Sunday, October 6, 2019

மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர் போராட்டங்கள்.

மீண்டும் எழுந்து நிற்க முயலும் ஈழத் தமிழர் போராட்டங்கள்.
- தோழர் பாலன்.

மீண்டும் எழுந்து நிற்பதற்காக ஈழத் தமிழர்கள் “எழுக தமிழ்” என்னும் பெயரில் தாயகத்திலும் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் பல்வேறு வடிவங்களில்  போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். “எழுக தமிழ்” என்று கூறும்போது சிலர் “தமிழ் என்ன வீழ்ந்தா கிடக்கிறது?” என்று நக்கலாக கேட்கிறார்கள். இதில் ஆச்சரியம் இல்லை. தமிழன் எழும்போதெல்லாம் இப்படி கேட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். ஆனால் அவர்களையும் தாண்டி தமிழ் இனம் எழுந்து நின்றது என்பதே வீரம் செறிந்த வரலாறாக சரித்திரத்தில் இருக்கிறது.

வீழ்வது அவமானம் இல்லை. எழுந்து நிற்க முயலாமல் வீழ்ந்தே கிடப்பதுதான் அவமானம். இதை தமிழ் மக்கள் நன்கு புரிந்திருக்கிறார்கள். எனவேதான் அவர்கள் மீண்டும் எழுந்து நிற்க முயல்கிறார்கள். நூறு வருடம் போத்துக்கேயரின் கீழு; வீழ்ந்து கிடந்தார்கள். ஆனால் நூறாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூறு வருடம் ஒல்லாந்தரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூறவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. நூற்றிஜம்பது வருடம் ஆங்கிலேயரின் கீழ் விழுந்து கிடந்தார்கள். ஆனால் நூற்றிஜம்பதாவது வருடம் அவர்கள் எழுந்து நின்றார்கள் என்பதே வரலாறு. இவ்வாறு கடந்த வரலாறு முழுவதும் விழுந்தபோதெல்லாம் எழுந்து நின்ற இனமே ஈழத் தமிழர்கள். இப்போது எழுபது வருடமாக இலங்கை அரசின் கீழ் வீழ்ந்து கிடக்கிறார்கள். எனவேதான் மீண்டும்  எழுந்து நிற்க அவர்கள் முயல்கிறார்கள். ஈழத் தமிழர்கள் மீண்டும் எழுந்து நிற்க முயல்வது ஆச்சரியம் இல்லை. மாறாக அவர்கள் எழுந்து நிற்க முயலாவிட்டால்தான் ஆச்சரியம். 

ஓட முடியாதவர்கள் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்கள் தவழ்ந்தாவது செல்ல வேண்டும்.  ஆனால் இலக்கை அடையும்வரை அனைவரும் நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்றார் ஓர் அறிஞர். அவர் கூறியபடி தமிழ் மக்களும் சிலர் சயிக்கிளில் ஓடுகிறார்கள். சிலர் நடந்து செல்கிறார்கள். சிலர் பேரணியாக செல்கிறார்கள். இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் தமிழ் மக்கள் தமது இலக்கை அடைவதற்காக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே. ஆனால் இதை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அந்த சிலர் தொடர்ந்தும் இதனால் என்ன பயன் என்றும் பத்து வருடமாக நடந்தும் எந்த பயனும் பெறவில்லையே என்றும் கூறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் வெல்லும்வரை வீண் முயற்சி என்று இகழ்வார்கள் வென்றபின்பு விடா முயற்சி என்று பாராட்டுவார்கள்.

சிலர் இவ்வாறு இகழ்வாக பேசினாலும் வேறு சிலர் உண்மையாகவே இப் போராட்டங்கள் பயன் தருமா என்று சந்தேகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களிடத்தில் “நிச்சயம் இப் போராட்டங்கள் பயன்தரும்” என நாம் உறுதியாக கூறி வருகிறோம். ஏனெனில் இப் போராட்டங்கள் யாவற்றிலும் தமிழ் மக்கள் தமக்கான நியாயத்தை கோரி சர்வதே மக்களிடம் செல்கின்றனர். மக்களிடம் செல்லும் எப் போராட்டமும் தோல்வி அடைந்ததில்லை. தம்மை நாடி வரும் எவரையும் சர்வதேச மக்கள் ஏமாற்றியதில்லை. கைவிட்டதுமில்லை. 

இரண்டு நாட்களில் 40 ஆயிரம் மக்களை கொன்று புதைத்தால் ஈழத் தமிழ் இனம் போராட்டத்தை கைவிட்டு அடிமையாக வீழ்ந்து கிடக்கும் என இலங்கை இந்திய அரசுகள் நினைத்தன. தலைவர்களை விலைக்கு வாங்கிவிட்டால் தமிழ் இனம் எழுந்து போராடாமல் இருந்துவிடும் என்றும் இவ் அரசுகள் நினைத்தன. ஆனால் கடல் கடந்து போனாலும் தம் உறவுகளுக்காக தமக்கு தெரிந்த வழியில் தம்மால் இயன்ற போராட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை புலம்பெயர்ந்த தமிழர்கள் காட்டி வருகின்றனர். தாம் வாழும் நாடுகளில் அவர்கள் மக்களை சந்தித்து தமக்கான நியாயத்தை கேட்டு வருகின்றனர். “மக்களே ,மக்கள் மட்டுமே வரலாற்றை படைக்கிறார்கள், தலைவர்கள் அல்ல” என்பதை அவர்கள் நிரூபித்து வருகின்றனர்.

மக்களிடம் செல்வது பயன் அற்றதா? 

ஜெனிவாவில் ஜநா முன்னால் கோஷம் போடுவதால் தீர்வு வந்துவிடுமா? அல்லது ஜெனிவாவுக்கு நடந்து செல்வதால் என்ன பயன்? என்று சிலர் முதலில் கேட்டனர். பின்னர் அவர்கள் மக்களை சந்திப்பதால் என்ன பயன் என்று இப்போது கேட்கின்றனர். உண்மைதான். மக்களை சந்திப்பதால் உடனும் எந்தப்பயனும் வந்துவிடப் போவதில்லைத்தான். ஆனாலும் இதில் ஒரு பயன் இருக்கத்தான் செய்கிறது. வல்லரசு நாடுகள் தாமாக ஒருபோதும் எம்மீது இரக்கம் கொண்டு தீர்வு கிடைக்க வழி செய்யப் போவதில்லை என்பதும் எமக்கு தெரிந்துதான் இருக்கிறது. ஆனால், அமெரிக்க வல்லரசுக்கு எதிராக வியட்நாம் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, ரஸ்சிய வல்லரசுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மக்கள் வெற்றிபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, 2ம் உலக யுத்தத்தின் பின்னர் யூத மக்கள் தமக்கென்று ஒரு நாடுபெற எப்படி உலக மக்களின் ஆதரவு உதவியாக இருந்ததோ, அதேபோன்று ஈழத் தமிழ்மக்களும் தமக்குரிய தீர்வுபெற உலக மக்களின் ஆதரவை வென்றெடுப்பது அவசியம் ஆகும். அதைத்தான் ஜெனிவாவில் ஒன்றுகூடும் ஈழத்தமிழ் மக்கள் செய்கிறார்கள். இனியும் அதைச் செய்வார்கள்.

பிரான்சில் இருந்து நடை பயணம், லண்டனில் பிரதமர் மாளிகை முன்; ஆர்ப்பாட்டம் மற்றும் கனடாவில் கவனயீர்ப்பு பேரணி என உலகெங்கும் மக்களை ஈழத்  தமிழ் மக்கள் சந்திக்கிறார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலை படங்களை அம் மக்களுக்கு காட்டி நீதி கோருகிறார்கள். இவ்வாறு உலக மக்களின் ஆதரவைப் பெற்று வருகிறார்கள். அதனால்தான் இலங்கை இந்திய அரசுகள் அச்சம் கொள்கின்றன. புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களை நசுக்க பல வழிகளிலும் அவை முயற்சி செய்கின்றன.

தமிழ் மக்கள் சிலர் போராடுகின்றார்கள் என்பது உண்மைதான். ஆனால் தமிழ் மக்கள் எல்லோரும் போராடவில்லை என்பதும் உண்மைதான். இருப்பினும் இன்று போராடுபவர்களின் எண்ணிக்கை அளவில் சொற்பமாக இருந்தாலும் இவர்கள் மேற்கொள்ளும் இப் போராட்டங்கள் காலப்போக்கில் முழு தமிழ் மக்களையும் ஒன்றிணைக்கும் சக்தி கொண்டவை. ஏனெனில் உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் முதலில் ஒரு சிறு பொறியில் இருந்துதானே ஆரம்பித்தன. அவ்வாறான பெரு நெருப்பை உருவாக்கும் சிறுபொறியாக இந்த சிலர் இருக்கிறார்கள். இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் நண்பர்களுடன் பாபர்கியூ சாப்பிட்டு மகிழ்ந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் கொலிடேக்கு நல்லூர் திருவிழாவுக்கு சென்று வந்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் குடும்பத்தினருடனும் பிள்ளைகளுடனும் நேரத்தை செலவு செய்திருக்கலாம். அல்லது இவர்கள் விரும்பியிருந்தால் மற்றவர்கள்போல் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்திருக்கலாம். ஆனால் இவர்கள் இதையெல்லாம் விட்டிட்டு தமிழ் மக்களுக்கு நடந்த இன அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவா செல்கிறார்கள்.

