Saturday, December 31, 2016

•பிரித்தானிய வல்லரசு நாட்டில் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்!

•பிரித்தானிய வல்லரசு நாட்டில் மக்கள் பிச்சை எடுக்கும் அவலம்!
இலங்கை இந்திய நாடுகளில் பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகம் என்று ஜரோப்பிய ஊடகங்களால் கிண்டலடிக்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது.
ஆனால் இப்போது அந்த ஜரோப்பிய நாடுகளிலேயே பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரித்தானிய வல்லரசு நாட்டில் பிச்சை எடுப்பது சட்டப்படி குற்றம். ஆனால் இன்று லண்டன் வீதிகள் எங்கும் பிச்சைக்காரர்கள் இருப்பதைக் காணலாம்.
லண்டனில் ஈஸ்ட்காம் பகுதி ஏழைகள் அதிகம் உள்ள பகுதியாகும். ஆனால் அந்தப் பகுதியில்கூட ரயில் நிலையம் முன்னால் பிச்சை எடுப்பவர்களை காணக்கூடியதாக உள்ளது.
வீதிகளில் கிறிஸ்மஸ் விழாவிற்காக வண்ண விளக்குகள் ஒளிர்கின்றன. ஆனால் கடும் குளிரிலும் அந்த வீதிகளில் மக்கள் பிச்சை எடுக்கின்றமை குறித்து அரசு அக்கறை இன்றி இருக்கிறது.
முதலில் அகதிகள் அதிகம் வருவதே அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்று கூறி அகதிகள் வருவதை தடை செய்தார்கள்.
அதன்பின் ஜரோப்பியர் அதிகம் வருவதே பிரச்சனைக்கு காரணம் என்று கூறி ஜரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினார்கள்.
ஆனால் மக்களுக்கு இதுவரை எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மாறாக மக்களுக்கு வழங்கப்பட்ட உதவிகள், சலுகைகள் ஒவ்வொன்றாக குறைக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு வருடமும் விலைவாசி அதிகரிக்கின்றது. ஆனால் அந்தளவுக்கு மக்களின் சம்பளம் அதிகரிப்பதில்லை.
அதனால் மக்களின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையில் உள்ள இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது.
இந்த இடைவெளியை சமாளிக்க முடியாத மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வருகின்றார்கள். வேறு வழியின்றி பிச்சை எடுக்கிறார்கள்.
ஆனால் அதேவேளை பணக்காரர்கள் மேலும் பணக்காரகளாகி வருகின்றார்கள். உதாரணத்திற்கு பிரிட்டனின் அதிக சொத்து மதிப்பு குடும்பமாக டேவிட் மற்றும் சைமன் குடும்பம் இருக்கிறது.
இவர்களின் 2011 ம் ஆண்டு சொத்து மதிப்பு 6.18 பில்லியன் பவுண்ட்ஸ் ஆகும். 2016ல் இவர்களின் சொத்து மதிப்பு 13.10 பில்லியன் பவுண்ட்ஸ் அகும்.
அதாவது இவர்களின் சொத்து மதிப்பு 5 வருடத்தில் இரண்டு மடங்காகியுள்ளது. ஆனால் அரசு மக்களுக்கு உதவி வழங்க பணம் இல்லை என்று கூறுகிறது.
இயேசு மீண்டும் வருவார் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த இயேசு வந்தாலும் இந்த ஏழை மக்களின் பிரச்சனைகள் தீரப் போவதில்லை.
இன்றைய அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் செல்வம் போதாமை அல்ல. மாறாக செல்வம் சரிவரப் பங்கிடாமல் ஒரு சிலரின் கைகளில் குவிந்து வருவதே காரணமாகும்.
இந்த உண்மையை ஏழை மக்கள் உணராதவரையில் அல்லது அவர்களுக்கு உணர்த்தப்படாதவரையில் மாற்றம் என்பது வருவதற்கு சான்ஸ் இல்லை.

No comments:

Post a Comment