Friday, October 20, 2023

இந்தியாவில் ஒரு தோசை அனுபவம்

•இந்தியாவில் ஒரு தோசை அனுபவம் நான் முதன் முதலாக 1982ல் மதுரையில் நடந்த உலக தமிழாராய்ச்சி மாநாட்டை பார்ப்பதற்காக இந்தியா சென்றேன். அப்போது திருச்சியில் பஸ் நிலையத்திற்கு அருகில் ஒரு லாட்ஜில் தங்கினேன். அந்த லாட்ஜின் கீழ் தளத்தில் ஒரு சாப்பாட்டுக்கடை இருந்தது. காலை நேரம். நல்ல பசி. சாப்பிடுவதற்காக அக் கடைக்கு சென்றேன். புட்டு தாங்க என்றேன். சர்வர் இல்லை என்றார். சரி இடியப்பம் தாங்க என்றேன். அவர் அதுவும் இல்லை என்றார். அப்ப என்னதான் இருக்கு என்று கேட்டேன். அவர் சொன்ன பெயர்களில் தோசை மட்டும் தெரிந்ததாக இருந்தது. சரி ஐந்து தோசை கொண்டு வாங்க என்றேன். அவர் ஒரு மாதிரி என்னைப் பார்த்தார். எனக்கு அவர் ஏன் அப்படி பார்க்கிறார் என்று புரியவில்லை. யாழ்ப்பாணத்தில் முதலில் ஐந்து தோசை வைப்பார்கள். அப்புறம் சாப்பிட்டதும் அடுத்த ஜந்து தோசை வைப்பார்கள். அந்த பழக்கத்தில்தான் நானும் ஐந்து தோசை தாங்க என்று கேட்டேன். முதல்ல ஒரு தோசை தாரன். அப்புறம் தேவை என்றால் கேளுங்க என்று சர்வர் கூறினார். சிறிது நேரத்தில் ஒரு தட்டில் தோசையை சுருட்டி எடுத்து வந்தார். இது பேப்பர் ரோஸ்ட் என்றும் கூட இருப்பது சட்னியும் சாம்பாரும் என்றார். சம்பல் இல்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் சம்பல் என்றால் என்ன என்று கேட்டார். எனக்கு தோசையே வெறுத்துவிட்டது. 11 நாட்கள் நின்றேன். அதன் பின்பு ஒருமுறைகூட தோசை சாப்பிடவில்லை. அடுத்த முறை 1983ல் இந்தியா சென்றேன். அப்போது சென்னையில் ஒரு நண்பர் எனது தோசைக் கதையைக் கேட்டுவிட்டு ஊத்தப்பம் கிட்டதட்ட யாழ்ப்பாண தோசை போல் இருக்கும் அதை சாப்பிட்டு பார் என்றார். பின்னர் பல தடவை இந்தியா சென்றுள்ளேன். சென்னையில் சரவணபவன் ஓட்டலில் விரும்பி சாப்பிடுவேன். சரவணபவன் ஓட்டலில் அனைத்த வகை தோசைகளும் சாப்பிட்டு இருக்கிறேன். அந்தளவுக்கு தமிழ்நாட்டு தோசையும் எனக்கு பிடித்த உணவாக மாறிவிட்டது. அப்புறம் நான் 1991ல் கைது செய்யப்பட்டபோது என்னை மந்தைவெளி கியூ பிராஞ் அலுவலகத்தில் வைத்து விசாரித்தார்கள். அப்போது காலையில் என்னை விசாரிக்க வந்த மத்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் சாப்பிட்ட பின்பு விசாரணையை ஆரம்பிக்கலாம் என்றனர். அருகில் நின்ற கியூ பிரிவு காவலரிடம் “ இவர் தோசை விரும்பி சாப்பிடுவார். ஒவ்வொரு நாளும் காலையில் சாந்தி தியேட்டருக்கு அருகில் உள்ள கடையில் தோசை சாப்பிடுவார். அதனால் இப்பவும் அவருக்கு நீங்கள் தோசை வாங்கி கொடுங்கள்” என்றனர். இதைக் கேட்டதும் நான் ஆச்சரியப்பட்டேன். எனக்கு தோசை பிடிக்கும் என்பது மத்தியபுலனாய்வு துறையினர்வரை தெரிந்திருக்கிறதே.😂

No comments:

Post a Comment