Wednesday, July 11, 2018

தமிழின விடுதலைக்கான பாதை எது?

தமிழின விடுதலைக்கான பாதை எது?

தோழர் தமிழரசன் ஒரு புரட்சியாளர். அவர் மாக்சிச லெனிச மாவோயிசத்தை தத்துவ வழிகாட்டியாக கொண்டிருந்தார். இந்தியாவில் உள்ள தமிழ் மக்களின் விடுதலைக்காக தமிழ்நாடு என்னும் தனிநாட்டு விடுதலையை  முன்வைத்தார். அந்த இலக்கை அடைவதற்காக ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்தார். அதனால் அவரை "பயங்கரவாதி" என்றும் அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தை "பயங்கரவாத போராட்டம்" என்றும் இந்திய மத்திய மாநில அரசுகளும் அதன் காவல் மற்றும் உளவுத்துறைகளும் கூறி வருகின்றன. 

தங்களை தூக்கியெறிய முனைந்த தோழர் தமிழரசனை ஆளும் வர்க்கம் இவ்வாறு கூறியது ஆச்சரியம் இல்லை. ஆனால் தங்களைத் தாங்களே புரட்சியாளர்கள் என்று அழைத்துக்கொள்ளும் சிலரும்,  தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்போம் என்று கூறிவரும் தமிழ்த்தேசியர்கள் சிலரும்கூட தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்றும் அவர் முன்னெடுத்த போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்றும் கூறுவதுதான் ஆச்சரியமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 

தமிழ் இனம் விடுதலை பெறவேண்டும் என்ற இலக்கு வெற்றி பெற வேண்டுமாயின் அதனை அடைவதற்குரிய பாதை எது என்பது குறித்து நாம் தெளிவாக கண்டறிய வேண்டும். எமது பாதை தவறாக இருக்குமாயின் எமது இலக்கை ஒருபோதும் எம்மால் சென்றடைய முடியாது. எனவே  நாம் அடைய வேண்டிய இலக்கு பற்றி தீர்மானிக்கப்பட்டதும் அடுத்த முக்கியமான பணி அந்த இலக்கை அடைவதற்குரிய பாதையை தெரிவு செய்வதாகும். தோழர் மாவோ அவர்கள் ஒருமுறை சுட்டிக்காட்டியதுபோல்  நாம் ஆற்றைக் கடக்க முடிவு செய்தால் அதற்கு ஒரு பாலத்தைக் கட்ட வேண்டும். அல்லது ஒரு வள்ளத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதேபோலவே தோழர் தமிழரசன் அவர்கள் தமிழின விடுதலை என்ற இலக்கை அடைய ஆயுதப் போராட்டப் பாதையை தெரிவு செய்தார்.

ரஸ்சியாவில் தோழர் லெனின் ஆயதப் போராட்டத்தை முன்வைத்திருக்காவிடின் ரஸ்சியப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. அதுபோல் சீனாவில் தோழர் மாஓசேதுங் அவர்கள் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்திருக்காவிடின் சீனப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது. சீனப் புரட்சி வெற்றி பெற்ற பின்பு தோழர் மாசேதுங் அவர்கள் " சீனாவில் ஆயுதப் போராட்டம் இல்லாவிட்டால் பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு அந்தஸ்து கிடையாது. கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஒரு அந்தஸ்து கிடையாது, மக்களுக்கு ஒரு அந்தஸ்து கிடையாது, புரட்சியும் வெற்றிவாகை சூடியிருக்காது. இந்த ரத்தம் சிந்திப் பெற்ற அனுபவத்தை புரட்சி தோழர்கள் ஒருபோதும் மறந்து விடக்கூடாது" என்று கூறிய வரிகளை நினைவில் கொண்ட புரட்சியாளரான தோழர் தமிழரசன், தமிழ் மக்களின் விடுதலைக்கு ஆயுதப் போராட்ட பாதையை தெரிவு செய்து அதனை தனது தலைமையில் முன்னெடுத்தார்.
மாக்சிச லெனினிசிசத்தின் வளர்ச்சிக்கு தோழர் மாவோ அவர்கள் வழங்கிய மிக முக்கியமான சாதனைகளில் ஒன்று என்னவென்றால் மக்கள் யுத்தம் பற்றிய தத்துவத்தை அவர் வகுத்ததும்,  வர்க்க எதிரியை வெற்றி கொள்ள விரும்புபவர்கள் மக்கள்படை ஒன்றைக் கட்டியமைக்கும் அவசியம் பற்றிய அவருடைய போதனையுமாகும்.

மக்கள்யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மாக்சிய லெனிய கட்சியின் தலைமையில், பொதுமக்களை புரட்சிகரமான முறையில் தட்டியெழுப்பவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரத்தை கைப்பற்றுவதை குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத்துவமாகும். இத் தத்துவம்  மக்களை தட்டியெழுப்புவதை விரும்புகிறது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி அணிதிரட்ட உதவுகிறது. ஆரம்பத்தில் வெகு பலம் வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும் , அப் போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்கமாகத் தோற்கடிக்கக்கூடிய பலமேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கிறது.
ஏகாதிபத்தியவாதிகள் , நிலபிரபுக்கள், முதலாளித்துவவாதிகள் ஆகியோரின் அடக்குமுறை அரசுஇயந்திரம் பிரதானமாக அவற்றின் ஆயுதப்படைகள் மேலும் மேலும் ராணுவமயமாக்கப்பட்டு வருகின்றன. இலங்கை மற்றும் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இதனைக் காணலாம். ராணுவத்தினரும் பொலிசாரும் படு மிலேச்சத்தனமாக கொன்று குவிக்கும் கொலைகளிலும் இதனைப் பார்க்கலாம். பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள்  தமது அடக்குமுறை அரச இயந்திரத்தை முன்னெப்போதும் கண்டிராத அசுர வேகத்தில் பலாத்கார மயமாக்கியும் ராணுவ மயமாக்கியும் வருகின்ற இச் சூழ்நிலைகளில் அடக்கியொடுக்கப்பட்ட மக்கள் யாது செய்யப்பட வேண்டும்?

தோழர் மாவோ அவர்கள் இந்த கேள்விக்கு சரியான பதிலை தந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகள் மற்றும்  அவர்களுடைய அடிவருடிகள் அனைவரும் தமது கைகளில் கொடிய வாள்களை ஏந்திய வண்ணம் மக்களைக் கொல்ல நிற்கின்றனர். மக்கள் இதைப் புரிந்துகொண்டு அதேமாதிரிச் செயல்படுகின்றனர் என்று அவர் கூறியுள்ளார். வேறு வார்த்தைகளில் இதனை சொன்னால் ஆயுத எதிர்ப்புரட்சியை ஆயுதப் புரட்சியால்தான் சமாளித்து வெற்றி கொள்ளமுடியும் என்று அவர் போதித்துள்ளார்.
"அடக்கி ஒடுக்கும் வர்க்கம் எப்பொழுதும் ஆயுதபாணியாகவே இருக்கின்றது. பாட்டாளி வர்க்கத்தை ஆயுதபாணியாக்கி முதலாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்குவது என்பதே நமது சுலோகமாகும்" என்ற தோழர் லெனின் அவர்களின் வரிகளை சுட்டிக்காட்டிய தோழர் மாவோ அவர்கள் "மக்கள்படை ஒன்று இல்லாவிட்டால் மக்களுக்கு ஒன்றுமே இல்லை" என்று தெளிவாக கூறியுள்ளார்.

ஆயுத பலாத்காரத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுவது, யுத்தத்தால் பிரச்சனைக்கு தீர்வு காண்பது, புரட்சியின் கேந்திரக் கடமையும் அதன் அதி உயர்ந்த வடிவமும் ஆகும். புரட்சி பற்றிய இந்த மாக்சிய லெனினிய கோட்பாடு சீனாவுக்கு மாத்திரமல்ல  இதர நாடுகளுக்கும் சர்வ வியாபகமாகப் பொருந்திய ஒரு கோட்பாடு என்று தோழர் மாவோ அவர்கள் கூறியுள்ளார். அவர் எமக்கு பின்வருமாறு போதித்துள்ளார். "ஜக்கிய முன்னனி, ஆயுதப் போராட்டம், கட்சி அமைப்பு, இம் மூன்றும்  சீனப் புரட்சியின் எதிரிகளை தோற்கடிப்பதற்குரிய மூன்று பிரதான மந்திராயுதங்கள்"  என்றார். அவரின் விவேகமான இந்த வார்த்தைகளில் எந்நாட்டுப் புரட்சியிலும் வெற்றி பெறுவதற்கான திறவுகோலை நாம் காண முடியும்.

மாவோயிசத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தியவரும், இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் சண்முகதாசன் அவர்கள் " 44 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் பாவிக்கப்பட்டும் ஒருவித பலனையும் தராத பாராளுமன்ற ஜனநாயகப்பாதையை நிராகரிக்க வேண்டும். அதற்கு பதிலாக மாக்சிய லெனிய மாவோயிச சிந்தனை வழிகாட்டலில் ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதன் மூலமாகவே புதிய ஜனநாயகப் புரட்சி இலங்கையில் வெற்றியடையும்" என்றார்.

எனவே தமிழின விடுதலையை இலக்காக கொண்ட தோழர் தமிழரசன் அதனையடைய பாராளுமன்ற பாதையை நிராகரித்து ஆயுதப் போராட்டப் பாதையை முன்னெடுத்தது ஆச்சரியத்திற்குரியது அல்ல. மாறாக மாக்சிய லெனினிய மாவோயிசத்தை பின்பற்றும் அவர் ஆயுதப் போராட்டப்பாதையை தெரிவு செய்திருக்காவிடில் மட்டுமே ஆச்சரியம் அடைந்திருக்க முடியும்.

இன்று இரண்டு பாதைகள் எம்முன் வைக்கப்பட்டிருக்கிறது. ஒன்று மாபெரும் ஆசான் மாசேதுங் முன்வைத்த, தோழர் தமிழரசன் முன்னெடுத்த, ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதை. இன்னொன்று அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையாகும். இதில் எந்தப் பாதையை தெரிவு செய்தால் தமிழ் இனம் விடுதலை பெற முடியும் என்பதே இன்று எம் முன் உள்ள கேள்வியாகும்.

ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை பலாத்கார முறையென்றும் அகிம்சை மற்றும் பாராளுமன்ற பாதையை சாத்வீக பாதையென்றும் இன்னொரு வடிவத்தில் சிலர் வரையறை செய்கிறார்கள். அத்தோடு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்றும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுப்போர் ஆயுதத்தால் அழிக்கப்படுவர் என்றும் அவர்கள் மக்களை எச்சரிக்கின்றார்கள்.

புலிகள் இயக்கம் வெற்றி பெறவில்லை என்பதை வைத்து ஆயுதப் போராட்டம் பயனற்றது என இன்று சிலர் போதிக்க முற்படுகின்றனர். புலிகள் மௌனித்தது தங்களது ஆயுதங்களையே ஒழிய ஆயுதப் போராட்டத்தை அல்ல. மேலும் ஆயுதப் போராட்டம் புலிகளுக்கு முன்னரும் இருந்தது. அது புலிகளுக்கு பின்னரும் இருக்கும். எனவே புலிகள் வெற்றி பெறவில்லை என்பதால் அது ஆயுதப் போராட்டத்தின் தோல்வி என்று பொருள் கொள்ள முடியாது.

புலிகள் பலமாக இருக்கும்வரை எந்த கருத்தையும் தெரிவிக்காத வட மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்கள் இன்று புலிகள் இல்லை என்றவுடன் “ஆயுதப் போராட்டம் பயனற்றது” என்று பகிரங்கமாக கருத்து கூறுகிறார். அவர் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  “மீண்டும் அகிம்சைப் போராட்டம் நடத்தப் போவதாக” அறிக்கை விடுகிறார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரோ இன்னும் ஒருபடி மேலே சென்று ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதம் என்றும் அதை தாம் ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்றும் கூறுகிறார்.
1948ம் ஆண்டு முதல் பாராளுமன்ற பாதை மூலம் எந்த ஒரு தீர்வையும் பெற முடியாத நிலையில் இவர்களது இந்த தமிழரசுக்கட்சியே 1962ம் ஆண்டு சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்தது. இவர்களது இந்த அகிம்சைப் போராட்டத்தை வெகு இலகுவாக பலாத்காரத்தை பாவித்து இலங்கை அரசால் முறியடிக்க முடிந்தது. அகிம்சையை போதித்த தமிழரசுக்கட்சி தலைவர்களால் இலங்கை அரசின் பலாத்காரத்தை எதிர்ப்பதற்கு எதிர்ப்பலாத்காரத்தை பாவிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை முன்வைக்க முடியவில்லை. இருந்தபோதும் இவர்கள் பின்னால் சென்ற தமிழ் இளைஞர்கள் அந்த உண்மையைக் கண்டு கொண்டார்கள். அவர்கள் ஆயுதம் தாங்கி அரச பலாத்காரத்திற்கு தகுந்த பதில் அளித்தார்கள். இதனை மக்களும் ஏற்றுக்கொண்டார்கள். மக்கள் தமது பூரண ஆதரவை இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்திற்கு வழங்கினார்கள். இவ்வாறே  இலங்கை அரசின் பலாத்காரத்திற்கு எதிராக தமிழ் மக்களின் எதிர்ப்பலாத்காரம் உருவாகியது.

