Saturday, December 21, 2019

பேரவை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரம்

மக்களுக்காக மரணித்த மாவீரர்களை மக்கள் எப்போதும் தாங்கிப் பிடிப்பார்கள்.
இவ் வரிகளை நிரூபிக்கும் ஒரு சம்பவம் கடந்த மாவீரர் மாதத்தில் எனக்கு ஏற்பட்டது.
எனது முகநூலில் உள்ள மாதகலைச் சேர்ந்த நண்பர் ஒருவர் கீழே உள்ள படத்தை தந்ததுடன் அவர் பற்றிய நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.
படத்தில் உள்ளவர் எமது பேரவை இயக்கத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரம். இவர் மலையகத்தைச் சேர்ந்தவர். 1983ம் ஆண்டு எமது அமைப்பில் வந்து சேர்ந்தவர்.
மாதகலில் எமது இந்திய பயணங்களைக் கவனிக்கும் பொறுப்பாளராக செயற்பட்டார்.
அதன்பின் 1985ம் ஆண்டளவில் அநுராதபுரத்தில் உள்ள மகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதலில் பங்குபற்றி வீர மரணம் அடைந்தார்.
என்னிடம் அவர் படம் இல்லை. அதுமட்டுமல்ல அவர் இறந்த விபரம்கூட என் நினைவில் இல்லை.
ஆனால் 29 வருடங்களாக அவர் படத்தை பாதுகாத்து வைத்திருந்ததுடன் அதை என்னிடம் சேர்ப்பித்துள்ள இந்த நண்பரின் உணர்வுகள் உண்மையில் பாராட்டுக்குரியது.
தோழர் சுந்தரம் இறந்தபோது மாதகலில் தாங்கள் சிறிய அஞ்சலிப் பிரசுரம் வெளியிட்ட நினைவுகளையும் அவர் என்னிடம் பகிர்ந்தார்.
இந்த நண்பரின் செயற்பாடு “மக்கள் தங்களுக்காக மரணித்த மாவீரர்களை ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்” என்பதை நிரூபித்துள்ளது.
குறிப்பு - இந்த மகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதலில் இறந்தவர்களில் தோழர் அமரசிறீ என்னும் சிங்கள தோழரும் ஒருவர். அவரையும் நினைவில் கொள்வோம்.

No comments:

Post a Comment