Tuesday, May 30, 2017

•சம்பந்தர் அய்யா கூறவேண்டியதை சீமான் கூறியிருப்பது உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது!

•சம்பந்தர் அய்யா கூறவேண்டியதை சீமான் கூறியிருப்பது
உண்மையிலே பாராட்டப்பட வேண்டியது!
நேற்று முன்தினம் மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் மீது தமிழக பொலிசார் தாக்குதல் நடத்தி பொய்வழக்கு போட்டதை “நாம்தமிழர்” கட்சி தலைவர் சீமான் மட்டுமே கண்டித்திருக்கிறார்.
அவர் தனது கண்டன அறிக்கையில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“தமிழகத்திற்குத் தஞ்சம்தேடிவரும் ஈழத்தமிழ் சொந்தங்கள் இங்குச் சந்திக்கும் துன்பத்துயரங்கள் எண்ணிலடங்காதவை. ஈழத்தமிழில் பேசினாலே பயங்கரவாதி என்று முத்திரை குத்துவது, அவர்களை எத்தகைய பணிகளிலும் ஈடுபடவிடாமல் தொந்தரவு செய்வது, எப்பொழுதும் கண்காணிப்பிலேயே வைத்திருப்பது, நாள் முழுக்க உழைத்து அவர்கள் பெறும் ஊதியத்தை அபகரித்துக் கொள்வது, அவர்களது உடைமைகளைச் சேதப்படுத்துவது, ஆபாச வார்த்தைகளால் வசைபாடுவது, பெண்களிடமும், குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தல்களைத் தருவது, காரணமில்லாமல் அகதி முகாமுக்குள் அடைத்து சித்திரவதை செய்வது, அவர்களுக்கு அடிப்படை வசதிகள்கூடச் செய்துதராது இழுத்தடிப்பது, பொய்யாக வழக்குகளைப் புனைந்து சிறையிலடைப்பது என அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் சொல்லி மாளாதவையாகும்.”
நான் அறிந்தவரையில் தமிழகத்தில் ஈழ தமிழ் அகதிகள் அனுபவிக்கும் கொடுமையை வேறு எந்த தலைவரும் இத்தனை தெளிவாக வெளிப்படையாக சொல்லியதில்லை.
உண்மையில் இந்த வரிகள் யாவும் ஈழத் தமிழர்களின் தலைவர் என தன்னை அழைத்துக்கொள்ளும் சம்பந்தர் அய்யா கூறவேண்டிய வார்த்தைகள் ஆகும்.
ஆனால் சம்பந்தர் அய்யாவோ கொஞ்சம்கூட கூச்சம் இன்றி பிரதமர் மோடியுடன் விருந்துண்டு மகிழ்கிறார்.
சீமான் விரும்பியிருந்தால் நெடுமாறன் அய்யா போன்று மோடி யாழ்ப்hணம் செல்ல வேண்டும் என்று ஒரு அறிக்கையை விட்டிருக்கலாம். அல்லது மற்ற தலைவர்கள் போல் பேசாமல் மௌனமாகவே இருந்திருக்கலாம்.
ஈழ அகதிகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து ஈழ தமிழ் தலைவர்களே எதுவும் பேசாமல் இருக்கும்போது சீமான் ஈழ அகதிகளுக்காக இவ்வாறு குரல் கொடுத்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியதாகும்.
நமக்காக குரல் கொடுத்த சீமானை பாராட்ட வேண்டிய நம்மவர்கள் சிலர், பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. மாறாக அவர் நெற்றியில் விபூதி அணிந்த படத்தை போட்டு கிண்டல் அடிக்கின்றனர்.
ஒவ்வொரு எழுத்திற்கு பின்னாலும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒழிந்திருக்கிறது என்று தோழர் லெனின் கூறியது உண்மைதான்.

No comments:

Post a Comment