உண்மையில் ஜ.நா வில் நியாயம் கேட்பது என்றால் இவர்கள் காரிலோ அல்லது ரயில் மூலமோ ஜெனிவா சென்றிருக்கலாம். ஆனால் இவர்களோ பிரான்சில் இருந்து நடந்து ஜெனிவா சென்றார்கள். இன்னும் சிலர் சயிக்கிளில் சென்றார்கள். வழியெங்கும் தமிழ் மக்களுக்கு எற்பட்ட இன அழிப்பை மக்களுக்கு கூறிச் சென்றார்கள். இதன் மூலம் வழியெங்கும் இருந்த நாடுகளில் உள்ள மக்களின் ஆதரவை திரட்டினார்கள். சர்வதேச மக்களின் ஆதரவின் மூலமே தமிழருக்கான நீதியைப் பெற முடியும் என்பதை உணர்ந்து இவர்கள் செயற்படுகிறார்கள். இவர்கள் சரியான பாதையில் நடந்து ஜ.நா வை அடைந்தார்கள். அதேபோல் சரியான போராட்டப் பாதையில் பயணிப்பதால் தமது இலக்கையும் அடைவார்கள். அது உறுதி.

அடுத்த சந்ததி போராட்டத்தை கையில் எடுக்கிறதா?

ஓடாத மானும் போராடாத இனமும் இதுவரை வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. இதை நிரூபிக்கும் வண்ணம் ஈழத் தமிழர்களின் அடுத்த சந்ததியும் போராட்டத்தை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளது. இது தமிழ் இனம் அழியாது, வாழும் என்ற நம்பிக்கையை உலகிற்கு தருகிறது. எழுக தமிழின் குறிப்பிடத்தக்க வெற்றிகளில் இதுவும் ஒன்று. 

“புலத்தில் இருக்கும் வயதான நாலுபேர்தான் கத்திக் கொண்டிருக்கிறார்கள், அடுத்த சந்ததியினர் போராட்டம் குறித்து அக்கறை கொள்ளமாட்டார்கள்” என்று சொல்பவர்களுக்கு தகுந்த பதிலை அடுத்த சந்தியினரான இளையவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் இல்லை. எனெனில் என்னதான் வசதியான வாழ்வு கிடைத்தாலும் தங்களின் வேர்கள் குறித்த தேடல்களை நடத்த வேண்டிய தேவை இந்த இளையவர்களுக்கு ஏற்படுகிறது. தமது வேர்களை தேடி அறியும் இந்த இளையவர்கள் தமக்கான அங்கீகாரத்திற்காக குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் உலகத்திடம் உலகத்திற்கு புரியும் மொழியில் கேட்க ஆரம்பித்துள்ளார்கள். இது மீண்டும் தமிழ் இனம் எழுந்து நிற்கும் என்ற நம்பிக்கையை உலகில் ஏற்படுத்துகிறது.

கருத்து மக்களை பற்றிக் கொண்டால் அது பௌதீக சக்தி பெற்றுவிடும் என்றார் தோழர் மாசே துங். அது உண்மைதான் என்பதை புலம்பெயர்ந்த நாடுகளில் காணமுடிகிறது. “பயங்கரவாதிகள்” என்றார்கள் “பயங்கரவாத இயக்கம்” என்றார்கள் “பயங்கரவாதிகளின் கொடி” என்று அதையும் தடை செய்தார்கள் எந்த நாடுகள் தடை செய்தனவோ அந்த நாடுகளில் உள்ள மக்கள் அதை உயர்த்திப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். ஆம். மக்களை நம்புபவர்களை மக்கள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை. மக்களிடம் செல்லும் கருத்துகள் அரசுகளையே புரட்டி எறியும் மாபெரும் சக்தி பெறுகின்றன. அடுத்த சந்ததியினர் இதை எம் கண் முன்னே நிகழ்திக் காட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment