Saturday, November 30, 2019

தேர்தலைப் பகிஸ்கரிப்போம்!

தேர்தலைப் பகிஸ்கரிப்போம்!
தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற எமது இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்தும் நாம் தெளிவாக கண்டறிய வேண்டும்.
இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும்.
ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள்.
புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல.
1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் தமிழரசுக்கட்சி 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது.
இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை.
இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள்.
இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.
மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர்.
இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது.
பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.
எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கிவைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர்.
ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.
இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறிவருகிறார்கள்.
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர்.
ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம்.
இந்துமத சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
கடந்த 71 வருட தேர்தல் வரலாற்றில் இருந்து நாம் தெரிந்துகொண்டது தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.
லெனின் ஒரு தடவை கூறியது- “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.
பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது”.
எனவே தேர்தலைப் பகிஸ்கரிப்போம்!

No comments:

Post a Comment