Saturday, March 27, 2021

த கிரேட் இன்டியன் கிச்சன்

அவுஸரேலியாவில் இருக்கும் இலக்கியவாதிப் பெண் ஒருவர் “த கிரேட் இன்டியன் கிச்சன் என்ற மலையாளப்படத்தை பாருங்கள் தோழர்” என்று கூறினார். எனக்கு மலையாளம் தெரியாது என்ற படியால் “தமிழில் டப் பண்ணி வந்தபின் பார்க்கிறேன்” என்றேன். அதற்கு அவர் “இல்லை. இது ஆங்கில சப் டைட்லுடன் உள்ளது. எனவே நீங்கள் கட்டாயம் பார்த்து உங்கள் கருத்தை பகிர வேண்டும்” என கேட்டுக் கொண்டார். அதன்படி நேற்றையதினம் இப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. குத்துப்பாட்டு இல்லை. டுமீல் டுமீல் சண்டைக்காட்சிகள் இல்லை. இரட்டை அர்த்தம் தரும் காமடி இல்லை. ஆனாலும் படம் எவ்வித சலிப்பும் இன்றி பார்க்க முடிந்தது. அற்புதமான படம். நடித்தவர்கள்கூட சிறப்பாக நடித்துள்ளார்கள். இது பெண்கள் பார்க்க வேண்டிய படம் இல்லை. பெண்களின் வலிகளையும் உணர்வுகளையும் புரிந்து கொள்வதற்கு ஆண்கள் பார்க்க வேண்டிய படம். இந்த படம் பார்த்த பின் எனக்கு அம்மாவின் நினைவுகளே வந்தது. “அம்மா பசிக்குது” என்று என் ஒற்றை வார்த்தை கேட்டவுடன் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தன்னால் முடியவில்லை என்றுமே சொன்னதில்லை. உடனே அடுப்படிக்கு ஓடிச் சென்று சமைத்து உணவு தருவார். ஆனால் ஒருநாள்கூட நான் அவர் உணவை பாராட்டியதில்லை. நான் ஒரு மிகவும் மோசமான ஆண். வெட்கப்படுகிறேன்.

No comments:

Post a Comment