Tuesday, May 30, 2017

“மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.

• “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” - புலவர் கலியபெருமாள்.
தமிழ்நாட்டு “சே” என்று அழைக்கப்பட்ட தோழர் கலியபெருமாள் அவர்களின் நினைவு தினம் இன்று ஆகும்.(16.05.2007)
“தமிழ்நாடு விடுதலைப் படை”யினை முன்னெடுத்த தோழர் தமிழரசன் அவர்களின் தலைவர் என அறியப்பட்டவர்.
தன் வாழ்வின் இறுதிவரை புரட்சியை நேசித்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத் தமிழர்களுக்கு தனது உறுதியான ஆதரவை எப்போதும் வழங்கியவர் புலவர் கலியபெருமாள் அவர்கள்.
புலவர் கலியப்பெருமாள் தனது இறுதிக்காலங்களில் எழுதிய “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” என்னும் புத்தகத்தில் 113ம் பக்கத்தில் சிறைக்குள் பிரபாகரனுடன் சந்திப்பு என்னும் தலைப்பில் எழுதிய வரிகள் வருமாறு,
"சென்னை பாண்டி பஜாரில் பிரபாகரன் அணிக்கும் முகுந்தன் அணிக்கும் மோதல் எற்பட்டு பிரபாகரனையும் ராகவனையும் காவல் தறையினர் கைது செய்து சென்னை மத்திய சிறையில் அடைத்தார்கள்.
பிரபாகரனை எங்கள் அறைக்கு அருகிலேயே அடைத்தார்கள். இராகவன் என்னிடம் பேசும்போது எங்கள் விடுதலைப் போராட்டத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா எனக் கேட்டார். ஆம் உங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கிறேன் என்று கூறினேன்.
அடுத்து உங்கள் கட்சி ஆதரிக்கின்றதா என்று இராகவன் கேட்டார். எங்கள் கட்சி ஆதரிக்கவில்லை என்று சொன்னேன். வங்கதேச விடுதலையை ஆதரித்த சீனா எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
அதைப்பற்றியெல்லாம் நீங்கள் யோசிக்காதீர்கள். சீனாவுக்கும் இலங்கைக்கும் நல்ல உறவு இருக்கிறது.
மாவோ எழுதிய ராணுவப்படைப்பு என்ற நூலில் இருந்து படிப்பினைகளைப் பெற்று உங்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள் என்று வழிகாட்டினேன்."
நானும் பிரபாகரனும் ஒரே சிறையில் இருந்தோம். அவர் தன் பகுதியிலிருந்து பெரும்பாலும் என்னுடன் பேசுவார்.
அதன் பின் விடுதலையாகி சிறையில் இருந்து சென்றுவிட்டார்கள். என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது பிரபாகரன் என்னை இரண்டு முறை வெளியில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது பற்றி பழ. நெடுமாறன் அவர்கள் குறிப்பிடும்போது,
“சென்னை சிறையில் புலவர் இருந்தபோது தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களும் சில மாதங்கள் அந்த சிறையில் இருந்தார். சிறையில் இருவரும் மிக நெருக்கமாக பழகி நட்பு கொண்டனர்.
பிற்காலத்தில் பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசும்போது நான் பார்த்த தமிழ்நாட்டு தலைவர்களில் உறுதியும் எது நேர்ந்தாலும் கலங்காத உள்ளமும் நிறைந்தவர் புலவர் கலியபெருமாள் ஆவார். உண்மையான மக்கள் தொண்டர் அவர் என வாயாரப் புகழ்ந்துரைத்தது இன்னமும் எனது செவிகளில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment