Tuesday, May 30, 2017

•தளபதி கருணா அம்மானுக்கு அமைச்சு பதவி சாதாரண போராளிக்கு 50 வருட ஆயுள் தண்டனை

•தளபதி கருணா அம்மானுக்கு அமைச்சு பதவி
சாதாரண போராளிக்கு 50 வருட ஆயுள் தண்டனை
இதுதானா இலங்கை அரசின் புனர்வாழ்வு கொள்கை?
மட்டக்களப்பு முறக்கட்டானையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் தனது 19 வது வயதில் 1993ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு ஆயுள் தண்டனையும் 50 வருட கடூழிய தண்டனையும் வழங்கப்பட்டது.
கடந்த 24 வருடங்களாக சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் மகேந்திரம் தனது 16 வயதில் புலிகள் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இரண்டு வருடங்கள் மட்டுமே அவர் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் அவர் இயக்கத்தில் இருந்து விலகி வீட்டில் இருந்தபோதே கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவர் அமைப்பில் இருந்தபோது தளபதியாக இருந்த கருணா அம்மானின் கட்டளைப்படி சிறு எடுபிடி வேலைகளை செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தனக்கு மன்னிப்பு அளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.
இங்கு எமது கேள்வி என்னவெனில் கட்டளை இட்ட கருணா அம்மானுக்கு அமைச்சு பதவியை இலங்கை அரசு வழங்கியுள்ளது. ஆனால் அவர் கட்டளையை ஏற்று நடந்த சாதாரண போராளியை விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கின்றது.
சகல போராளிகளுக்கும் மன்னிப்பு அளித்து புனர்வாழ்வு வழங்கப்பட்டிருப்தாக இலங்கை அரசு உலகத்திற்கு கூறுகிறது. ஆனால் 2 வருடம் மட்டுமே இயக்கத்தில் இருந்த ஒரு சாதாரண போராளிக்கு 24 வருடம் கழிந்த பின்பும் விடுதலை செய்யாமல் அடைத்து வைத்திருக்கிறது.
புலிகளுக்கு வீட்டில் தங்க இடம் கொடுத்த குற்றச்சாட்டில் தேவதாசன் என்பவருக்கு அண்மையில் 18 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் புலிகளுக்கு ஆயுதம் வாங்கி கொடுத்த கே.பி மீது இதுவரை வழக்குகூட போடவில்லை.
தன்னை கொல்ல வந்த புலிப் போராளியைக்கூட ஜனாதிபதி மன்னித்து விடுதலை செய்தார் என்று ஒருபுறம் கூறிக்கொண்டு மறுபுறத்தில் பலரையும் சிறையில் அடைத்து வைத்திருப்பது என்ன நியாயம்?
நல்லாட்சி நடக்கிறது. நல்லிணக்கமாக செயற்படுகிறோம் என்று சுமந்திரனும் சம்பந்தர் அய்யாவும் மாறி மாறி கூறி வருகிறார்கள். இதுதானா நல்லாட்சி? இதுதானா நல்லிணக்கம்?
மலையகத்தைச் சேர்ந்த வயதான தாயார் ஒருவர் புலிகளுக்கு சாப்பாடு கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் அளிக்காததால் அவர் கடந்த வருடம் சிறையிலேயே மரணமடைந்துவிட்டார்.
இந்த தாயார் மலையகத்தை சேர்ந்த தமிழர் என்பது மட்டுமன்றி அவர் ஒரு ஏழை என்பதால் எமது தமிழ் தலைவர்கள் யாருமே அவருக்காக குரல் கொடுக்கவில்லை. இவ்வாறு பலர் இன்னமும் குரல் கொடுக்கப்படாமல் சிறையில் அடைபட்டு இருக்கின்றனர்.
மக்களிடம் வாக்கு பெற்று பதவியைப் பெற்றவர்கள் தமக்கு சொகுசு வாகனம் சொகுசு பங்களா பெறுவதில்தான் கவனம் செலுத்துகிறார்களேயொழிய சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலையில் அக்கறை கொள்ளவில்லை.
யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய தூதர் கூட வடபகுதி எங்கும் காந்தி சிலைகளை நிறுவ எடுக்கும் அக்கறையில் ஒரு சிறுதுளி அக்கறைக்கூட இந்த சிறையில் இருப்பவர்களின் விடுதலையில் கொள்ளவில்லை.
இந்நிலையில் வெசாக் கொண்டாட வரும் பிரதமர் மோடி தமிழருக்கு தீர்வு பெற்று தரப்போகிறார் என சிலர் கூவுகிறார்கள். அவர்களை என்ன வென்று அழைப்பது?

No comments:

Post a Comment