Thursday, January 21, 2016

இந்திய ஆக்கிரமிப்பும் தோழர் தமிழரசனின் தீர்க்க தரிசனமும்

இந்திய ஆக்கிரமிப்பும் தோழர் தமிழரசனின் தீர்க்க தரிசனமும்

(தோழர் பாலன் எழுதிய "ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்" நூலில் இருந்து)

1983களில் இந்திய அரசு ஈழப்போராளிகளுக்கு பயிற்சி கொடுத்தது. ஆயுதம் கொடுத்தது. பண உதவியும் செய்தது. தமிழ்நாட்டில் தங்குவதற்கு அனுமதியும் அளித்தது. இதனால் ஈழப் போராளிகள் அமைப்புகள் பெரும்பாலானவை இந்திய அரசின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டன. பங்களாதேஸ் உருவாக உதவி செய்ததுபோல் தமிழீழம் உருவாகவும் இந்திய அரசு உதவும் என்று இவ் அமைப்புகள் நம்பின. 1984 பொங்கலுக்கு இந்திய அரசின் உதவியுடன் தமிழீழம் பிறக்கும் என்று டெலொ இயக்கம் பிரச்சாரம் செய்தது. தமிழக தலைவர்களும் இத்தகைய நம்பிக்கையை விதைத்தார்கள். ஆனால் தமிழகத்தில் தோழர் தமிழரசன் " இந்தியா ஒருபோதும் தமிழீழத்தை ஆதரிக்காது. இந்திய அரசு போராளிகளுக்கு உதவுவது என்பது இலங்கை முழுவதையும் தனது ஆக்கிரமிப்பின்கீழ் கொண்டு வருவதற்கே. பங்களாதேசில் தனது நோக்கம் நிறைவேறியதும் எப்படி தான் பயிற்சி கொடுத்த போராளிகளை அழித்ததோ அதேபோன்று இலங்கையிலும் தனது நோக்கம் நிறைவேறியதும் ஈழப் போராளிகளை இந்திய அரசு அழிக்கும் " என்று கூறினார்.

தோழர் தமிழரசன் இந்திய அரசு பற்றி இவ்வாறு கூறியதை அப்போது ஈழவிடுதலை அமைப்புகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சொல்வதானால் இந்திய அரசுக்கு பயந்து தோழர் தமிழரசனுடன் தொடர்பு கொள்வதையே அவ் அமைப்புகள் தவிர்த்தன. ஆனால் தோழர் தமிழரசன் அன்று கூறியது எந்தளவு உண்மையானவை என்பதை இன்று கண்கூடாகவே கண்டுள்ளோம். தோழர் தமிழரசனின் இந்த தீர்கதரிசனக்கூற்றை ஈழபோராளிகள் அமைப்புகள் யாவும் அன்று ஏற்றிருந்தால் இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை தவிhத்திரக்கலாம். இந்திய அரசின் உதவியுடன் இலங்கை அரசு மேற்கொண்ட முள்ளிவாயக்கால் அழிவையும்கூட தடுத்திருக்கலாம் என தோன்றுகிறது

இந்த நீண்ட போரில் தமிழர்கள் நிறைய இழந்துள்ளார்கள். போரில் வென்றதாக தம்பட்டம் அடிக்கும் இலங்கை அரசும்கூட எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த போரில் அதிக லாபம் அடைந்தது இந்திய அரசு மட்டுமே. இலங்;கையில் நிலவிய இன முரண்பாட்டை பயன்படுத்தி முழு இலங்கையையும் இந்தியா ஆக்கிரமித்துள்ளது. இந்தியாவின் 30 வது அறிவிக்கப்படாத மாநிலமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை முழுவதும்   இந்தியா பொருளாதார ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இதனால் இலங்கையின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இலங்கையின் இயற்கை வளங்களை  பகற்கொள்ளையடிப்பதிலும், தனது உற்பத்திகளுக்கான வியாபாரச் சந்தையை இலங்கையில் அமைப்பதிலும் இந்தியா முழு மூச்சாக ஈடுபட்டு வருகிறது.
இந்தியாவின் பலவந்தமான ஆக்கிரமிப்பின் முன்னால் இலங்கை ஆட்சியாளர்கள்  மண்டியிடுகின்றனர். தமது ஆதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள மானங்கெட்ட செயலில் ஈடுபடும் தலைவர்களால் நாட்டின் இறமைக்கு அபத்து எற்பட்டிருக்கிறது. இந்த இந்திய அக்கிரமிப்பை உணர்வதோடு அதில் இரந்து எப்படி விடுதலை பெறுவது என்பது கறித்து  தமிழ் சிங்கள மக்கள அனைவரும் சிந்திக்க வேண்டும்.

இந்தியாவின் தலையீட்டின் காரணமாக இலங்கையில் திரைமறைவில் நடைபெறும் பல விடயங்கள் பற்றி நாட்டு மக்களில் பெரும்பாலோருக்கு தெரியாது. இலங்கை அரசு இந்திய அரசுடன் செய்யும் ஒப்பந்தங்களின் விபரங்கள் குறித்து இலங்கை மக்களுக்கு முழுவிபரமும் தெரிவிக்கப்படுவதில்லை. பத்திரிகைகளுக்கு மட்டுமல்ல பல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இது குறித்த விபரங்கள் அறிந்துகொள்ள முடியவில்லை. இதனால் இலங்கையில் இந்தியாவின் ஆதிக்கம் என்பது  வெறும் கற்பனை என எண்ணுவோரும் இருக்கின்றனர். மேலும் தமிழக தலைவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் சிலர் இலங்கையில் முதலீடு செய்யவும் தமது வியாபாரங்களை பெருக்கிக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டிருப்பதால்  தமிழகத்தில் இருந்தும் இந்த இந்திய ஆக்கிரமிப்பு குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கின்றன.

இலங்கை அரசியலில் இந்தியாவின் தலையீடு

சுதந்திரத்திற்கு பின்னர் 1954ல் இந்தியா ஆசியாவில் பிரபலமாயிருந்த அரசியல் தலைவர்களுடன் ஒரு உடன்பாட்டிற்கு வந்தது. அப்போதைய சீனப் பிரதமர் சூ என்லாய் பாண்டுங் மாநாட்டிற்கு பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். அதற்கேற்ப 1954ல் பஞ்சசீலக் கொள்கை நிறைவேற்றப்பட்டது. வித்தியாசமான சமூக முறைகள் நிலவிய நாடுகளில் விசேடமாக ஆசிய நாடுகளுகிடையேயான சகவாழ்வு, அமைதி மற்றும் நட்புறவை கட்டியெழுப்பும் நோக்கத்துடனேயே அதனை அவர் தயாரித்திருந்தார். ஒவ்வொரு நாடும் ஏனைய நாடுகளை அக்கிரமிப்பதிலிருந்து தவிர்க்கும் கொள்கையில் நிலைத்திருப்பதற்காக ஆசியாவின் மாநாடொன்றுக்கு இவ்வாறான ஒரு பிரேரணையைக் கொண்டுவர வேண்டிய தேவை அந்த நாடுகளின் தலைவர்களுக்கு இருந்தது.

சீனப் பிரதமர் சூஎன்லாய், இந்தியப் பிரதமர் நேரு, பர்மாவின் பிரதமர் ஊனு, இந்தோனேசியப் பிரதமர் சுகர்னோ போன்ற ஆசியாவின் உயர்மட்டத்தில் இருந்த, அந்தந்த நாடுகளின் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய, சுதந்திரம் பெற்ற பிரதமர்களாக இருந்த அந்த தலைவர்களினால்தான் பாண்டுங் மாநாடு கூட்டப்பட்டது. சீனப் பிரதமர் சூஎன்லாய் அவர்களினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை சூஎன்லாய், நெரு, ஊனு ஆகியவரினது பிரேரணையாக பாண்டுங் மாநாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்த பிரேரணையை சுருக்கமாக கூறுவதாய் இருந்தால் ஆக்கிரமிக்காதிருத்தல், மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாதிருத்தல், அமைதியான சகவாழ்வுக்காக பஞ்சசீலக் கொள்கையை அமுல் படுத்துதல் ஆகும்.

அன்று இலங்கைப் பிரதமாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவ அவர்களும் அம் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இலங்கையின் பிரதமர் என்ற முறையில் கொத்தலாவ மாநாட்டில் உரையாற்றிவிட்டு  இந்திய பிரதமர் நேருவுக்கு பக்கத்தில் இருந்த தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். அப்போது " நீங்கள் அந்த உரையை பேசுவதற்கு முன் ஏன் என்னிடம் காட்ட வில்லை?"  என்று நேரு கொத்தலாவிடம் கேட்டார். இவ்வாறு கேட்டதன் மூலம் பஞ்சசீலக்கொள்கையை நிறைவேற்றிய மண்டபத்திலேயே இந்தியா அதனை மீறிவிட்டது.

இந்தியாவுக்க அருகில் சிக்கிம் என்றொரு நாடு இருந்தது. இமயமலையில் நேபாளத்திற்கு அருகில் இருந்தது. அதனை இந்தியா கபளீகரம் செய்துவிட்டது. தற்போது சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாகவுள்ளது. அருகில் இருக்கும் பூட்டான் என்ற நாடும் முழுமையாக இந்தியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தலைவர்களில் மகிந்த ராஜபக்ச அவர்களை சீன நாட்டிற்கு சார்பானவர் என்றும் அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர் என்றும் சிலர் சித்தரிக்க முனைகிறார்கள். இலங்கையில் இந்திய ஆக்கிரமிப்பை மறைக்க முனைவோரே இப்படி சீன பூச்சாண்டியை காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் எவ்வளவுதான் தலைகீழாக நின்றாலும் மகிந்த ராஜபக்சவின் காலத்தில்தான் இந்திய ஆக்கிரமிப்பு அதிகம் நடந்தது என்ற உண்மையை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

பொதுவாக ஒரு நாட்டின் அரச தலைவர் ஒருவர் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்க செல்வதில்லை. மாறாக தூதுவர்தான் ஜனாதிபதியை சந்திக்க செல்ல வேண்டும். இதுதான் நடைமுறை. ஆனால் மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியான உடனேயே  இந்திய தூதுவரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்தார். பதவியேற்றவுடன்  தூதுவர் ஒருவரின் இல்லத்திற்கு சென்ற முதலாவது இலங்கை ஜனாதிபதி மகிந்தராஜபக்சவே. தனது பதவிக்காலம் முழுவதும் மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்திய ஆக்கிரமிப்பிற்கு பெரிதும் உதவினார்.

இலங்கையில் இந்தியாவின் பொருளாதார ரீதியிலான தலையீடு

தென்கிழக்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஒரு பலம் வாய்ந்த நாடு. இந்தியாவில் உள்ள முதலாளிகளும் அவர்களது வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் அரசாங்கமும,; அதன் அதிகார வர்க்கமும், இந்தியா பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பலம் வாய்ந்த நாடாக இருப்பதையே விரும்புகின்றனர். இன்னும் சொன்னால் இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்பது இவர்கள் கனவாக உள்ளதுஇவர்களது இந்த கனவை நனவாக்க இவர்களது உற்பத்திக்கான வர்த்தக சந்தையொன்று இவர்களுக்கு தேவைப்படுகிறது. எனவேதான் இந்தியா தன்னை சூழவுள்ள பாகிஸ்தான,; பங்களாதேஸ், இலங்கை, நேபாளம், பூட்டான்  போன்ற நாடுகள் மீது ஆதிக்கரீதியிலான அழுத்தங்களைக் கொடுத்து அந்த நாடுகளின் ஊடாக தனக்கு தேவைiயான கச்சாப் பொருட்களை பெற்றுக்கொள்ளவும் வர்த்தக சந்தையை தேடிக்கொள்ளவும் முயற்சி செய்கிறது. இதன்மூலம் தனது அயல்நாடுகளில் அதிக்கம் செலுத்த இந்தியா முனைகிறது. தென்கிழக்காசியாவில் ஒரு பேட்டை ரவுடியாக இந்தியா தன்னை நிலை நிறுத்த முயல்கிறது. இந்தியாவின் பெரிய சந்தையை மனதில் கொண்டு பெரிய ரவுடிகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற வல்லரசு நாடுகளும் இதனை அனுமதிக்கின்றன.

2002 ம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் திரு.ஒஸ்டின் பெர்ணாந்து. அவர் " ஆல டீநடவ ளை றாவைந" என்ற நூலை எழுதியுள்ளார். அதில் அவர் பலாலி விமான நிலையத்தை செப்பனிட இந்தியா முன்வைத்த நிபந்தனைகளை குறிப்பிடுகிறார். பலாலி விமான நிலையம் யாழ்ப்பாணத்தில் உள்ளது. எனவே தமிழ் மக்களின் நலனுக்காக இந்தியா இந்த உதவியை செய்ய முன்வருகிறது என்றே பலரும் கருதக்கூடும். ஆனால் இந்த திட்டத்திற்கு இந்தியா முன்வைத்த நிபந்தனைகள் ஒன்றுகூட தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல. இந்தியா தனது நலனுக்காகவே எதையும் செய்கிறது என்பதை அப்பட்டமாக காட்டுகிறது. இந்திய விதித்த முதலாவது நிபந்தனை வேறு நாட்டு விமானங்களுக்கு பலாலியில் அனுமதி அளிக்கக்கூடாது. இந்த நிபந்தனை என்றாவது ஒருநாள் பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும் என்ற தமிழ் மக்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டது. இரண்டாவது நிபந்தனை இந்தியா கேட்கும் நேரங்களில் இந்தியாவிடம் விமான நிலையம் ஒப்படைக்க வேண்டும்.

கிழக்குமாகாணம் புலிகளிடமிருந்து மீட்கப்பட்டவுடன் உடனடியாக திரிகோணமலைப் பிரதேசத்தில் 675 சதுர கிலோ மீட்டர் பரப்புள்ள நிலம் ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்கு மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்டது. பொருளாதார வலையம் என்ற வகையில் இது வழங்கப்பட்டது. இந்தியாவின் இந்த பொருளாதார வலயத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்கூட செல்ல முடியாது. உள்ளே எத்தனை இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் ? அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள்? எதுவுமே தெரிந்துகொள்ள முடியாமல் தடுக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் நிலம் இன்னொரு நாட்டிற்கு இப்படி மர்மான முறையில் எதற்காக வழங்கப்பட்டுள்ளது? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏன் இவ்வாறு இலங்கை நிலத்தை இந்தியாவுக்கு வழங்கினார்?

இப் பிரதேசம் 2006ம் ஆண்டு செப்டம்பர் 30 திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இந்த பிரதேசத்தில் கப்பல் திருத்தும் நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக கூறும் இந்தியா மேலும் அங்கு படகு உற்பத்தி, மீன் உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் பல தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படும் என கூறுகிறது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலைத் துறைமுகத்தை சுற்றி இந்த வலயம் அமைகிறது. தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ்ந்த, தொடர்ந்து வாழும் விசாலமான பூமி அவர்களின் அனுமதியின்றி இந்தியாவுக்கு தரை வார்க்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு சொந்தமான நிலத்தை அவர்களின் சம்மதம் இன்றி அவர்களை அந்த நிலத்தில் இருந்து விரட்டிவிட்டு இந்தியாவுக்கு வழங்கப்ட்டுள்ளது. அங்கிரந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் அகதிகளாக முகாம்களில் வாழ்ந்து வரும்வேளையில், இப்படி இந்தியாவுக்கு தமிழர் நிலம் வழங்கப்பட்டது குறித்து இன்றுவரை ஒரு தமிழ் தலைவர்கூட ஆட்சேபம் தெரிவிக்காதது ஆச்சரியமே! தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்களின் சொந்த தொகுதியிலேயே இவ்வாறு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவர் தனது இந்திய விசுவாசம் காரணமாக  இது குறித்து எதுவும் பேசாமல் மௌனம் காத்து வருகிறார். அவர் தன் குடும்பத்துடன் இந்தியாவில் கேரளாவில் வாழ்ந்து வருகிறார். அவரது சொந்த தேவைகளை இந்திய அரசே பூர்த்தி செய்து வருகிறது. எனவே அவர் இந்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்காததோ அல்லது தமிழ் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காததோ ஆச்சரியமான ஒன்று அல்ல.

சம்பூரில் ஒரு அனல் மின் நிலையம் இந்தியா அமைக்கிறது. திட்டப்படி அது 2012 ல் அதன் உற்பத்தியை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் இன்னமும் உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் இந்நிலையில் சம்பூரில் ஒரு இறங்கு துறையொன்றை இந்தியா நிர்மானித்துள்ளது. அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை இறக்குவதற்காக இந்த இறங்குதுறை என கூறப்படுகிறது. அதேவேளை புல்மோட்டையிலிருந்து திருமலை இறங்குதுறைவரை இந்தியா அதிவேகப் பாதையொன்றை அமைத்து உள்ளது. அதற்கு "காந்தி வீதி" என பெயரும் இட்டுள்ளது. இந்த அதிவேகப்பாதை மக்களுக்காக அமைக்கப்படவில்லை. மாறாக புல்மோட்டையில் காணப்படும் பெறுமதிமிக்க இல்மனைற் கனிமத்தை எடுத்துச்செல்லவே இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்குமாகாணம் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை இந்த கனிம வளங்களை வெளியார் எவரும் சுரண்ட அவர்கள் அனுமதிகவில்லை. கறிப்பாக இல்மணைற் எடுக்க வந்த ஜப்பானிய கப்பல் ஒன்றைக்கூட அவர் கண்டு வைத்து தகாத்திரந்தார்கள். ஆனால் கிழக்குமாகாணத்தில் இருந்து புலிகள் விரட்டப்பட்டதும் உடனடியாகவே கிழக்குமாகாணம் மகிந்த ராஜபக்சவினால் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டது.

மகிந்த ராஜபக்சவின் சொந்த பிரதேசமான அம்பலாந்தோட்டையில் கொடவாயா என்ற இடம் உண்டு. இங்கு வளவ நதி மூலம் அடித்துவரப்பட்ட கனிம மணற்குவியல் உண்டு. இந்த கனிமவளத்தையும் அகழ்வதற்கு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச தமிழர் நிலத்தை மட்டுமல்ல தனது சொந்த பிரதேசத்தைக்கூட இந்தியாவுக்கு கொடுத்துள்ளார்.

அடுத்து கிரிகந்தை என்ற இடத்திலும் விசாலமான கணிம மணல் இருக்கிறது. அதனையும் அள்ளி எடுப்பதற்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட இந்திய நிறுவனம் ஒன்றிற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழர் பகுதியான புல்மோட்டை மட்டுமல்ல இலங்கையை சுற்றிவரவுள்ள கனிம வளங்களை எல்லாம் அறுவடை செய்யும் உரிமை இப்போது இந்தியாவிடமே உள்ளது.

இலங்கையில் மண்ணுக்கள் பல்வேறு பெறுமதி மிக்க கனிமவளங்கள் புதைந்து இருக்கின்றன. அவற்றை கண்டு பிடிப்பதற்கு "கல்யாணி ஸ்டீல் கோபரேசன்" என்னும் இந்திய நிறுவனத்திற்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டு பிடிப்பதற்காக கண்டு பிடிக்கும் கனிம பொருளை அகழ்ந்தெடுக்கும் உரிமையும், அகழ்ந்து எடுக்கும் கனிமத்தில் பெரும்பகுதி இந்தியாவுக்கே விற்கப்படவேண்டும் என்ற நிபந்தனையையும் அந்த நிறவனம் விதித்துள்ளது. இத்தகைய மோசடிமிக்க நிபந்தனைகளுக்க இலங்கையின் மகிந்த அரசே சம்மதம் தெரிவித்துள்ளது.

பொதுவாக எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் டெண்டர்விட்டு அதில் இருந்தே தெரிவு செய்வது வழக்கம். இதுதான் நடைமுறை. ஆனால் அவ்விதமாக எந்தவித டெண்டர் கோரலும் இன்றி மன்னாரில் உள்ள எண்ணெய்வளம் இந்திய கெயான் நிறவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. செய்துகொண்ட ஒப்பந்தப்படி அகழந்;தெடுக்கப்படும் எண்ணெயில் 10 வீதம் மட்டுமே இலங்கைக்கு வழங்கப்படும். மீதி 90 வீதமும் இந்தியா எடுத்தச்சென்று விடும.; இதைத் தவிர இலாபத்தில் 10 வீத வரி மட்டுமே இலங்கைக்கு வழங்கப்படும் என ஒப்பந்தம் தெரிவிக்கிறது. இந்த மோசடியான ஒப்பந்தத்தையும் மகிந்த ராஜபக்சவின் அரசே இந்தியாவுடன் செய்துள்ளது. தமிழ் மக்களின் நிலப்பகுதியான மன்னாரில் இருந்து எண்ணெய் வளத்தை மோசடியான ஒப்பந்தம்மூலம் இந்தியா பெற்றுக்கொள்ளவிருப்பதை தமிழ்மக்களின் தலைவர்கள் என்று கூறிக்கொள்ளும் தமிழ்தேசியகூட்டமைப்பினர் இதுவரை எந்தவித எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.

அடுத்து இந்தியாவிலிருந்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சென்னையில் இருந்து தனுஸ்கோடி வரைக்கும் பின்னர்  அங்கிருந்து தலைமன்னார் வரைக்கும் கடலுக்கடியிலான மின்சார கேபிள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 200 கி.மீ வரை கேபிள் அமைத்து அங்கிருந்து அநுராதபுரம் வவுனியா  போன்ற பகுதிகளுக்கு மின்சாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு 450 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மின்சாரக் கேபிள் ஊடாக 1000 மெகாவோட் மின்சாரம் இலங்கைக்க கொண்டுவரப்படவுள்ளது. இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பெரும் மின்சாரப் பற்றாக்கறை நிலவும் இவ் வேளையில் இலங்கைக்கு 1000 மெகாவோட் மின்சாரம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கை தனது மின்சாரத் தேவையில் 40 வீதம் இந்தியாவில் தங்கியிருக்கும் நிலை உருவாகின்றது. இப்படியான இலங்கையின் நலனுக்கு விரோதமான ஒரு திட்டத்தையும்கூட மகிந்த ராஜபக்சவின் அரசே இந்தியாவுடன் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இந்திய நிறுவனத்தால் சம்பூரில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்தினூடாக 500 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த மின்சாரத்தை விநியோகிக்கும் உரிமை, பணம் அறவிடும் உரிமை யாவும் அந்த இந்திய நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள சட்டப்படி இலங்கை மின்சாரசபை மட்டுமே மின்சாரத்தை விநியோகிக்க முடியும். அதனால் இந்திய நிறுவனத்திற்காக சட்டத்தையே மாற்றுவதற்கு மகிந்த ராஜபக்சவின் அரசு முனைந்தது.

சம்பூரில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின் அளவு 500 ல் இருந்து 1000 மெகாவோட்டாக அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவ்வாறு அதிகரிக்கப்படும் மின்சாரம் இலங்கைக்கு வழங்கப்டாது என்றும் இந்தியாவக்கு எடுத்தச் செல்லப்படும் எனவும் கூறப்படுகிறது. ஒருபுறம் இலங்கையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பின்பு கேபிள் வழியாக மீண்டும் இலங்கைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. என்ன கேலிக்கூத்தான ஒப்பந்தம் இது? ஆனால் இதுதான் இந்திய அரசின் சூழ்ச்சி திட்டம். அதாவது இலங்கையின் மின்சாரத் தேவையை தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதே அதன் திட்டமாகும். இப்படியான ஒரு கேலிக்கூத்தான ஒப்பந்தத்தை சீனாவின் ஆதரவாளா(?); என்று கூறப்படும் மகிந்த ராஜபக்சவே செய்துள்ளார் என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எண்ணெய் அகழ்வு மட்டுமல்ல எண்ணெய் விநியோகமும் இந்தியாவின் கைகளுக்கு செல்கிறது. இலங்கையில் 207 எண்ணெய் விநியோக நிலையங்கள் இருக்கின்றன. இதில் 100 விநியோக நிலையங்களை இந்திய நிறுவனம் ஐழுஊ வாங்கியுள்ளது. இவ் இந்திய விநியோக நிலையங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடமே எண்ணெய் வாங்க வேண்டும் என முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது. பின்னர் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இந்தியாவிலிருந்து எண்ணெய் கொண்டுவர அனுமதியளிக்கப்பட்டுள்ளதுஇந் நிறவனம் திருகோணமலையில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவி வருகிறது. அது செயற்பட ஆரம்பிக்கும்போது இலங்கை அரசுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் என தெரியவருகிறது. அவ்வாறு நிகழும் பட்சத்தில் இலங்கை பூராவும் எண்ணெய் விநியோகம் ஒரு இந்திய நிறுலவனத்தையே சார்ந்து இருக்கும். இத்தகைய இலங்கையின் நலனுக்கு விரோதமான ஒப்பந்தத்தையும் மகிந்த ராஜபக்சவின் அரசே மேற்கொண்டுள்ளது.

யாழ்குடாநாட்டில் உள்ள காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையும் அதன் அருகில் இருக்கும் பாரிய சுண்ணாம்பு பாறைகளும் இந்திய பிர்லா கம்பனிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுண்ணாம்பு பாறைகளை அகழ்ந்து எடுத்துச் செல்வதற்கு வசதியாக காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா புனரமைப்பு செய்யவுள்ளது. இந்தியாவுக்கு இத் துறைமுகத்தை வழங்குவதன் மூலம் பல தமிழ் இளைஞர்களுக்க வேலை வாய்ப்பு கிடைக்கும் என இந்தியாவின் கைக்கூலிகளான மாவை சேனாதிராசாவும் சுமந்திரனும் கூறி வருகின்றனர்.

சீமெந்து தொழிற்சாலைக்காக முருகைக்கற்களை தோண்டி எடுப்பதால் கடல் அரிப்பு ஏற்படுவதாகவும் இதனால் முழு யாழ்ப்பாணத்திற்கும் ஆபத்து ஏற்படும் என்று அன்றைய தமிழர்விடுதலைக்கூட்டணி தலைவர்கள் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மூடும்படி கோரினார்கள். அது உண்மைதான். அதனால்தான் பல போராளி அமைப்புகள் பல தடவை காங்கேசன் சீமெந்து தொழிற்சாலையின் மீது தாக்குதல்கள் நடத்தி அதனை இயங்காமல் செய்தார்கள். ஆனால் இன்று இந்திய கம்பனிக்கு அந்த சீமெந்து தொழிற்சாலை வழங்கப்பட்டு அதன்மூலம் மீண்டும் யாழ் குடாநாட்டிற்கு ஆபத்து தோன்றியுள்ளவேளையில் அதே தமிழ் தலைவர்கள் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பது தமிழ் மக்களுக்கும் அந்த மக்கள் வாழும் மண்ணுக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

அத்துடன் வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும்கூட காலியில் இருந்து மாத்தறை வரையிலான புகையிரதப் பாதை அமைக்கும் பணி இந்தியாவிடமே வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் , மதவாச்சி ,வவுனியா போன்ற இடங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் இந்திய பெரு முதலாளிகளுக்கு குறைந்த குத்தகையில் நீண்டகால ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை வர்த்தக சந்தையை எடுத்துக்கொண்டால் இந்தியப் பொருட்களே அங்கு நிறைந்து காணப்படுகின்றன. இலங்கையின் தொழிற்துறையில் பெருமளவு இந்தியாவின் கைவசமே இருக்கிறது. மோட்டா, சைக்கிள், ஆட்டோ, பேருந்து ஆகியன இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. தவிரவும் பெரும்பாலான மருந்து வகைகளும் இந்தியாவிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அப்பலோ மருத்தவமனை போன்ற இந்திய பெரு மருத்துவமனைகளும் இலங்கையில் தமது கிளைகளை அமைத்துள்ளன. அதேபோல் இந்திய தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அமைக்க அனுமதி வழங்கப்ட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை இலங்கையில் இருந்து வந்துள்ள இலவசக் கல்விக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பல ஒப்பந்தங்கள் மிகவும் ரகசியமாகவே வைக்கப்பட்டீருக்கின்றன. மக்களால் எந்த விபரங்களும் அறிய முடியாமல் உள்ளது. இந் நிலையில் "சீபா" என்ற ஒரு ஒப்பந்தத்தை செய்யவுள்ளனர். இவ் ஒப்பந்தம் ஏற்பட்டால் இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது.

இலங்கையில் இந்தியாவின் ராணுவ தலையீடு

இந்தியா முதன் முதலாக 1971ம் அண்டு இலங்கையில் எற்பட்ட ஜே.வி.பி கிளர்ச்சியை அடக்க இராணுவரீதியில் தலையிட்டது. 2000 இந்திய இராணுவ வீரர்கள் வந்து அன்றைய சிறிமாவோபாண்டார நாயக்காவின் அரசுக்கு உதவி புரிந்தார்கள். அவர்கள் கெலிகப்டர் மூலம் குண்டு வீசி ஜே.வி.பி கிளர்சியாளர்களை அழித்தார்கள். ஜே.வி.பி கிளர்ச்;சியை எதிர்கொள்ளமுடியாமல் பின்வாங்கிய இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவ வருகையும் அவர்களது ஜே.வி.பிக்கு எதிரான தாக்குதலும் பெரிதும் உதவிகரமாக அமைந்தது. இந்திய ராணுவம் இலங்கை அரசுக்கு உதவியிருக்காவிடின் ஜே.வி.பியினர் இலங்கையை கைப்பற்றியிருப்பார்கள் என்றே அன்று பேசப்பட்டது.

1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் தமிழ் போராளிகளுக்கு இந்தியா பயிற்சி வழங்கியது. இந்திய உளவுப்படையின் மூலம் ஆயுதம் வழங்கியது. ஆயுதம் வேண்டும் என்றால் அப்பாவி சிங்கள மக்களை கொல்லும்படி இந்திய உளவுப்படை வற்புறுத்தியது. பின்னர் போராளி அமைப்புகளுக்கிடையே சகோதரப் படுகொலைகளை அது உருவாக்கியது. இவ்வாறு தமிழக, சிங்கள மற்றும் தமிழ் மக்களிடையே போராளிகளுக்கு இருந்த நல்ல மதிப்பை அது கெடுத்தது.

அடுத்து 1987ம் ஆண்டளவில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையடுத்து அமைதிப்படை என்ற பெயரில் 1லட்சத்து 20ஆயிரம் இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்தது. தமிழ்மக்களுக்கு உதவுவதற்காக வந்ததாக கூறப்பட்ட இந்திய ராணுவம் தமிழ் மக்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்தது. அவர்களது உடமைகளை சேதப்படுத்தியது. பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வல்லறவு செய்தது. இலங்கை இராணுவம் மேல் என்று நினைக்கும் அளவிற்கு மிகவும் குறகிய காலத்தில் மிகப்பெரிய அழிவுகளை அது மேற்கொண்டது.

அதையடுத்து புலிகளுக்கும் இலங்கை ராணவத்திற்குமான போரில் இந்திய இராணுவம் இரகசியமாக வந்து கலந்துகொண்டது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டமையில் இந்திய இராணுவத்திற்கும் முக்கிய பங்கு உண்டு என்பதை தற்போது வெளிவரும் தகவல்கள் அம்பலப்படுத்துகின்றன.

போருக்கு பின்னரான நிலைமை

இன்று இலங்கையில் இந்தியாவுக்கு மூன்று தூதராலயங்கள் இருக்கின்றன. இந்த சிறிய தீவில் இந்தியாவுக்கு மட்டுமே இவ்வாறு மூன்று தூதரலாயங்கள் உள்ளன. அதில் ஒன்று யாழ்ப்பாணத்தில் உள்ளது. அதில் தூதுவராக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் நலனுக்காக இவ் இந்திய தாதரகம் அமைக்கப்பட்டது என்றே எல்லோரும் நம்பினார்கள் அல்லது நம்ப வைக்கப்பட்டார்கள். ஆனால் அந்த இந்திய தமிழ் தூதர் அவர் கண் முன்னே நடைபெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து கருத்து எதுவும் கூறவில்லை. அந்த இந்திய தமிழ் தூதர் இலங்கை இராணுவத்தின் எந்த அக்கிரமங்களையும் கண்டித்ததில்லை. அவர் தமிழ் மக்களுக்கு கூறியது "நீங்கள் எல்லோரும் இந்தி படியுங்கள்" என்பது மட்டுமே. தமிழ் மக்களை இந்தி படிக்குமாறு கூறுவதற்காகவா யாழ்ப்பாணத்தில் இந்திய தூதராலயம் அமைக்கப்பட்டுள்ளது?

ஆங்கிலேய காலத்தில் காலனி நாடுகளில் இருந்த வைராய்ஸ்களைப் போன்றே இலங்கையில் உள்ள இந்திய தூதுவர்கள் நடந்து கொள்கினறனர். பதவி ஏற்றதும் ஜனாதிபதி மகிந்தராஜபக்ச  இந்திய தூதரை சென்று சந்தித்தது மட்டுமல்ல, ஜே.ஆர் ஜெயவர்த்தனா காலத்தில் இந்திய தூதராய் இருந்த டீக்சிற் எழுதிய புத்தகத்தை படிக்கும்போதும் இதை உணர்ந்து கொள்ள முடியும்.

"இந்தியா எப்போதும் தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டு வருகிறது. புலிகள் முட்டாள்தனமாக ராஜீவ்காந்தியைக் கொன்றதால்தான் இந்தியா புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவியது என்று சிலர்  இன்றும்கூட அப்பாவித்தனமாய் நம்புகிறார்கள். புலிகள் ராஜீவ்காந்தியைக் கொன்றிருக்காவிடினும்கூட இந்திய அரசால் அழிக்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மையாகும். ஏனெனில் புலிகள் தாங்கள் பலமாக இருக்கும்வரையில் தமிழ் பகுதிகளில் இந்தியாவையோ அல்லது வேறு எந்த வெளி சக்திகளையோ தமிழ் பிரதேசங்களின் வளங்களை சுரண்டவோ அல்லது கொள்ளையடிக்கவோ அனுமதிக்கவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டதும் அப் பிரதேசங்கள் யாவும் இந்தியாவுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளன. இதிலிருந்து முழு இலங்கையையும் கைப்பற்றுவதற்காகவே இந்தியா புலிகளை அழிக்க இலங்கை அரசுக்கு உதவியுள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது அல்லவா!

தமிழ் மக்களின் பிரதேசமான வடமாகாணத்தில் பலாலி விமான நிலையம், காங்கேசன் சீமெந்து தொழிற்சாலை, காங்கேசன்துறை துறைமுகம், மன்னாரில் எண்ணெய்வயல்கள், கிழக்கு மாகாணத்தில் புல்மோட்டை கனிமவளங்கள், சம்பூரில் அனல்மின்சாரம், சம்பூர் இறங்குதுறை, திருகொணமலை இயற்கை துறைமுகம் மற்றும் எண்ணெய்குதங்கள் என முக்கியமான எல்லாவற்றையும் தமிழ் மக்கள் தற்போது இந்தியாவிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறார்கள். தமிழ்மக்களுக்கு உதவி செய்வதாக கூறி இனப்பிரச்சனையில் தலையிட்ட இந்தியா இன்று முழு இலங்கையையும் ஆக்கிரமித்திருப்பதை கண்முன்னே காணுகிறோம்.

இலங்கையின் அக்கிரமிப்பு எதிரான போராட்ட வரலாறு

இலங்கை ஒரு சிறிய தீவுதான். ஆனால் அந்த தீவின் மக்களோ வீரம் செறிந்த போராட்ட வரலாற்றின் சொந்தக்காரர்கள். தலைமைகளின் துரோகங்களினால் அந்த மக்கள் இன்னும் விடுதலை பெறவில்லையாயினும் அவர்களது போர்க்குணாம்சம் என்றுமே மதிக்கபடக்கூடியதே.

மன்னர் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து பல மன்னர்கள் படையெடுத்தபோதும் எந்த மன்னர்களாலும் முழு இலங்கையையும் பல காலம் அவர்களால் அடிமைப்படுத்தி வைத்திருக்கமுடியவில்லை.

அதன் பின்னர் காலனிய காலத்திலும்கூட போர்த்துக்கேயர் இலங்கையின் iயோரத்தையே கைப்பற்றினார்கள். அதைக்கூட அவர்களால் 100 வருடத்திற்கு மேல் வைத்திருக்க முடியவில்லை. அதன்பின்னர் வந்த ஒல்லாந்தர்களும் இலங்கையின் கரையோரத்தையே கைப்பற்ற முடிந்தது. அவர்களும் 100 வருடங்களுக்கு மேல் இலங்கையை வைத்திருக்க முடியவில்லை. அதன் பின்னர் வந்த ஆங்கிலேயர்கள் முழு இலங்கையையும் கைப்பற்றியிருந்தாலும் அவர்களால் 150 வருடத்திற்கு மேல் வைத்திருக்க முடியவில்லை. எங்கேயோ தூரத்தில் இருந்த லட்சதீவுகளையும், அந்தமான் தீவுகளையும்கூட இந்தியாவுடன் இணைத்த ஆங்கிலேயர்களால் அருகில் இருந்த இலங்கைதீவை இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை.

சுதந்திரத்திற்கு பின்னர் காஸ்மீர், சிக்கிம் போன்ற நாடுகளை இந்தியாவுடன் இணைத்த இரும்பு மனிதர் பட்டேலாலும்கூட இலங்கையை இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை. இவர்கள் எல்லோராலும் இலங்கையை அடிமைப்படுத்த முடியாமைக்கு காரணம் இலங்கை மக்களின் அடிமைத் தனத்திற்கு எதிரான உணர்வும் அதற்கான வீரம் செறிந்த போராட்ட குணாம்சமுமே.

இந்திய ஆக்கிரமிப்பு குறித்த தோழர் தமிழரசனின் தீர்க்கதரிசனம்

இன்று இலங்கையை இந்தியா முழுமையாக ஆக்கிரமித்துள்ளமையை  சில உதாரணங்கள் மூலம் இதுவரை கண்டோம். ஆனால் இன்றும்கூட இத்தனையையும் காட்டியும்கூட இந்திய ஆக்கிரமிப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாமல் அதாவது இந்தியா தமிழ் மக்களுக்கு நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு சிலர் இருக்கின்றார்கள். அதுவும் சில தமிழ் ஆய்வாளர்கள் இலங்கையில் சீனா ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்றும் எனவே சீனாவுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்று அரசியல் ஆய்வுகள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படியானவர்களக்கு மத்தியில் தோழர் தமிழரசன் இந்த இந்திய ஆக்கிரமிப்பு குறித்து 1983ம் ஆண்டே தெளிவாக எடுத்துரைத்தார். இது தோழர் தமிழரசனின் தீர்க்கதரிசனமாகும்.

தோழர் தமிழரசன் சுட்டிக்காட்டியதை ஏற்றுக்கொள்ள அன்றைய போராளி அமைப்புகள் தவறிவிட்டன. அதன் விளைவை இன்று தமிழ் மக்கள் அனுபவிக்கின்றார்கள். இனியாவது தமிழ் மக்களுக்காக போராடும் அமைப்புகள் தோழர் தமிழரசன் கூற்றை புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் சிங்கள உழைக்கும் மக்கள் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள புரட்கர அமைப்புகளுடனும் ஒன்றுபட்டு, ஜக்கியப்பட்டு போராடுவதன் மூலமே இந்திய ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட முடியும். இதையே தோழர் தமிழரசன் எமக்கு காட்டியுள்ளார். அவர் காட்டிய பாதையில் போராடுவோம்.






No comments:

Post a Comment