Sunday, January 31, 2016

இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி லெனர்ட் வூல்ஃப்

இலங்கையின் சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றி லெனர்ட் வூல்ஃப்
லெனர்ட் வூல்ஃப் கொலனிய நாட்களில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரித்தானிய சிவில் சேவையாளர். அவர் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பல காலம் சேவையாற்றினார். இந்த நிலையில் இருந்து அவரால் தெற்கின் சிங்கள கிராம மக்களின் வாழ்க்கையை அவதானிக்க முடிந்தது.
இதன் விளைவாக அவர் இங்கிலாந்து திரும்பிய பின்பு காட்டினிலே ஒரு கிராமம் என்னும் புகழ் பெற்ற நூலை எழுதினார். பழைய கிராமப் பொருளாதாரத்தின் குலைவையும் அதன் விளைவாக காடு கிராமத்தை விழுங்க முன்னேறி வந்துகொண்டிருந்தது எனவும் அந்த நூல் வியப்பூட்டும் விதமாக வர்ணித்திருந்தது. இது பத்தேகம என்ற கிராமத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது.
இங்கிலாந்து மீண்ட பின்பு லெனர்ட் வூல்ஃப் 1911ம் ஆண்டு சேவையில் இருந்து ஓய்வு பெற்று பிரித்தானியத் தொழிற்கட்சியில் குறிப்பாக ஃபேபியன் கழகம் என அழைக்கப்பட்டதான தொழிற்கட்சிக்கு மிகவும் இடது சார்பான அமைப்பில் செயலூக்கத்துடன் பங்குபற்றினார்.
முதலாம் உலகப்போரை அடுத்தே இலங்கைக்குச் சுதந்திரத்தைப் பரிந்துரைத்தவர்களுள் லெனர்ட் வூல்ஃப் ஒருவர். பின்னர் அவர் கொலனிய விவகாரங்களில் தொழிற்கட்சியின் ஆலோசகராக இருந்து , சுதந்திர இலங்கையில் சிறுபான்மையினரது பாதுகாப்புக்கு முற்காப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று வாதாடினார். சுவிற்சலாந்தின் கன்ரோன் முறையே இலங்கைக்கு அதி பொருத்தமானது எனவும் அவர் கருதினார்.
இது தொடர்பாக 1938ல் தனது பொது நிலை அறிக்கையில் அவர் எழுதியதாவது , ~சிறுபான்மையினரது பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதே ஆலோசனைக் குழுவின் எண்ணமாகும். சிங்களவர் தமது பெரும்பான்மையைத் தமிழருக்கு மாறாகப் பயன்படுத்தியுள்ளதோடு இனியும் பயன்படுத்துவர் என்ற அடிப்படையில் சுய ஆட்சிக்கான மேலதிக ஏற்பாடுகட்கும் இது பொருந்தும். சம்மதத்தை மறுக்க ஆளுநருக்கு உள்ள உரிமையின் பேரிலும் தொகுதிகளை மீள வரையறுத்து ஆசனங்களை மீள ஒதுக்கீடு செய்வதற்கான பிரேரணை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
எனினும், மற்றொரு முறையும் கருத்திற் கொள்ளப்படலாம். அதாவது , பெருமளவிலான அதிகாரப்பரவலாக்கம் ஒன்றை அல்லது ஒரு சமஷ்டி முறையைக்கூட அறிமுகப்படுத்தும் சாத்தியப்பாடு. தமிழ்ச் சிறுபான்மைப் பூர்வகுடிகள் தீவின் தீவிர வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழுகின்றனர். கரையோரச் சிங்களவரினின்று பல வகைகளிலும் வேறுபட்ட கண்டியச்சிங்களவர் தீவின் நடுப்பகுதியில் ஒருமைத் தன்மையான ஒரு சிங்களச் சனத்திரளாக உள்ளனர்.
குறைந்தளவில் சுவிற்சர்லாந்தின் வகை மாதிரியான கன்ரோன்கள் நான்கேனும் உருவாக்கப்படலாம். அதாவது கரையோரச்சிங்கள மாகாணங்கள், கண்டியச்சிங்கள மாகாணங்கள், தமிழ் வட மாகாணம், தமிழ் கிழக்கு மாகாணம் , அதைவிட வந்தேறு குடிகளான இந்தியத்தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளைக் கொண்ட ஒரு ஜந்தாவது கன்ரோனையும் தேயிலைத் தோட்டங்களில் உருவாக்க இயலுமாயிருக்கும்.
(சண்முகதாசன் கட்டுரைகள் என்னும் நூலில் இருந்து)

No comments:

Post a Comment