Tuesday, May 30, 2017

•சுபவீ யின் பம்மாத்து!

•சுபவீ யின் பம்மாத்து!
சுபவீ திமுக அனுதாபியாகவோ அல்லது விசுவாசியாகவோ இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் எதற்காக பார்வதி அம்மாளுக்கு கலைஞர் அரசு செய்த தீங்கை முடி மறைக்க முனைகிறார்?
சுபவீ ஒரு நல்ல தமிழ் இன உணர்வாளராக மட்டுமல்ல செயற்பாட்டாளராகவும் ஒரு காலத்தில் இருந்தார்.
அப்போது ஈழத்தில் இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பு போன்று தமிழகத்தில் ஒரு விடுதலை அமைப்பை உருவாக்க முயன்றார்.
அதற்கு விடுதலைக் குயில்கள் என்று பெயர் வைத்தார். தானே அதற்கு தலைவராகவும் இருந்தார்.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பல இளைஞர்கள் அதில் ஆர்வமுடன் சேர்ந்தார்கள். அவர்கள் அமைப்பின் பணத் தேவைக்காக கொள்ளையடித்தார்கள்.
கொள்ளையடித்தவர்கள் எதிர்பாராதவிதமாக பொலிசில் பிடிபட்டுப்போனார்கள். அவர்கள் பொலிஸ் அடி தாங்க முடியாமல் தாம் விடுதலைக்குயில்கள் என்னும் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தமது தலைவர் சுபவீ என்பதையும் கக்கிவிட்டார்கள்.
எந்நேரமும் சுபவீ பொலிசாரினால் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலை. தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியின் காலடியில் ஓடிப் போய் விழுந்தார் சுபவீ.
சுபவீ பொலிஸ் கைதில் இருந்து காப்பாற்றப்பட்டார். ஆனால் அன்று கலைஞர் காலடியில் விழுந்த சுபவீ இன்னும் எழுந்திருக்கவேயில்லை.
தன்னை நம்பிய இளைஞர்களை சுபவீ கைவிட்டுவிட்டாரே என்பது கூட பரவாயில்லை. ஆனால் வயதான பார்வதியம்மாள் சிகிச்சை பெறமுடியாமல் திருப்பி அனுப்பப்பட்டதை கொஞ்சம்கூட கூச்சமின்றி நியாயப்படுத்துகிறாரே?
இனப் படுகொலையாளி மகிந்த ராஜபக்சகூட பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சை பெற இரங்கி அனுமதித்துள்ளார். ஆனால் இந்திய அரசு கொஞ்சம்கூட இரக்கமின்றி திருப்பி அனுப்பியது என்ன நியாயம்?
கலைஞருக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் நிச்சயம் பார்வதி அம்மாள் சிகிச்சை பெற அனுமதி கிடைக்க வழி செய்திருப்பார் என்று சுபவீ சொல்கிறார்.
பார்வதியம்மாள் இரகசியமாக வள்ளத்தில் திடீரென்று இந்தியா செல்லவில்லை. அவர் இலங்கை அரசிடம் அனுமதி பெற்று அதன்பின் இந்திய தூதராலயத்தில் விசா பெற்று, அதன் பின்னர் விமான டிக்கட் பெற்று, அதன் பின்னரே விமானத்தில் இந்தியா சென்றார்.
இந்தியா சென்ற பார்வதிஅம்மாள் விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்பப்படுகிறார். பார்வதி அம்மாள் சிகிச்சை பெறுவது மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றால் விசா வழங்காமல் விட்டிருக்கலாம்.
கொழும்பில் பார்வதியம்மாளின் சிகிச்சைக்கு விசா வழங்கிய மத்திய அரசு சென்னையில் விமான நிலையத்தில் அவரை திருப்பி அனுப்பும் முடிவை மேற்கொள்வதற்கு கலைஞர் அன்றி வேறு யார் காரமாக இருக்க முடியும்?
அதுமட்டுமன்றி, வயதான பார்வதி அம்மாளை திருப்பி அனுபியதற்கு எதிராக தமிழக மக்கள் கிளர்ந்தெழுந்தவுடன் மீண்டும் வந்தால் அனுமதிக்கப்டும் என்றும் ஆனால் எந்த அரசியல்வாதிகளையும் சந்திக்க கூடாது என்று கலைஞர் அறிக்கை விட்டார்.
பொதுவாக நோயாளியின் நலனை முன்னிட்டு பார்வையாளர்களை டாக்டர்கள் தடுப்பதுண்டு. ஆனால் உலகில் ஒரு நோயாளியை அரசியல்வாதிகள் பார்வையிடக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தது கலைஞரின் தமிழக அரசு மட்டுமே.
உண்மை இப்படியிருக்க சபவீ அவர்கள் கலைஞரை காப்பாற்ற பொய் கூறுகிறார். அவர் ஒரு பேராசிரியர் கூட.
சீ வெட்கம்.

No comments:

Post a Comment