Saturday, November 30, 2019

•தமிழ்நாட்டில் செங்கொடி ஈழத்தில் செந்தூரன்

•தமிழ்நாட்டில் செங்கொடி
ஈழத்தில் செந்தூரன்
சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக
தமது உயிர்களை அர்ப்பணித்த தியாகிகள்!
தமிழக சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தமிழ்நாட்டில் உயிர் விட்டவர் செங்கொடி. அதேபோல் இலங்கை சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக ஈழத்தில் உயிர் விட்டவர் மாணவன் செந்தூரன்.
செங்கொடி வருடா வருடம் நினைவு கூரப்படுகிறார். ஆனால் செந்தூரனை நம்மவர்கள் இலசுவாக மறந்து விட்டார்கள்.
செங்கொடி தீக்குளித்து மரணமடைந்த இடத்தில் அவருக்கு நினைவு சின்னம் வைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் தனது வீட்டிற்கு செங்கொடி இல்லம் என பெயர் வைத்துள்ளார்.
ஆனால் மாணவன் செந்தூரன் உயிர்விட்ட தண்டவாளத்தில் ரயில்கள் போய்க்கொண்டுதான் இருக்கின்றன. அந்த இடத்தில் அவன் நினைவாக ஒரு துண்டுப்பலகைகூட இதுவரை வைக்கப்படவில்லை.
நவம்பர் 7 திகதிக்கு முன்னர் சகல சிறைக்கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று 2015ல் சம்பந்தர் அய்யா கூறியிருந்தார். அவர் கூறியபடி கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
இந்நிலையில்தான் நவம்பர் 26 ம் திகதி சிறைக் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு மாணவன் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தான்.
சம்பந்தர் அய்யா சொன்ன நவம்பர் 7ம் திகதி ஒவ்வொரு வருடமும் வருகிறது. ஆனால் சிறைக் கைதிகள்தான் இன்னமும் விடுதலை செய்யப்படவில்லை.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இருக்கும் கைதிகள் செந்தூரனின் தந்தையோ அல்லது சகோதரனோ இல்லை. அல்லது அவனது நண்பர்களோ இல்லை.
செந்தூரன் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இல்லை. அவன் எந்தவொரு அரசியல் கட்சி தலைவனும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு இல்லாத கைதிகள் விடுதலை பற்றிய கவலை அவனுக்கு இருந்தது.
செந்தூரன் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் படித்து பட்டம் பெற்று சுக வாழ்வை வாழ்ந்திருக்கலாம். அல்லது வெளிநாடு சென்று வசதியாக வாழ்ந்திருக்கலாம்
அல்லது இன்று சிலர் செய்வதுபோல் நடிகர்களுக்கு 30 அடியில் கட்அவுட் கட்டி மகிழ்ந்திருக்கலாம்.
ஆனால் மாணவன் செந்தூரன் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காக தன் உயிரை கொடுத்துள்ளான்.
தன் மகன் தன்னை பிற்காலத்தில் பார்த்துக்கொள்வான் என்று செந்தூரனின் தாய் கனவு கண்டிருப்பார்.
தன் சகோதரன் தங்களை வாழவைப்பான் என்று செந்தூரனின் சகோதரிகள் நினைத்திருப்பார்கள்.
ஆனால் செந்தூரன் தன்னை பெற்று வளர்த்த தாயின் கனவை நினைக்கவில்லை. தன் கூடப் பிறந்த சகோதரிகளின் விருப்பத்தை நினைக்கவில்லை.
அவனுடைய நினைவு எல்லாம் சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது மட்டுமே.
அதற்காக அவன் தேர்ந்தெடுத்த பாதை தவறாக இருக்கலாம். ஆனால் இந்த சின்ன வயதில் அவன் செய்த அர்ப்பணிப்பு மகத்தானது.
இனியாவது செந்தூரனை நினைவு கூர்வோம்!
குறிப்பு- இன்று செந்தூரனின் 4வது நினைவு தினமாகும்.

No comments:

Post a Comment