Saturday, December 21, 2019

•கூழ்முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை!

•கூழ்முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை!
இதுவரை முதலாளித்து ஊடகங்கள் பெரும்பாலும் ஸ்டாலினையே கொலைகாரன் என்று எழுதி வந்துள்ளன. அவை ஒருபோதும் லெனினை கொலைகாரன் என்று எழுதியதில்லை.
ஆனால் ஐபிசி ஊடக நிராஜ் டேவிட் அவர்கள் லெனினை கொலைகாரனாக அதுவும் 70 லட்சம் இனப் படுகொலைகளை செய்ததாக கூறியிருக்கிறார்.
நிராஜ் டேவிட் உண்மையின் தரிசனம் என்று கூறிக்கொண்டு எந்தவித ஆதாரமும் இன்றி பொய்களை பிரசுரித்து வருகிறார்.
எந்தவித தகவல் தொழில் நுட்பமும் வளராத 1917ல் ரஸ்சியாவில் நடந்தது “யுகப் புரட்சி” என்று எட்டயபுரத்தில் இருந்த பாரதியாருக்கு தெரிகிறது. ஆனால் 100 வருடம் கழித்து லண்டனில் இருக்கும் நிராஜ் டேவிட்க்கு அது இனப் படுகொலை என்று தெரிகிறது.
முதன் முதலில் உலகில் தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என அறிவித்து அதனை தன் அரசில் செயற்படுத்தியவர் லெனின். ஆனால் அந்த லெனின் 70 லட்சம் மக்களை இனப் படுகொலை செய்தார் என்று கொஞ்சம்கூட கூச்சமின்றி கூறுகிறார் நிராஜ் டேவிட்.
அவர் லெனினையும் ஸ்டாலினையும் இனப் படுகொலை செய்தவர்கள் என்று கூறுகிறார்.
ஸ்டாலின் அளவிற்கு உலக முதலாளித்துவத்தால் அவதூறு செய்யப்பட்ட தலைவர் வேறுயாரும் இல்லை. அதற்கு காரணம் அவரது ஆட்சி தோற்றுவித்தது வேதனைகள் அல்ல. மகத்தான சாதனைகள்.
மிகவும் பின்தங்கிய விவசாய நாடாக இருந்த ரசியாவை பதினைந்தே ஆண்டுகளில் தொழில் வல்லரசாக மாற்றியதும் பத்து சத வீதம் கூட கல்வியறிவு பெற்றிராத நாட்டை ஏறத்தாழ நூறு சதவீதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்றியதும் உலகப் பொருளாதாரமே நெருக்கடியில் சிக்கிய 1930 களில் ரசியா மட்டும் முன்னேறியதும் கிட்லரிடமிருந்து உலகையே காப்பாற்றியதும் ஸ்டாலின் தலைமையில் ரசிய மக்கள் சாதித்த வெற்றிகள். இவற்றுக்கு ஈடு சொல்லும் வெற்றிகள் இன்றுவரை உலகில் கிடையாது.
பிறப்பால் உயர்ந்தவர்களும் மன்னர்களும் முதலாளிகளும் மட்டும்தான் நாடாள முடியும் என்று நம்பிக் கொண்டிருந்த உலகத்தில் உழைக்கும் வர்க்கம் உலகாள முடியும் என்று நிரூபித்துக் காட்டியது கம்யூனிசம். ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியின் மகன் ஸ்டாலின் உலகத் தலைவராக முடியும் என்று நிரூபித்துக் காட்டியது ரசிய கம்யுனிஸ்ட் கட்சி.
ஸ்டாலின் மறைந்து சுமார் 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும்கூட அவர் மீது இந்த முதலாளித்துவம் அவதூறுகளை பரப்பி வருகின்றது.
கிட்லரின் நண்பரான அமெரிக்கப் பத்திரிகை முதலாளி ரடால்ப் கெர்ஸ்ட் குடும்பத்திற்குச் சொந்தமான நியூயார்க் மார்னிங் போஸ்ட் 24 வார இதழ்கள் 12 வானொலி நிலையங்கள் ஆகிய அனைத்தின் மூலமும் 1930 முதலே தொடங்கி விட்டது இந்த ஸ்டாலின் எதிர்ப்பு பிரச்சாரம்.
ஹிட்லரின் வலதுகரமான கோயரிங்கின் கட்டுரைகளைப் பிரசுரிக்குமளவிற்கு வெளிப்படையான நாஜி ஆதரவாளன் கெர்ஸ்ட். கனடா நாட்டுப் பத்திரிகையாளர் டக்ளஸ் டோட்டில் எழுதிய நூல் இவையனைத்தையும் அம்பலமாக்கிறது.
இன்னொரு ஸடாலின் எதிப்பாளரான ராபர்ட் கான்குவெஸ்ட் பிரிட்டிஸ் உளவு நிறுவனமான எம்-15 இன் கையாள் என்பதையும் நிரூபிக்கின்றார் டோட்டில். ஸ்டாலின் காலத்தில் லட்சக்கணக்கானோர் படுகொலை பட்டினிச்சாவு என்பதெல்லாம் கான்குவெஸ்ட் உருவாக்கிய புனைகதைகள்.
1943 இல் கிட்லர் ஆக்கிரரமிப்புக்கு எதிராக ரசியா போராடிக் கொண்டிருந்தபோது “விலங்குப் பண்ணை” என்ற நாவல் மூலம் கம்யூனிசத்தை அவதூறு செய்த ஜார்ஜ் ஆர்வெல், கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டர், “பகலில் இருள்” என்ற ஸ்டாலின் எதிர்ப்பு நூல் எழுதிய கீஸ்லர், பிரபல அறிஞர் ரஸ்ஸல் ஆகிய அனைவரும் கம்யுனிச எதிர்ப்புப் பிரச்சாரத்திற்காக பிரிட்டிஸ் உளவு நிறுவனத்திடமிருந்து காசு வாங்கியிருக்கிறார்கள். இந்த உண்மை 1996 இல் பிரிட்டனில் வெளியாகி சந்தி சிரித்தது.
வெளிநாட்டவர்கள் இருக்கட்டும். ரசிய எழுத்தாளரும் நோபல் பரிசு பெற்றவருமான சோல் ஜெனிட்சின்னே ஸ்டாலின் ஆட்சியைப் பற்றி சொல்லவில்லையா என்று வாதிடலாம். அவருக்கு நோபல் பரிசு கிடைக்கக் காரணமே ஸ்டாலினையும் கம்யூனிசத்தையும் அவதூறு செய்து எழுதியதுதான்.
வியட்நாமில் இருந்து அமெரிக்கா விரட்டப்பட்ட பின்னரும் “மறுபடியும் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும்” என்று அறை கூவல் விட்டவர் இந்த சோல்ஜெனிட்சின். அவருடைய யோக்கியதைக்கு இதற்கு மேல் சான்று தேவையா?
பழைய ரசிய கம்யுனிஸ்ட் அரசின் ஆவணக் காப்பகங்களைத் திறந்தால் பல திகிலூட்டும் உண்மைகள் வெளிவரும் என அமெரிக்க முதலாளித்துவத்தின் கூலி எழுத்தாளர்கள் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஜெம்ஸ்கோல் டௌஜின் எழவன்ஜீக் என்ற ரசிய வரலாற்று ஆசிரியர்கள் ரசியக் கம்யுனிஸ்ட் கட்சியின் ஆவணக் காப்பக ஆதாரங்களை ஆராய்ந்து 1990 முதல் ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதினார்கள்.
ஸ்டாலின் ஆட்சிக் காலம் பற்றி கூறப்பட்டவையலெ;லாம் புளுகு மூட்டைகள் என்பதையே இவை நிரூபித்தன. ஆனால் இவை முதலாளித்துவ நாட்டுப் பத்திரிகைகளால் இருட்டடிப்புச் செய்யப்பட்டன.
மிச்சமிருப்பவை அமெரிக்கப் பொய்கள் மட்டும்தான். இதைப் புரிந்து கொள்ள அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை. ஈராக் நாட்டில் நடந்ததைப் பார்த்தால் போதும்.
பேரழிவு ஆயுதங்களை சதாம் வைத்திருப்பதாகச் சொல்லி பல லட்சம் ஈராக் மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்கா. ஆனால் இப்போது பேரழிவு ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பதை அமெரிக்க அரசே ஒப்புக்கொண்டுள்ளது.
ஒரு சதாமை வீழ்த்தவே இவ்வளவு புளுகு! தன்னுடைய முதலாளித்துவ சாம்ராஜ்ஜியத்தையே ஆட்டம் காணச்செய்த ஸ்டாலினுக்கும் கம்யுனிசத்திற்கும் எதிராக எவ்வளவு புளுகியிருப்பார்கள் என்பதை சிறிது கற்பனை செய்து பாருங்கள்?
லெனினுடைய மறைவுக்குப் பின் உலகின் முதல் சோசலிச நாட்டை உருவாக்கிக் காட்டிய ஸ்டாலின் பணி மகத்தானது. ஸ்டாலின் தலைமையிலான ரசியாவிற்கு நேரில் சென்று வந்த தாகூர் இவ்வாறு பாராட்டியிருக்கின்றார்.
கலைவாணர் என்.எஸ்.கே இரும்புத்திரை நாடு என்று ரசியாவை சித்தரித்த முதலாளிகளின் பொய்ப்பிரச்சாரத்தை கேலி செய்து கட்டுரை எழுதியிருக்கின்றார்.
ரசியாவின் சிறைகள் உள்ளிட்ட எல்லா இடங்களுக்கும் சுதந்திரமாகச் சென்று பார்த்த தந்தை பெரியார் “இதுதான் உண்மையான மனிதர்கள் வாழும் நாடு” என்று பாராட்டியிருக்கின்றார்.
இத்தனைக்கு பிறகும் லெனின் மற்றும் ஸ்டாலின் மீது அவதூறு பொழியும் நிராஜ் டேவிட்டை என்னவென்று அழைப்பது?
ஆயிரம் கைகளால் ஆதவன் வருகையை தடுக்க முடியுமா? அவதூறுகள் மூலம் லெனின் மற்றும் ஸ்டாலின் புகழை அழிக்க முடியுமா? முடியாது. முடியாது. ஒருபோதும் முடியாது. அவர்கள் ரஸ்சியப்புரட்சியின் வரலாற்று நாயகர்கள்
கூழ் முட்டைகள் குஞ்சு பொரிப்பதில்லை. அதுபோல் நிராஜ் டேவிட் எழுத்துக்கள் மக்களுக்கு பயன் தரப் போவதில்லை. இதை தமிழ் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment