Saturday, March 27, 2021

பெண் விடுதலை குறித்து ( பகுதி – 2)

•பெண் விடுதலை குறித்து ( பகுதி – 2) அவர் சுமந்து சென்ற வெடி பொருள் 50 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால் அவரின் எடையோ 60 கிலோதான். சிறு படகில் சென்றால்கூட ராடரில் தெரிந்துவிடும்; என்பதால் இந்த வெடி பொருட்களுடன் அவர் நீந்தி சென்ற தூரம் கிட்டத்தட்ட 17 மைல்கள் என்கிறார்கள். அவர் எட்டு மணி நேரம் நீந்தி சென்று தாக்குதலை மேற்கொண்டார் என்று கூறுகிறார்கள். அடுத்த சில மணி நேரங்களில் தான் மரணமடையப் போகிறேன் என்று தெரிந்தும் அவரது கால்கள் சோரவில்லை. கைகள் செயல் இழக்கவில்லை. இலக்கை அடைந்தார். 326 அடி நீளம் , 51 அடி அகலம். 6300 தொன் எடை கொண்ட அதி நவீன ராடர் பொருத்தப்பட்ட போர்க்கப்பலை முழ்கடித்தார். இதைப் படிக்கும்போது இந்த வீர தீரச் செயலை செய்தவர் ஒரு இளைஞனாக இருப்பான் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால் ஆண்களே வியக்கும் இந்த சாதனையைப் புரிந்தவர் ஒரு பெண். அவர் பெயர் அங்கையற்கண்ணி. பெண்கள் பல்லிக்கும் கரப்பான் பூச்சிக்கும் பயந்தவர்கள் என்ற கதையே பெரும்பாலும் நாம் கேட்டு வருகிறோம். ஆனால் அவர்கள் பலமிக்கவர்கள் என்பதை கூறும் கதைகள் தந்திரமாக மறைக்கப்பட்டு வருகின்றன. இனி நாம் அங்கையற்கண்ணிகளின் கதைகளை கூறுவோம். இதேபோல பல சாதகைளை நிகழ்த்திய பெண்கள் கதைகள் இருந்தும் இன்றும் பெண்கள் அடிமைகளாகவே இருக்கின்றனர். அப்படியாயின் பெண்கள் இவ் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறுவது எப்போது? பொருளாதார நிலைமைகள் மாறி உற்பத்திக் கருவிகள் மீண்டும் சமூகத்தின் உடமையாகும்போது நிச்சயமாக அது முடிவுக்கு வரும். உற்பத்தியில் சமபங்குடையவராகப் பெண்ணின்நிலை மீட்கப்படும். அப்போது திருமணமும் ஒருதார முறையும் நிலைக்குமா என்பதை இப்போது கூறுவது கடினம். ஆனால் வேறுபட்ட பொருளாதார நிலைமைகள் வேறுபட்ட விதமான சமுதாயத்தை உருவாக்கும். அவ்வாறு மாறிய பொருளாதார சமூகநிலைமைகளின் கீழ் வாழும் மக்கள் தாம் வேண்டும் சமூக அமைப்பு எப்படியானதாயிருக்க வேண்டும் என்பதுபற்றி தமது சொந்த முடிவுகளை எடுப்பர். அத்தகைய ஒரு சமூகத்தில் பெண்கள் விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாயிருப்பர் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment