Saturday, November 30, 2019

எமக்காக மரணித்தவர்களை நாம் நினைவு கூர வேண்டுமா?

•எமக்காக மரணித்தவர்களை
நாம் நினைவு கூர வேண்டுமா?
ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் வரும்போது தவறாமல் வரும் கேள்வி “போராடிய போராளிகள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா?” என்பதே.
நல்ல கேள்வி. கேட்க வேண்டிய கேள்விதான். ஆனால் இதற்குரிய பதிலை காண்பதற்கு முன்னர் “ நாம் ஏன் மாவீரர்களை நினைவு கூர வேண்டும்?” என்ற கேள்விக்கு பதில் காண்போம்.
மரணித்தவர்கள் எமது உறவினர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்?
இல்லை
மரணித்தவர்கள் எமது ஊரைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்?
இல்லை
மரணித்தவர்கள் எமது தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலா நாம் நினைவு கூர்கிறோம்?
இல்லை
அப்படியென்றால் மரணித்த மாவீரர்களை நாம் ஏன் நினைவு கூரவேண்டும்?
முதலாவதாக, அவர்கள் எமக்காக மரணித்தவர்கள்
இரண்டாவதாக, அவர்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அதில் ஒரு காரணம்கூட இன்னும் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
மூன்றாவதாக அவர்கள் காட்டிய பாதையில் போராடுவதே அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலி என்பதை உணர்வதற்கு அவர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
முக்கியமாக எமது இளம் சிறார்கள் இதை உணர்வதற்கு மாவீரர்கள் நினைவு கூரப்பட வேண்டும்.
ஏனெனில் எமது அடுத்த சந்ததியினரான இளம் சிறார்கள் தேடப்போவது தமது உறவுகளின் கல்லறைகளில் உள்ள பெயர்களை அல்ல. மாறாக தங்கள் உறவுகளின் வேர்களை.
குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசு வேண்டுமானால் மாவீரர்களின்; கல்லறைகளை உடைக்கலாம். ஆனால் இந்த இளம் சிறார்களின் நெஞ்சுறுதியை ஒருபோதும் உடைக்க முடியாது.
இவர்கள் மிக விரைவில் தங்களுக்குரிய நியாயத்தை கேட்பார்கள். அதுவும் தங்களுக்கே உரிய மொழியில் கேட்கப் போகிறார்கள்.
சரி. இனி முதல் கேள்விக்கான பதிலை பார்ப்போம்.
கேள்வி- போராடியவர்கள் தாயகத்தில் வறுமையில் வாடும்போது மாவீரர்களுக்கு லண்டனில் மாபெரும் செலவில் விழா தேவையா என்று சிலர் கேட்கிறார்களே?
பதில்- உண்மையில் நல்ல கேள்வி. ஆனால் இதே லண்டனில் ஈஸ்ட்காமில் 4 கோயில்கள் அருகருகே பல மில்லியன் ரூபாவில் கட்டும்போது இது தேவையா என்று கேள்வி கேட்காதவர்கள் ஒக்ஸ்போட் நகரில் மாவீரர்களுக்கு பணிமனை கட்டும்போது ஏன் கேட்கின்றனர்?
இதே லண்டனில் O2அரினா மண்டபத்தில் A.R.ரகுமான் கச்சேரி நடக்கும்போது கேள்வி கேட்காதவர்கள் எக்சல் மண்டபத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ஏன் கேட்கிறார்கள்?
வெம்பிளி அரினாவில் மானாட மயிலாட நடந்தபோது கேள்வி எழுப்பாதவர்கள் அதே வெம்பிளி அரினாவில் மாவீரர் நினைவு கூரும்போது ஏன் கேட்கிறார்கள்?
ஈலிங் அம்மன் ரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்த போது ஏன் இந்த வீண் செலவு என்று கேட்காதவர்கள் மாவீரருக்கு பூ வும் விளக்கும் வைக்கும்போது ஏன் கேட்கின்றனர்?
கேள்வி- வெயிட் வெயிட், இத்தனையும் கேட்டவர்கள்தான் காயம்பட்ட போராளிகளுக்காக கேள்வி கேட்க முடியும் என்கிறீர்களா?
பதில்- இல்லை. ஆனால் இவர்கள் உண்மையில் காயம்பட்ட போராளிகள் மீது அக்கறை இருந்திருந்தால் இத்தனையும் கேட்டிருப்பார்கள். மாறாக மாவீரர் அஞ்சலி நிகழ்வின்போது மட்டும் இப்படி கேட்க மாட்டார்கள்.
கேள்வி - கேள்வி கேட்டவர்கள் தவறானவர்களாக இருக்கலாம். ஆனால் கேள்வி தவறு இல்லையே?
பதில்- இத்தனை குறுகிய காலத்திற்குள் தமிழினம் மீண்டும் எழுந்து நிற்கிறது எனில் அதற்கு முக்கிய காரணம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உணர்வும் பங்களிப்புமே
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒருபுறம் போராட்டத்தை முன் நகர்த்துகின்றனர் மறுபுறத்தில் தாயகத்தில் உள்ள தம் உறவுகளை தாங்கிப் பிடிக்கின்றனர்.
அவர்கள் உலக தமிழ் இனத்திற்கு சொல்லும் செய்தி இதுதான்,
“ஓட முடியவில்லை என்றால் நடந்து செல்வோம்
நடந்து செல்ல முடியவில்லை என்றால் தவழ்ந்தாவது செல்வோம்.
ஆனால் ஒருபோதும் எமது இயக்கத்தை நிறுத்திவிட மாட்டோம்”
குறிப்பு - இது கடந்த வருடம் எழுதிய பதிவு. ஆனால் இம்முறையும் சிலர் அதே கேள்வியைக் கேட்பதால் மீள் பதிவு செய்துள்ளேன்.

No comments:

Post a Comment