Saturday, December 21, 2019

சார்லஸ் பிராட்லாவும் தலைவர் சம்பந்தர் ஐயாவும்

•சார்லஸ் பிராட்லாவும்
தலைவர் சம்பந்தர் ஐயாவும்
இங்கிலாந்தில் சார்லஸ் பிராட்லா என்பவர் 1890ல் தேர்தலில் எம்.பி யாக தெரிவு செய்யப்பட்டார்.
அவருக்கு கடவுளின் பெயரால் பதவிப்பிரமாணம் செய்ய அழைத்தபோது அவர் மறுத்துவிட்டார். ஏனெனில் அவர் கடவுள் நம்பிக்கை அற்ற ஒரு நாத்திகர்.
“இந்த நாட்டின் அரசியல்சாசனம் கடவுள் இருக்கிறது என்று நம்புகிறது. எனவே அதற்குக் கட்டுப்பட்டு 'கடவுள் சாட்சியாக' என்று கூறி பதவி பிரமாணம் எடுக்க மறுத்தால் உங்கள் தேர்வு ரத்து செய்யப்படும்" என்று அவருக்கு கூறப்பட்டது.
அதற்கு பிராட்லா “இந்த அவையின் ஆயுள்காலம் ஐந்து ஆண்டுகள்தான்; இந்த ஐந்து ஆண்டுகளுக்காக என் ஆயள் முழுவதும் நான் கட்டிக்காத்துவரும் என் கொள்கைகளை விட்டுவிடமுடியாது” என்று கூறிவிட்டார்.
இதனால் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது தேர்வை ரத்து செய்தார்கள். அவருடைய தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடந்தது மீண்டும் பிராட்லா போட்டியிட்டார்; மீண்டும் அவர் வெற்றி பெற்றார்;
மீண்டும் அவர் கடவுள் பெயரால் பதவிப்பிரமாணம் எடுக்க மறுத்தார். அதனால் மீண்டும் அவர் தேர்வு ரத்துச் செய்யப்பட்டு மீண்டும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.
மீண்டும் பிராட்லா போட்டியிட்டு மீண்டும் அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் மீண்டும் அவர் கடவுள் பெயரால் பதவிப்பிரமாணம் எடுக்க மறுத்துவிட்டார்.
இதனால் மீண்டும் மூன்றாவது முறையாக இடைத் தேர்தல் நடத்தினார்கள். அதன் பின்னரும் அவர் மீண்டும் போட்டியிட்டு மக்களால் தெரிவு செய்யப்பட்டார்.
அவர் கூறினார் "நான் யார், என் கொள்கைகள் என்ன என்பதைத் தெரிந்துகொண்டுதான் என் தொகுதி மக்கள் என்னை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள்; என் தேர்வை ரத்துச்செய்வதன் மூலமாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்; அவர்களுடைய ஜனநாயக உரிமைகளை இழிவு செய்கிறீர்கள்; அவர்களுடைய தன்மானத்திற்கே சவால் விடுகிறீர்கள்" என்றார்.
இதனால் இந்தமுறை பாராளுமன்றம் பணிந்தது. "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், கடவுளின் பெயரால் மட்டுமன்றி மனசாட்சியின் பெயராலும் பதவி ஏற்கலாம்" என்று அரசியல் சட்டமே திருத்தப்பட்டது.
இன்று உலகெங்கும் பகுத்தறிவுவாதிகள் மனசாட்சியின் பெயரால் பதவி ஏற்பதற்கு சாரலஸ் பிராட்லாதான் காரணம்.
சரி இப்போது இதை ஏன் நான் கூறுகின்றேன் என்று நீங்கள் நினைக்கலாம். கொஞ்சம் பொறுமையாக மீதியையும் படியுங்கள்.
இலங்கையில் தமிழ் தலைவர்கள் “தமிழீழம்” என்னும் தனிநாட்டுக் கொள்கையை முன்வைத்து தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் எம்.பியாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
ஆனால் பாராளுமன்றத்தில் ஜக்கிய இலங்கைக்கு விரோதமாக செயற்பட மாட்டோம் என உறுதிமொழியை கூறி பதவிப்பிரமாணம் செய்தார்கள்.
அதுமட்டுமல்ல பிரிவினை கோருவது குற்றம் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டபோது இத் தலைவர்கள் தமது கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கக்கூடும்.
ஆம். அவர்கள் தூக்கி எறிந்தார்கள். ஆனால் பதவியை அல்ல. தமது தமிழீழக் கொள்கையையே அவர்கள் தூக்கி எறிந்தார்கள்.
ஏன் தமிழீழம் கேட்டார்கள்? அப்புறம் ஏன் தமிழீழத்தை கைவிட்டார்கள்? மனட்சாட்சி உள்ள எந்தவொரு தமிழ் தலைவராவது கூறட்டும் பார்க்கலாம்.
பிராட்லா கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்தார். எமது தமிழ் தலைவர்கள் பதவிக்காக கொள்கையை தூக்கி எறிந்தார்கள்.

No comments:

Post a Comment