Saturday, December 21, 2019

மலையகம் சென்று அவர்களுக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி போராடியவர் தோழர் நெப்போலியன்.

மலையகத்தைச் சேர்ந்த தோழர் சுந்தரம் மகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதலில் வீர மரணம் அடைந்த விபரம் கடந்த பதிவில் தெரிவித்திருந்தேன்.
அந்த தாக்குதலில் மலையகத்தைச் சேர்ந்த டிஸ்கோ பாஸ்கரன் என்பவரும் பங்கு பற்றியிருந்தார்.
அவர் காயம்பட்ட நிலையில் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதன் பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவரும் எமது இன்னொரு தோழரான கருணாவும் ( தடியன்) சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட போது சிறைவாசலில் வைத்து ராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டனர்.
சிறையில் இவர்கள் ஜே.வி.பி இயக்கத்தினருடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்பதால் இவ்வாறு ராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிய வந்தது.
ஜே.வி.பி யினருடன் உறவு கொண்டதற்காக இரண்டு தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டது இப்போது உள்ள ஜே.வி.பி தலைமை அறிந்திருக்குமா என்று தெரியவில்லை.
இந்த மகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதலை தலைமை தாங்கி நடத்தியவர் தோழர் நெப்போலியன்.
எல்லா இயக்கங்களும் மலையக இளைஞர்களை தங்களுடன் சேர்த்து போராடிய வேளை மலையகம் சென்று அவர்களுக்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி போராடியவர் தோழர் நெப்போலியன்.
மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO) என்ற அமைப்பை மலையக தமிழர்களுக்காக உருவாக்கியவர் தோழர் நெப்போலியன்.
இந்நிலையில் இந்திய உளவுப்படையின் வேண்டுகோளுக்கு இணங்க ஈரோஸ் இயக்கத்தால் தோழர் நெப்போலியன் அந்த மலையக மண்ணில் வைத்து நயவஞ்சமாக கொல்லப்பட்டார்.
குறிப்பு - சரி. இதையெல்லாம் இப்போது எதற்காக கூறுகின்றேன் என நீங்கள் நினைக்க கூடும். யாழ்ப்பாணத்தில் இரண்டு இந்திய தூதர் எதற்கு என்று கேட்டு முரளிதரன் பற்றி நான் பதிவு போட்டது மலையக தமிழர்களை இழிவு படுத்தியுள்ளது என்று லண்டனில் இருக்கும் ஒருவர் எழுதியுள்ளார். இனியாவது அவர் என்னை உணர்ந்து கொள்வதற்காகவே இந்த பதிவு.

No comments:

Post a Comment