Monday, December 12, 2016

மரணம் தவறுகளை மன்னித்துவிடுமா?

மரணம் தவறுகளை மன்னித்துவிடுமா?
ஜெயா அம்மையாரிடம் பணம் இருந்தது. அதிகாரம் இருந்தது. தங்க மற்றும் வைர ஆபரணங்கள் இருந்தது. அவரது ஒரு சோடி கால்களுக்கு 375 சோடி செருப்புகள் இருந்தன. இருந்தும் அவரது மரணத்தை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை.
ஒரு ரூபா சம்பளம் பெற்ற அவரால் எப்படி 35ஆயிரம் கோடி ரூபா சொத்து சேர்க்க முடிந்தது என்று யாரும் இப்போது கேட்கவில்லை. ஏனெனில் மரணித்த ஒருவரை பற்றி அப்படி கேட்பது நாகரீகம் இல்லையாம்.
எழுவர் விடுதலைக்கு முயற்சி செய்தார் என்று அஞ்சலி செலுத்துகின்றனர். அப்படியென்றால் அவர்களின் பரோல் (லீவு) விடுதலையை ஏன் மறுத்தார் என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.
இனப்பிரச்சனைக்கு தமிழீழ விடுதலையே தீர்வு என்று தீர்மானம் நிறைவேற்றியவர் என்று புகழ் பாடுகின்றனர். சிறப்புமுகாமில் அகதிகளை அடைத்து வைத்துக்கொண்டு தமிழீழ விடுதலைக்கு தீர்மானம் நிறைவேற்றுவது என்ன நியாயம் என்று கேட்டால் அதற்கு பதில் தர மறுக்கின்றனர்.
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். இலையும் மலர்ந்தது. ஆனால் ஈழம் மலர வில்லையே? அதுமட்டுமா தமிழ் நாட்டில் உள்ள அகதிகளுக்குகூட அவர் எந்த நன்மையும் செய்யவில்லையே? அகதிகளுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த உயர் கல்வி வாய்ப்பையும் பறித்தவர் இவர்தானே?
தமிழ் இன உணர்வாளர்களை தடா, பொடா சட்டங்களில் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் இவர்தானே! தனது மரணத்தின் இறுதிவரை தமிழ் இன உணர்வு போராட்டங்களை பொலிஸ் உதவியுடன் நசுக்கியவரும் இவர்தானே!
மலிவு விலையில் மதுவை வழங்கி தமிழகத்தையும் மக்களையும் சீரழித்தவர். அதுமட்டுமன்றி மதுவிற்கு எதிராக பாடிய கோவனையும், மதுவிற்கு எதிராக போராடிய மாணவர்களையும் சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தியவரும் இவர்தானே!
மக்கள் பணத்தை ஊழல் செய்தமைக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர். சிறையில் விதிகளுக்கு மாறாக சசிகலா தன்னுடன் இருக்க வேண்டும் என அடம் பிடித்தவர். ஆனால் சிறப்புமுகாமில் அகதிகளை கணவன் மனைவிகளை பிரித்து அடைத்து வைத்திருக்கிறார்.
தனக்கு 21 நாட்களில் வழமைக்கு மாறாக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றவர். மதுரையில் கைது செய்யப்பட்ட 5 தமிழ் இன உணர்வாளர்களுக்கு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் ஜாமீன் வழங்க மறுக்கிறார்.
தனக்கு மட்டுமல்ல தனது வளர்ப்பு மகனுக்கும்கூட கடுமையான நோய் என்று கூறி ஜாமீன் விடுதலை பெற்றவர் சிறப்புமுகாமில் எழுந்து நடமாட முடியாத உண்மையான நோயாளிகளைக்கூட இரக்கமின்றி அடைத்து வைத்திருந்தார்.
இந்த நியாயங்களை எல்லாம் இப்ப கேட்கக்கூடாதாம். ஏனென்றால் அவ்வாறு கேட்பது நாகரீகம் இல்லையாம். அப்படியென்றால் மரணம் ஒருவருடைய தவறுகள் எல்லாவற்றையும் மன்னித்து விடுகிறதா?
இங்கு எனது கவலை எல்லாம், இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும், எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்று கூறுவது போல் இனி ஜெயா அம்மையார் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும் என்று கூறப்போகிறார்களே என்பதுதான்.

No comments:

Post a Comment