Saturday, December 21, 2019

• தாமரை பெருஞ்சித்திரனாருடான நினைவுகள்

• தாமரை பெருஞ்சித்திரனாருடான நினைவுகள்
இன்று தாமரை பெருஞ்சித்திரனார் அவர்களின் 7வது நினைவு தினம். அவருடான சில நினைவுகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பாவலேறு பெருஞ்சித்திரனாரை பலரும் அறிவார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை உறுதியாக ஈழத் தமிழர்களை ஆதரித்தவர் என்பதையும் அறிவார்கள்.
அவருடைய மனைவிதான் தாமரை அம்மையார். அவருடைய மகன் தோழர் பொழிலன். அவர் மூலமே இக் குடும்பத்தினரின் அறிமுகம் எனக்கு கிடைத்தது.
இந்த உணர்வாளர்களின் குடும்பங்களில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால் வீட்டில் சாப்பாடு இருக்கிறதா என்றுகூட அறியாமல் கணவர் திடீரென்று சாப்பிடுவதற்கு ஆட்களை கூட்டி வந்துவிடுவார்கள் அதை முகம் சுழிக்காமல் சமாளிக்க வேண்டும்.
தாமரை அம்மையாருக்கு இரண்டு பக்கத்தில் இந்த சிக்கல். கணவர் பெருஞ்சித்திரனாரும் ஆட்களை அழைத்து வருவார். மகன் பொழிலனும் அழைத்து வருவார்.
தோழர் தமிழரசன் இறந்த பின்னர் தமிழ்நாடு விடுதலைப்படையை மீண்டும் கட்டும் பணியில் பொழிலன் அவர்களை நான் அடிக்கடி சந்திப்பதுண்டு. அவ்வேளைகளில் அவர் என்னை அழைத்துச் சென்று தன் வீட்டில் உணவு தருவதுண்டு.
திடீரென்று சாப்பிட போவது நிச்சயம் அவர்களுக்கு சிரமம் கொடுப்பதாக இருக்கும் என்று எண்ணி நான் தயங்கினால் “ அதெல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம். அம்மா எல்லாம் பார்த்துக்குவாங்க” என்றுகூறி பொழிலன் என்னை அழைத்துச் சென்றுவிடுவார்.
அதேபோல் தாமரை அம்மையாரும் இன்முகத்துடன் எம்மை வரவேற்று உணவு பரிமாறுவார். “கடைகளில் சாப்பிட்டு உடம்பைக் கெடுக்காமல் எப்ப வேண்டுமானாலும் உங்கள் வீடுபோல் நினைத்து தாராளமாக வந்து சாப்பிட்டுச் செல்லுங்கள்” என்று கூறுவார்.
உணவு பரிமாறும் வேளைகளில் ஈழத்தில் நடக்கும் போராட்ட விபரங்களையும் அவர் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்து கொள்வார். இவருடன் பேசுவது பிரச்சனை இல்லை. ஆனால் சில வேளைகளில் பெருஞ்சித்திரனார் அவர்களும் திடீரென்று வந்து எம்முடன் சேர்ந்து உணவு உட்கொள்வார்.
அவருடன் பேசுவதுதான் பிரச்சனை. அவர் ஆங்கிலம் கலக்காமல் தனித் தமிழில் பேசுவார். எங்களையும் அவ்வாறு பேச வேண்டும் என்று விரும்புவார்.
உதாரணமாக “எப்படி வந்தீர்கள் தம்பி?” என்று அவர் கேட்க நான் “பஸ்ஸில் வந்தேன்” என்று கூறுவேன். அதற்கு அவர் “ஓ! பேரூந்தில் வந்தீர்களா?” என்பார். நான் பொழிலனைப் பார்த்து முழிப்பேன். பொலிலன் என் நிலையை உணர்ந்து சிரித்துவிட்டு ஒருமாதிரியாக என்னை காப்பாற்றிவிடுவார்.
பெருஞ்சித்திரனார் மட்டுமன்றி அந்த குடும்பத்தில் உள்ள அனைவருமே ஆங்கிலம் கலக்காமல் தனித் தமிழில் பேசுவது கண்டு நான் வியந்திருக்கிறேன்.
பின்னர் நான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் பெருஞ்சித்திரனார் அவர்கள் திடீரென்று மரணமடைந்து விட்டார்.
தந்தையார் இறந்த துன்பவேளையிலும் பொழிலன் எமது வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்திருந்தார். வழக்கு விசாரணையை விரைந்து முடித்து நான் விடுதலையாவதற்கு உதவிட வேண்டும் என்று கூறி தன் தாயாரே தன்னை அனுப்பி வைத்ததாக பொழிலன் கூறினார்.
தன் கணவர் இறந்த நிலையிலும் வழக்கு விரைந்து முடிப்பது தன் மகனுக்கு தீங்காக முடியலாம் என்று தெரிந்தும் எனது விடுதலைக்காக மகனை அனுப்பி வைத்த அந்த அம்மையாரின் உணர்வுகள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியதே.
அதுமட்டுமல்ல ஆரம்பகால ஈழத்து மூத்த பெண் போராளியான ஊர்மிளா அக்காவையும் பல மாதங்களாக தன் வீட்டில் வைத்து பராமரித்தவர் இந்த தாமரை அம்மையார்.
1983ம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் பலரும் ஈழப் போராளிகளுக்கு உதவி செய்தார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு சிலரே உதவி செய்தனர். அவ்வாறு உதவி செய்தவர்களில் தாமரை அம்மையாரும் பாவலேறு பெருஞ்சித்திரனார் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஈழத் தமிழர்களின் மனங்களில் அவர்கள் என்றும் நன்றியுடன் நினைவு கொள்ளப்படுவர்.

No comments:

Post a Comment