இந்தியாவில் தமிழகத்தைப் பொறுத்தவரையில் தி.மு.க வும் அதிமுக வும் மாறி மாறி ஆட்சி புரிந்து வருகின்றன. அவர்கள் ஊழல் புரிந்து தமது சொத்துக்களை பெருக்கிக் கொண்டனரேயொழிய தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. குறிப்பாக ஈழத்தில் முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டபோது அவர்களை காப்பாற்றவில்லை. அதுமட்டுமல்ல இலங்கை அரசுக்கு உதவி புரிந்த இந்திய மத்திய அரசையும்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. அத்துடன் தமிழக மீனவர்களை கொன்று குவித்த இலங்கை கடற்படைக்கு இந்திய மத்திய அரசு வழங்கிய பயிற்சியைக்கூட இன்றுவரை நிறுத்த முடியவில்லை. முத்துக்குமார் உட்பட மொத்தம் 16 பேர் தீ மூட்டி தற்கொலை செய்தபோதும் அவர்களது கோரிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்டு கொள்ளவேயில்லை. தமிழக மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு இவ் அரசுகள் எந்த மதிப்பையும் வழங்கவில்லை.

இந்திய மத்திய அரசு ஆண்டுதோறும் தமிழகத்தில் இருந்து வரியாக 85ஆயிரம் கோடி ரூபா பெற்றுக் கொள்கிறது. கடந்த ஆண்டு சென்னையில் மழையின் காரணமாக பெரு வெள்ளம் ஏற்பட்டு பாரிய அழிவு வந்தபோது தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் நிவாரணமாக மத்திய அரசிடம் 50 ஆயிரம் கோடி ரூபா தரும்படி கேட்டிருந்தார். ஆனால் மத்திய அரசோ வெறும் இரண்டாயிரம் கோடி ரூபாவை மட்டுமே வழங்கியது. அதேவேளை மத்திய அரசானது இலங்கைக்கு 10 ஆயிரம் கோடி ரூபாவை வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல அதே மத்திய அரசு நேபாளத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாவும், பூட்டானுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாவும், மங்கோலியாவுக்கு 6 ஆயிரம் கோடி ருபாவும், ஆப்கானிஸ்தானுக்கு 56 ஆயிரம் கோடி ரூபாவும் வழங்கியுள்ளது. இதில் வேடிக்கை என்னவெனில் தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் வரிப்பணம் மத்திய அரசினால் வழங்கப்படுகிறது. அதைக்கூட தமிழக அரசால் தடுத்த நிறுத்த முடியவில்லை.

இந்த அதிகாரமற்ற தமிழக அரசை ஒரு தமிழன் கைப்பற்றுவதன் மூலம் அதாவது ஒரு தமிழன் தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தமிழக மக்களின் அனைத்து பிரச்சனைகளும் தீரும் என்று சிலர் இப்போது கூறுகிறார்கள். அதுமட்டுமல்ல ஈழத் தமிழர்களுக்கு தமிழீழத்தையும் பெற்றுக் கொடுக்க முடியும் என்கிறார்கள். இலங்கைக்கு வழங்கப்பட்ட கட்சதீவையும் ஒரே நாளில் மீட்டுக்கொள்ள முடியும் என்கிறார்கள். ஒரு தமிழன் முதலமைச்சாரானால் எப்படி அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என்று கேட்டால் அதற்கு உரிய பதில் தர அவர்கள் மறுக்கிறார்கள். அவர்களுடைய நோக்கம் பதவியை பெறுவதும் மக்களை தேர்தல் பாதையில் நம்பிக்கை கொள்ள வைப்பதுமாகவே இருக்கிறது. இவர்களுடைய இச் செயலானது உணர்ச்சி மிக்க தமிழ் இளைஞர்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து இந்திய அரசின் நோக்கங்களுக்கு உதவி புரிவதாகவே இருக்கிறது.

