Saturday, October 26, 2019

•செயப்பெருமாளுக்கு அஞ்சலிகள்!

•செயப்பெருமாளுக்கு அஞ்சலிகள்!
எம்ஜிஆர் ஆட்சியின்போது கலைஞர் கருணாநிதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது மதுரையில் குண்டு வெடித்தது.
இக் குண்டு வெடிப்பு வழக்கில் திமுகவைச் சேர்ந்த செயப்பெருமாளும் டெலோ இயக்கத்தைச் சேர்ந்த ஈழத் தமிழரான கார்த்திக் என்பவரும் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள்மீதான இக் குண்டு வெடிப்பு வழக்கில் திமுக அமைச்சரான பழனிவேல்ராஜன் ஆஜராகி இருந்தார்.
பழனிவேல்ராஜன் அவர்களின் செல்வாக்கு காரணமாக செயப்பெருமாள் அவர்களுக்கு ஜாமீன் விடுதலை கிடைத்தது. ஆனால் கார்த்திக் ஈழத் தமிழர் என்பதால் ஜாமீன் கிடைக்கவில்லை.
கார்த்திக் அவர்களுக்கு ஜாமீனும் கிடைக்கவில்லை. வழக்கும் விசாரணையின்றி கிடப்பில் போடப்பட்டது. அவருடைய இயக்கமான டெலோ இயக்கமும் அவருக்கு உதவவில்லை. அவர் யாழ்ப்பாணத்தில் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் குடும்பத்தவர்களின் உதவியும் கிடைக்கவில்லை.
அவர் பல வருடங்களாக மதுரை சிறையில் வாடினார். அவரை யாரும் வந்து பார்ப்பதில்லை. இந்நிலையில் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டபோது கார்த்திக்கின் சோகக்கதையை அறிந்தேன்.
இதனால் உடனே பழனிவேல்ராஜன் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். “ஒரு ஈழத்தமிழர் திமுக வுக்கு உதவியதால் இப்போது சிறையில் வாடுகிறார். அவருக்கு ஜாமீன் கிடைக்க வழி செய்யவேண்டும் அல்லது வழக்கு விசாரணை நடக்கவாவது உதவ வேண்டும்” என்று கோரினேன்.
உடனே பழனிவேல்ராஜன் அவர்கள் கார்த்திக் விடயம் இதுவரை யாரும் தன் கவனத்திற்கு கொண்டுவரவில்லை என்றும் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று எனக்கு தகவல் அனுப்பினார்.
அவர் கூறியபடி வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. செயப்பெருமாளுக்கு மட்டுமல்ல கார்த்திக்கும் பழனிவேல்ராஜன் அவர்களே ஆஜராகி வாதாடினார்
கார்த்திக் மற்றும் செயப்பெருமாள் இருவருக்கும் ஆயள்தண்டனை வழங்கப்பட்டது. இதனால் கார்த்திக் ஆயள்தண்டனை காலமாக 14 வருடங்கள் சிறையில் கழித்த பின்பு விடுதலையானார்.
மதுரை சிறையில்தான் செயப்பெருமாள் அவர்களின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. அவர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானவர்.
நான் மதுரை சிறையில் இருந்து மாற்றப்பட்டபின்பு செயப்பெருமாள் குறித்து எதுவும் அறிய முடியவில்லை.
இன்று பல வருடங்களின் பின்னர் அவர் பற்றிய செய்தி முகநூல் மூலம் அறிந்தேன். ஆனால் அது அவரது மரண செய்தியாக இருக்கும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.
அவருக்கும் அவரது குடும்பத்தவர்களுக்கும் என் அஞ்சலிகள்.
குறிப்பு – திமுக குண்டு வைத்த செய்தியும் அதற்கு டெலோ இயக்கத்தை சேர்ந்த ஈழத் தமிழர் உதவினார் என்பதும் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

No comments:

Post a Comment