Tuesday, May 30, 2017

•இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து வழக்கு தொடர இந்திய அரசு அனுமதிக்குமா?

•இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து
வழக்கு தொடர இந்திய அரசு அனுமதிக்குமா?
1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. இலங்கை அரசு சார்பாக ஜே.ஆர் ஜெயவர்த்தனாவும் இந்திய அரசு சார்பில் ராஜீவ் காந்தி அவர்களும் கைச்சாத்திட்டனர்.
இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே வடக்கு கிழக்கு இணைந்த மாகாணசபை தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும் அதனால் கிடைத்த வடக்கு கிழக்கு மாகாணசபையையும் நடைமுறைப்படுத்துவதற்காகவே புலிகள் மீது யுத்தம் புரிவதாகவும் அன்று இந்திய அரசு கூறியது.
ஆனால் இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பை ஜே.வி. கட்சியானது வழக்கு தொடர்ந்து நீதிமன்ற உத்தரவு மூலம் ரத்து செய்துள்ளது.
இங்கு எமது கேள்வி என்னவெனில் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு நாட்டு நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா?
ஒப்பந்தம் மூலம் ஏற்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் மூலம் ரத்து செய்ய முடியுமாயின் இலங்கை இந்திய ஒப்பந்தம் முழுவதையுமே ரத்து செய்ய முடியுமா?
வடக்கு கிழக்கு இணைப்பை ரத்து செய்யும்போது மௌனமாக இருந்த இந்திய அரசு இலங்கை இந்திய ஒப்பந்தம் நீதிமன்றம் மூலம் ரத்து செய்யப்படும்போது மௌனமாக இருக்குமா?
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிராக இலங்கை நீதிமன்றத்தில் வழக்கு தொடர இந்திய அரசு அனுமதிக்குமா?
நிச்சயமாக அனுமதிக்காது. ஏனெனில் வடக்கு கிழக்கு இணைப்பை ரத்து செய்வதால் இந்திய நலன்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமானால் இந்திய நலன்கள் பாதிக்கப்படும்.
இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலமே சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் எற்படுவதை இந்திய அரசால் தடுக்க முடிகிறது. அமெரிக்கா திருமலை துறைமுகத்தில் ஆதிக்கம் செலுத்த முனைவதை தடுக்க முடிகிறது.
தனது நலன்களை காப்பதற்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பாதுகாக்கும் இந்திய அரசானது தமிழ் மக்களின் நலன்கள் பாதிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் இந்திய அரசு பெற்றுக்கொண்ட அரசில் இராணுவ நலன்கள்,
(அ) இலங்கையின் வெளி உறவுகளில் கட்டுப்பாடு செலுத்தும் உரிமை
(ஆ) ஒலி ஒளி பரப்புகளை கட்டுப்படுத்தும் உரிமை
(இ) திருகோணமலை தளத்தின் மீது கட்டுப்பாடு. ( இந்தியாவின் நலனுக்கு எதிராக அந்நியப் படைகள் எதனையும் அனுமதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு.)
(ஈ) இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் உரிமை
(உ) இலங்கை ராணுவம் மீதும் இதர நாடுகளுடான ராணுவ உறவுகள் மீதும் கட்டுப்பாடு
இலங்கை இந்திய ஒப்பந்தம்மூலம் இந்திய அரசு பெற்றுக்கொண்ட பொருளாதார நலன்கள்,
(அ) இந்திய பொருட்களின் ஏற்றுமதிக்கான தடைகள் நீக்கப்படும்.
(ஆ) திருகோணமலை எண்ணெய் குதப் பணி ஒப்பந்தம் புத்துயிர் செய்யப்பட்டு இதன் செயல்பாடுகளிலும் லாபத்திலும் இந்தியாவுக்கு கட்டுப்பாடு
(இ) சுமார் 400 கோடி ரூபா வரையிலான நிர்மானப் பணிகள் இந்தியாவிற்கு வழங்கப்படும்.
(ஈ) இலங்கையின் மீன்பிடி எண்ணெய் ஆய்வு ஆற்றல்துறை ஆகியவை இந்தியாவுக்கு வழங்கப்படும்.
(உ) இலங்கை திட்டக்குழு மற்றும் உயர் வங்கி அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் உரிமை மூலம் இலங்கை பொருளாதார திட்ட வகுப்பில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு
(ஊ) உதவி என்கிற அடிப்படையில் இந்திய ரயில் பெட்டிகள் மற்றும் அசோக் லேலண்ட் பேருந்துகள் ஏற்றுமதி செய்தல்.
இவ்வாறு இந்த ஒப்பந்தமானது தமிழ் மக்களின் நலனைவிட இந்திய நலனையே அதிகம் கொண்டிருப்பதால்தான் இதனை ஒரு அடிமைசாசனம் என்றும் இதன்மூலம் வந்த இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு ராணுவம் என்றும் புலிகள் அறிவித்தார்கள்.
இந்த ஒப்பந்தம் மூலம் தனது ஆக்கிரமிப்பு நலன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்திய அரசானது இந்த ஒப்பந்தம் மூலம் கிடைத்த வடக்கு கிழக்கு இணைப்பை மீண்டும் தமிழ் மக்களுக்கு கிடைக்க வழி செய்யுமா?
இதுவே தமிழ் மக்கள் இந்திய அரசின் முன் வைக்கும் கேள்வியாகும்.

No comments:

Post a Comment