மக்களை ஏமாற்றவும் புரட்சியின் கவனத்தில் இருந்து மக்களை திசைதிருப்பவுமே முதலாளித்துவ நாடுகளில் பாராளுமன்ற ஜனநாயகத்தை பேணுகின்றனர். இதன்மூலம் இந் நாடுகளில் உண்மையான அதிகாரம் ஆயுதம் தாங்கிய படைகளின் கையில்தான் இருக்கின்றது என்ற உண்மை மூடி மறைக்கப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் உழைக்கும் மக்களின் வர்க்க உணர்வையும் போராட்ட மனப்பான்மையையும் மழுங்கச் செய்யப்படுகிறது. பாராளுமன்ற வழி மூலம் பேச்சுவாhத்தைகளினால் தீர்வு பெறும்படி கூறுவதன் மூலம் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகின்றனர்.  இலங்கையில் பலமாக இருந்த புலிகள் இயக்கத்தை பேச்சுவாhத்தைக்கு அழைத்து பலவீனமாக்கியதை நாம் கண்முன் கண்டோம். அதேபோல் இந்தியாவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி இந்திய அரசு அழைப்பதும் அவர்களது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதற்காகவே.

எல்லா நாடுகளிலும் ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கத்தை அடக்கி வைத்திருப்பது பலாத்காரத்தின் மூலமே. ஆயுதம் தாங்கிய படைகள் உள்ளடங்கிய ஒரு அரசு இயந்திரத்தை இதற்காக உருவாக்கி வைத்திருக்கின்றனர். ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தை அடக்கி ஆள்வதற்கு உருவாக்கப்பட்ட இயந்திரமே அரசு எனப்படும். ஆளும் வர்க்கத்தின் காவல் நாய்களான ஆயுதப் படைகளின் கைகளில் இருக்கும் துப்பாக்கி இல்லாமல் ஒரு நிமிடமேனும் ஆளும் வர்க்கத்தால் ஆட்சி நடத்த முடியாது. அதனால்தான் “அரசியல் அதிகாரம் துப்பாக்கி குழாயில் இருந்து பிறக்கின்றது” என்று தோழர் மாசேதுங் கூறினார்.

இதன் அடிப்படையில்தான் ஆளும் வர்க்கத்தின் பலாத்காரத்திற்கு எதிராக ஆளப்படும் வர்க்கம் எதிர்ப் பலாத்காரத்தை பாவிக்காமல் ஒருபோதும் வெற்றியடைய முடியாது என்று புரட்சியாளர்கள் கூறி வருகிறார்கள். அதாவது இன்றைக்கு தமிழ் மக்களை அடக்கி வரும் முதலாளித்துவ அரசு இயந்திரத்தை பலாத்காரத்தினால் தவிடு பொடியாக்காமல் அதற்கு பதிலாக தமிழ் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயந்திரமாகிய பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உருவாக்காமலும்  தொழிலாளி வர்க்கத்திற்கும் அதனுடைய நேச சக்திகளுக்கும் விமோசனம் கிட்டாது. இந்த உண்மையை நாங்கள் நன்றாக கிரகித்துக் கொள்ள வேண்டும்.

