியலாளர் சீவகன் அவர்கள் மீண்டும் தோழர் சண் குறித்த ஆவணம் ஒன்றை தயாரித்து தந்துள்ளார். ஆனால் அதை நான் இனி தவற விடமாட்டேன். அதைப் பாhக்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணைப்பில் பார்வையிடலாம்.

No comments:

Post a Comment