Monday, December 12, 2016

•மக்களின் போராட்டத்தினால் விடுதலை செய்யப்பட்ட தோழர் குமார் குணரட்னம்!

•மக்களின் போராட்டத்தினால் விடுதலை செய்யப்பட்ட தோழர் குமார் குணரட்னம்!
விசா முடிவடைந்த பின்பும் தங்கியிருந்தார் என்ற குற்றச்சாட்டில் பத்து மாதங்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்ட ஒரே தலைவர் குமார் குணரட்னம் மட்டுமே.
கொலை செய்த, கொள்ளையடித்த, ஊழல் செய்த, பாலியல் குற்றங்கள் செய்த அரசியல் தலைவர்கள் எல்லாம் வெளியில் சுதந்திரமாக திரியும்போது கடவுச்சீட்டு குற்றத்தின் பேரால் தண்டிக்கப்பட்ட ஒரே தலைவரும் குமார் குணரட்னம் மட்டுமே.
குமார் குணரட்னத்தின் அரசியலை நேரடியாக எதிர் கொள்ள முடியாத ஆட்சியாளர்கள் சட்டத்தின் பெயரால் நயவஞ்சகமாக அவரை தண்டித்தார்கள்.
அதே சட்டத்தின் பெயரால் அவரை நாடு கடத்தவும் அவருக்குரிய ஜனநாயகத்தை மறுக்கவும் அவர்கள் முயற்சி செய்தனர்.
அவரை கைது செய்து வைத்துக்கொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அவருடைய கட்சியின் போராட்டங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பேரம் பேசினார்கள்.
குமார் குணரட்டனத்தைவிட தமக்கு கட்சியே பெரிது என அவருடைய கட்சியினர் தெரிவித்தமையினால் அவரை தொடர்ந்தும் சிறையில் அடைத்தனர்.
அதனால் ஆரம்பம் முதலே மக்கள் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் அரசியல் செய்வதற்குரிய உரிமையை வழங்க வேண்டும் எனவும் குரல் கொடுத்து வந்தனர்.
இலங்கையில் மட்டுமன்றி உலகம் பூராவும் பல நாடுகளில் குமாரின் விடுதலையை வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.
மக்களின் போராட்டத்தின் பயனாய் குமார் குணரட்டனம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் நாடு கடத்தப்பட மாட்டார் என்றும் அவருக்கு மீண்டும் குடியுரிமை வழங்கப்படும் எனவும் அரசு வாக்குறுயளித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்டிருக்கும் குமார் குணரட்னம் இனி வெளிப்படையாக மக்கள் மத்தியில் தனது அரசியல் பணிகளை முன்னனெடுக்க முடியும் என நம்புகிறோம்.
தமிழ் மக்களின் சுதந்திரத்தை மறுக்கும் சிங்கள இனம் ஒருபோதும் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது என்ற உண்மையை அவர் சிங்கள மக்களுக்கு கூறவேண்டும் என விரும்புகிறோம்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முதலில் அங்கீகரிக்க வேண்டும். அதன்பின்பே அதனை பிரயோகிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களிடம் கோர முடியும் என்பதை அவர் சிங்கள மக்களுக்கு கூற வேண்டும் என்று விரும்புகிறோம்.
புரட்சிக்கு மிகவும் அவசியமான, இனவாத்தை முறியடிக்கவும், இன ஜக்கியத்தை ஏற்படுத்தவும் தனது சக்தி முழுவதையும் அவர் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.

No comments:

Post a Comment