போராளிகள் வன்முறை மீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்லர். இரத்தம் சிந்த வேண்டும் என்பதை இலட்சிமாக கொண்டு அலைபவர்களும் அல்லர். வன்முறை இன்றியும் இரத்தம் சிந்தாமலும் எந்த இழப்பும் இன்றி விடுதலை கிடைக்குமாயின் அதையிட்டு  மகிழ்சி கொள்பவர்கள் போராளிகளைவிட யார் இருக்க முடியும்? ஆனால் அது வெறும் கனவு. அந்தப் பொய்யை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அவர்கள் தயாராக இல்லை.
இயற்கையின் விதிகளை கவனித்து பார்ப்போமானால் அதிலிருந்தும் பலாத்காரத்தை தவிர்க்கமுடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். உதாரணமாக ஒரு கோழிக் குஞ்சை எடுத்துக் கொள்வோம். கோழி முட்டையை அடை காப்பதன் மூலம் குஞ்சு உருவாகிறது. அது பருவமடைந்தபின் குறிப்பிட்ட நாளில் முட்டைக்கோதை கொத்தி உடைத்து வெளிவர வேண்டும். ஆனால் அக் குஞ்சானது தான் காந்தியின் சீடன் என்றும் அகிம்சையைக் கடைப்பிடிப்பவன் என்றும் முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து கொத்தாவிடில் அதற்கு என்ன ஆகும்? அது உள்ளேயே அவிந்து அழிந்து போகும். அதற்கு பதிலாக இயற்கை விதியின்படி அக் குஞ்சு முட்டைக் கோதிற்கு எதிராக பலாத்காரம் பாவித்து அதைக் கொத்தி உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. முட்டைக் கோதிற்கு  எதிராக பலாத்காரம் பாவிக்க வேண்டும் என்ற விதியை அக் கோழிக் குஞ்சுக்கு சொல்லிக் கொடுத்தவர் யார்? தலைவர் மாசேதுங்கா? அல்லது காரல்மாக்ஸா? இல்லை. இவர்கள் இருவருக்கும் முன்பாகவே அதாவது இயற்கையாகவே கோழிக்குஞ்சு கோதைக் கொத்திக்கொண்டு வெளியே வந்திருக்கிறது.  இது ஒரு இயற்கை விதி. இதைப் போல வேறு பல உதாரணங்களையும் எடுத்துக் கூற முடியும். இதற்காகத்தான் “பழைய சமுதாயம் என்னும் கர்ப்பப் பைக்குள் உருவாகியிருக்கும் ஒவ்வொரு புதிய சமுதாயத்திற்கும்  மருத்துவச்சி பலாத்காரம்” என்று காரல்மாக்ஸ் கூறினார்.
கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான். ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிவான். இது கடவுள் செயல் என்று சாத்வீக வாதிகள் போதிக்கின்றனர். ஆனால் அவர்களின் கடவுள்கள்கூட ஆயுதத்தைப் பாவித்தே அதர்மத்தை ஒழித்ததாக உள்ள கதைகளை இவர்கள் மறந்துவிடுகின்றனர். இந்துசமயப் புராணக் கதைகளை எடுத்துப் பார்த்தாலும் அதர்மத்தை அழித்து தர்மம் வெல்வதற்கு பலாத்காரமே காரணமாய் இருப்பதைக் காணலாம். அநேகமாக இந்துமத பக்தர்கள் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளாத விடயம் ஒன்றிருக்கிறது. அது என்னவெனில் அவர்கள் வழிபடும் பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் பலாத்காரத்திற்கு பாவிக்கப்படும் ஆயுதங்கள் இருப்பதை அவதானிக்க முடியும். சிவன் கையில் சூலாயுதம் இருக்கிறது. கிருஸ்ணன் கையில் சக்கராயுதம் இருக்கிறது. முருகன் கையில் வேலாயுதம் இருக்கிறது. காளி கையில் கத்தி இருக்கிறது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆயுதம் வைத்திருக்காத இந்து மதக் கடவுள் யாரேனும் இருக்கிறாரா என்றுகூட கேட்கலாம்.

இந்துமத புராணக் கதைகளை எடுத்துப் பாருங்கள். கந்தபுராணக் கதையின் படி முருகன் சூரனை வென்றது சத்தியாக்கிரக போராட்டத்தின் மூலமல்ல. மாறாக வேல் ஆயுதத்தின் மூலமாகவே. அவர் சூர சங்காரம் செய்தார். இராமாயணத்தில் இராவணைக் கொன்றது இராம பாணம். மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்களுக்கு வெற்றி கொடுத்தது அர்ச்சனுக்கு சிவபெருமானால் வழங்கப்பட்ட பாஸ்பதாஸ்திரம். மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன்னர் பகவத் கீதையின் மூலமாக அர்ச்சுனனுக்கு கிருஸ்ணன் போதிப்பதும் அதர்மத்திற்கு எதிராக தர்மத்திற்காக போராட வேண்டிய கடமையையே.

