Tuesday, May 30, 2017

•இந்தியாவும் இங்கிலாந்தும் முருகன் நளினி மகள் அரித்ரா வும்!!

•இந்தியாவும் இங்கிலாந்தும்
முருகன் நளினி மகள் அரித்ரா வும்!!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் நளினி தம்பதியினருக்கு அரித்ரா என்ற பெண் குழந்தை சிறையில் பிறந்தது யாவரும் அறிந்ததே.
இந்தியாவில் பிறந்ததால் மட்டுமன்றி தாயார் இந்திய குடியுரிமை உள்ளவர் என்பதால் அரித்ராவும் இந்திய குடியுரிமை பெறுவதற்கு சட்டப்படி உருத்துடையவர் ஆவார்.
ஆனால் இந்திய அரசு அரித்ராவுக்கு இந்திய குடியுரிமை வழங்காதது மட்டுமன்றி அவர் பெற்றோரை பார்வையிட விசாவும் வழங்க மறுத்து வருகிறது.
இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறார்கள். ஆனால் அரித்ராவுக்கு மட்டும் சட்டப்படியான நியாயம் வழங்க மறுக்கிறார்கள்.
அரித்ரா செய்த குற்றம் என்ன? எதற்காக அவருக்கு இத்தனை கொடிய தண்டனை வழங்க வேண்டும்? ஏன் அவர் தன் பெற்றோரை பார்வையிடுவதை தடுக்க வேண்டும்?
அரித்ரா அகதியாக இங்கிலாந்து வந்தார். அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது மட்டுமன்றி அவர் மருத்துவ கல்வி கற்பதற்கும்கூட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
எங்கேயோ இருக்கிற இங்கிலாந்து அரித்ராவை டாக்டராக்கியது மட்டுமன்றி குடியுரிமையும் வழங்கியுளது. ஆனால் ஏழு கோடி தமிழர் இருக்கிற இந்தியா பெற்றோரை பார்க்கக்கூட விசா வழங்க மறுக்கிறது.
தமிழின அழிப்பை மேற்கொள்ளும் இலங்கை அரசுகூட இந்தியாவில் அகதிமுகாமில் பிறந்த குழந்தைகளுக்கு அண்மையில் குடியுரிமை வழங்கியுள்ளது.
இலங்கை அரசு நினைத்திருந்தால் அகதி குழந்தைகள் இலங்கையில் பிறக்கவில்லை என்ற சட்டரீதியான காரணத்தைக் காட்டி குடியுரிமையை மறுத்திருக்கலாம்.
ஆனால் இந்த கொடிய இலங்கை அரசுகூட இரக்கப்பட்டு அகதி குழந்தைகளுக்கு இலங்கை குடியுரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இந்திய அரசு இந்தியாவில் பிறந்தவருக்கு குடியுரிமை வழங்காதது மட்டுமன்றி விசாவைக்கூட மறுக்கிறது.
முருகனின் மகளுக்கு மட்டுமன்றி முருகனின் தாயாருக்கூட பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வசிக்கும் முருகனின் தாயார் வயதான காலத்திலும் தான் இறப்பதற்கு முன்னர் மகன் முருகனை ஒருதரம் பார்த்தவிட வேண்டும் என்று விரும்பி இந்தியா வந்துள்ளார்.
மகனைப் பார்வையிடுவதற்கு என்று காரணம் கூறி முறைப்படி விசா எடுத்து வந்திருந்தும்கூட அந்த தாயார் மகனைப் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
முருகன் சிறையில் இரகசியமாக இரண்டு கைத் தொலைபேசிகளை வைத்திருந்ததாக அவர் மீது வழக்கு தாக்கல் செயய்யப்ட்டுள்ளது.
அவர் மீது போடப்பட்ட வழக்கு இன்னும் விசாரிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.
ஆம். அவர் சட்டவிரோதமாக கைத்தொலைபேசி வைத்திருந்ததால் தாயாரை பார்வையிட அனுமதி மறுப்பு என்ற தண்டனை வழங்கப்பட்டுள்ளதாம்.
முருகன் செய்தது குற்றம் என்றால் அதை நீதிமன்றம்தானே தண்டிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே வழக்கு பதிவு செய்த சிறைத்துறை எப்படி தண்டனை கொடுக்க முடியும்?
முருகன் செய்தது தவறு என்றாலும் அதற்குரிய தண்டனையாக தாயார் பார்வையிடுவதை எப்படி மறுக்க முடியும்?
முருகன் மகளை மட்டுமன்றி தாயரையும்கூட பார்வையிடுவதற்கே அனுமதி மறுக்கும் இந்திய அரசு முருகன் உட்பட ஏழுபேரையும் விடுதலை செய்யும் என்று எப்படி நம்புவது?
இந்துதமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று நம்புபவர்கள் முருகன் கூட இந்துதானே. அவருக்கு ஏன் முதலில் உதவக்கூடாது?

No comments:

Post a Comment