Sunday, October 29, 2023

1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில்

1998ம் ஆண்டு நான் மேலூர் சிறப்புமுகாமில் இருந்து விடுதலையான போது என்னை பொலிஸ் காவலுடன் சென்னை விமான நிலையம் அழைத்துச் சென்றனர். பொதுவாக சிறப்புமுகாமில் இருந்து இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்களை சென்னை விமான நிலையத்தின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு விமானம் புறம்படும் நேரம் விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்வார்கள். ஆனால் என்னை வழக்கத்திற்கு மாறாக மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்க வைத்தார்கள். புதிதாக கட்டப்பட்ட கட்டிடம். நன்றாக இருந்தது. பங்காரு அடிகளார் கட்டிக் கொடுத்தது என்றார்கள். அடுத்த வாரம் அமைச்சர் வந்து திறப்பு விழா செய்ய விருப்பதாக கூறினார்கள். கழிப்பறை குளியல் அறை எல்லாம் சுத்தமாக இருந்தது. பைப்பில் தண்ணீர் நன்றாக வந்தது. அறை எல்லாம் ரியூப் லைற் மின்விசிறி என ஏதோ ஓட்டல் போல் இருந்தது. காலையில் என்னை அருகில் உள்ள பங்காரு அடிகளாரின் கோயிலுக்கு பொலிசார் அழைத்துச் சென்றனர். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கொண்டிருந்தனர். ஆண் பெண் எல்லோரும் செவ்வாடை உடுத்திருந்தனர். எல்லோரும் முதலில் பங்காரு அடிகளாரை வணங்கினார்கள். அப்புறம்தான் உள்ளே சென்று கடவுளை வணங்கினார்கள். கடவுள் இருக்கு என்று கூறுபவனைக்கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் தான் கடவுள் என்று கூறும் மனிதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளக்கூடாது. ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர். சாதாரண சயிக்கிளில் சென்றவர். இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யும் அளவிற்கு வளர்ந்திருக்கிறார். மக்களின் அறியாமையை பயன்படுத்தியே அவர் இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறார். பின்னர் அவர்கள் என்னை அப்படியே அங்கிருந்து விமானம் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விமானம் புறப்பட பல மணி நேரம் இருந்தும் விமான நிலையத்திற்குள் நேராக அழைத்துச் சென்று உள்ளே ஒரு அறையில் இருத்திவிட்டனர். என்னை யாரும் சந்தித்துவிடக்கூடாது என்பதற்காகவே மேல்மருத்துவத்தூர் பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டேன் என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். தோழர் பொழிலன் உட்பட பல நண்பர்கள் என்னை வழியனுப்ப வந்து என்னை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். குறிப்பு – என்னை விமான நிலையத்திற்குள் அழைத்துச் செல்லும்போது வாசலில் காத்திருந்த சில நண்பர்கள் எடுத்துக் கொண்ட படம் கீழே உள்ளது.

No comments:

Post a Comment