•மலையக ஆற்றில் கரைந்த
தோழர் நெப்போலியன் சிந்திய ரத்தம்!
தோழர் நெப்போலியன் சிந்திய ரத்தம்!
மகிந்த ராஜபக்சவின் படுகொலைகளை கண்டிக்கும் அமைச்சர் மனோகணேசன் இந்தியாவில் படுகொலைகள் புரிந்த மோடியைக் கண்டிப்பாரா என நான் கேட்டிருந்தேன்.
எனது கேள்விக்கு பதில் அளிக்காத அமைச்சர் மனோ கணேசன் எனது பதிவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து என்னை வந்து நாட்டில் புரட்சி செய்ய தயாரா என கிண்டலாக கேட்டிருந்தார்.
மனோ கணேசனுக்கு என்னை தெரிந்திருக்காவிடினும் எனது கடந்தகால அர்ப்பணிப்பை அறிந்திருக்காவிடினும் எமது தோழர் நெப்போலியனைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
கரவெட்டியில் பிறந்த தோழர் நெப்போலியன் ஆரம்பத்தில் புலிகள் அமைப்பில் சேர்ந்தார் .அங்குதான் மனோகரன் என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு நெப்போலியன் என்ற பெயர் சூட்டப்பட்டது.
புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தபோது புதியபாதை என்னும் புளட் பிரிவில் நெப்போலியன் இருந்தார்.
பின்னர் பேரவை என்னும் புரட்சிகர அமைப்பு தோற்றுவிக்கப்பட்டபோது அதில் ஒரு செயற்குழு உறுப்பினராக நெப்போலியன் விளங்கினார்.
மகாவிலாச்சி பொலிஸ் நிலைய தாக்குதல், சென்ரல்காம்ப் பொலிஸ் நிலைய தாக்குதல், களுவாஞ்சிக்குடி பொலிஸ் ஜீப் மீதான கண்;ணிவெடி தாக்குதல், வெல்லாவெளி பொலிஸ் மீதான தாக்குதல், வாகரை ராணுவம் மீதான தாக்குதல் என பல தாக்குதல்கள் நெப்போலியன் தலைமையிலேயே பேரவை இயக்கத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்கிளப்பு, தமிழ்நாடு என பல்வேறு இடங்களிலும் அரசியல் பணிபுரிந்த நெப்போலியன் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க 1986ல் மலையகத்திற்கு சென்றார்.
மலையகத்தில் தொண்டமானின் அரசியல் ஆளுமைக்கு எதிராக பலரும் அரசியல் செய்ய பயந்திருந்த நேரத்தில் அங்கு சென்று இளைஞர்களை திரட்டியவர் நெப்போலியன்.
“மலையக மக்கள் விடுதலை முன்னணி” என்ற பெயரில் காலம் சென்ற சந்திரசேகரன் போன்றவர்களை அணிதிரட்டி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்தவர் நெப்போலியன்.
மலையகத்தில் நடத்தப்பட்ட பணப் பறிப்பு நடவடிக்கை ஒன்றையடுத்து நெப்போலியன் பற்றிய தகவல்கள் இலங்கை அரசுக்கு தெரிய வந்தன.
நெப்போலியனைக் கைது செய்வதற்கு இலங்கை பொலிசும் புலனாய்வு பிரிவுகளும் கடும் முயற்சிகள் மேற்கொண்டன.
இந்நிலையில் இந்திய உளவுப் படையின் வேண்டுகோளுக்கிணங்க ஈரோஸ் இயக்கம் நெப்போலியனைக் நயவஞ்சகமாக கொலை செய்தது.
நெப்போலியனை பிடித்து கையையும் காலையும் கட்டியதோடு துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்டுவிடும் என்பதால் கல்லால் மண்டையை உடைத்து கொன்றுள்ளார்கள் அந்த கொடியவர்கள்.
இறுதியாக நெப்போலியனின் உடலை தூக்கி ஆற்றில் எறிந்துள்ளார்கள். நெப்போலியன் சிந்திய ரத்தம் மலையக ஆற்றில் கலந்து கரைந்தது.
மலையக மக்களின் விடுதலைக்காக அந்த மலையக மக்கள் மத்தியில் சென்று பணி பரிந்தவர் எமது தோழர் நெப்போலியன். இறுதியில் அந்த மலையக மண்ணிலேயே அவர் புதைக்கப்படவில்லை. விதைக்கப்பட்டிருக்கிறார்..
தோழர் நெப்போலியன் மட்டுமல்ல அவரது சகோதர் மகேந்திரன் என்பவரும் இந்திய ராணுவத்தின் குண்டு வீச்சில் நெடுங்கேணியில் கொல்லப்பட்டுள்ளார்.
இன்று அமரர் சந்திரசேகரனின் கனவுகளை நனவாக்க உழைக்கப்போவதாக அமைச்சர் மனோ கணேசன் கூறுகிறார்.
ஆனால் அந்த சந்திரசேகரனையே மலையக மக்கள விடுதலை முன்னணி என்ற அரசியலுக்குள் கொண்டு வந்தவர் தோழர் நெப்போலியன் என்பதை அவர் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment