Monday, October 30, 2023

காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு

காங்கேசன்துறை மற்றும் நாகபட்டினத்திற்கு இடையில் பெரும் ஆராவாரத்தோடு கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு தானே காரணம் என்று ஈழத்து சிவசேனைத்தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அறிக்கை விட்டார். சேவை தொடங்கிய அடுத்த நாள் போதுமான பயணிகள் இல்லை என நிறுத்தப்பட்டது. அடுத்து காலநிலை காரணம் என்று தற்போது ஓரேயடியாக நிறுத்தப்பட்டுவிட்டது. கப்பற்சேவை ஆரம்பித்தமைக்கு தானே காரணம் என்று அறிக்கைவிட்ட சச்சிதானந்தம் அவர்கள் கப்பற்சேவை நிறுத்தப்பட்டது குறித்து கருத்து எதுவும் கூறவில்லை. இப்போது தலைமன்னார் மற்றும் இராமேஸ்வரத்திற்கு இடையில் கப்பற் சேவை ஆரம்பிக்கப்போவதாக கதை கூறுகின்றனர். ஆனால் இவர்கள் எல்லாம் மறைக்கும் ஒரு செய்தி என்னவெனில் 1984ம் ஆண்டுவரை தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்திற்கும் இடையில் கப்பல் சேவை இருந்தது என்பதை. அதுவும் இந்த கப்பற்சேவை ரயில் சேவையுடன் இணைக்கப்பட்டிருந்தது. அதாவது யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைவரை ரயில் நிலையத்திலேயே டிக்கட் பெற்றுக் கொள்ளலாம். நான் இவ்வாறு டிக்கட் பெற்று மதுரையில் எம்.ஜி.ஆர் தலைமையில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டை சென்று பார்த்து வந்தேன். கப்பற் சேவை மட்டுமல்ல அப்போது பலாலி மற்றும் திருச்சிக்கு இடையில் விமான சேவையும் இருந்தது. இவ்வாறு ஏற்கனவே இருந்த சேவைகளை மீண்டும் இப்போது ஆரம்பித்துவிட்டு ஏதோ பிரதமர் மோடி ஈழத் தமிழர் மீது இரக்கம் கொண்டு புதிதாக ஆரம்பித்திருப்பதாக கதை விடுகின்றனர்.

No comments:

Post a Comment