மகாகவி பாரதியார் பாடினார் “ தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை என்றால் ஜகத்தினை அழித்திடுவோம்” என்று. இதைத்தான் நாங்கள் புரட்சி என்று கூறுகிறோம்.

இன்று கம்யுனிஸ்டுகள் ஆயுதம் தாங்கி புரட்சி செய்ய தேவையில்லை. பாராளுமன்றம் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என சில திரிபுவாதிகள் கூறிவருகின்றனர். ஆனால் அவர்கள் சிலியில் என்ன நடந்தது என்பதை கவனத்தில் கொள்ள மறுக்கின்றனர். சிலி நாட்டில் கம்யுனிஸ்டுகள் தேர்தலில் வென்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் உடனே சிலி நாட்டு ராணுவத்தின் துணையுடன் சதி மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்தது. இது பாட்டாளி வர்க்கத்திற்கு ஒரு படை இல்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியாது என்பதை நிரூபித்தது. அதேபோல் வியட்நாமில் கம்யுனிஸ்டுகள் 26 வருடங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தை தோற்கடித்தார்கள்.
சிலி நாட்டில் நடந்த எதிர்ப் புரட்சியின் வெற்றியில் இருந்தும் இந்தோ சீனாவில் அதன் மக்கள் உலகிலேயே மிகப் பெரிய ஏகாதிபத்திய வல்லரசாகிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை போரில் தோற்கடித்தலில் இருந்தும் சோசலிசத்திற்கு சமாதானப் பாதையென்று ஒன்று இல்லை என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ருஸ்சிய அக்டோபர் புரட்சியும் சீனப் புரட்சியும் இதே பாடத்தைதான் உலகிற்கு வலியுறுத்துகின்றன.

இந்தியாவில் தேர்தல் மூலம் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது. இலங்கையில் மைத்திரி சிறிசேனா ஜனாதிபதியாகியுள்ளார். இது தேர்தல் மூலம் காங்கிரஸ் கட்சியும் மகிந்த ராஜபக்சவும் தோற்கடிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. இதன் அர்த்தம் என்னவெனில் தேர்தல் மூலம் ஆளும் வர்க்கத்தில் ஆட்களை மாற்ற முடியுமேயொழிய ஆளும் வர்க்கத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என்பதே.

எம்மை அடக்கும் பிற்போக்கு சக்திகளை தேர்தல் மூலம் தூக்கியெறிய முடியாது என்பதையே கடந்த தேர்தல்கள் எமக்கு உணர்த்துகின்றன. லெனின் ஒரு தடவை கூறியது “பூர்சுவா வர்க்க நுகத்தடிகளின் கீழ் நடைபெறும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையை பெற வேண்டும், அதற்கு பிறகுதான் அதிகாரத்தைப் பெற வேண்டும் என்று கயவர்கள் அல்லது முட்டாள்கள்தான் சிந்திப்பார்கள். வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்கத்தின் தலைமை ஆகியவற்றின் இடத்தில் பழைய முறையிலான பழைய அதிகாரமுடைய வாக்களிப்பை வைப்பது முட்டாள்தனத்தின் சிகரமாகும். மாறாக பாட்டாளி வர்க்கம் அதன் பக்கத்திற்கு மக்களை வென்றெடுக்க பூர்சுவா வர்க்கத்தை முதலில் தூக்கியெறிந்துவிட்டு அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்” என்று கூறினார்.

பாராளுமன்ற தேர்ல்களை பகிஸ்கரிகும்படி கோரிய இலங்கை கம்யுனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர் சண்முகதாசன் தமது அனுபவங்களில் இருந்து கூறியது “ இன்றுள்ள நவகாலனிச பொருளாதார கட்டுக்கோப்புக்குள் எந்தக் கட்சியும் அல்லது கட்சிகளின் கூட்டணியும் அதிகாரத்திற்கு வந்தாலும் முதலாளித்துவத்தினதும் ஏகாதிபத்தியத்தினதும் காவல் நாயாகவே அவை செயற்படும். எனவே அடக்கு முறையான பூர்சுவாவர்க்க அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது” என்றார்.

"வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை" என்று மாபெரும் ஆசான் தோழர் லெனின் கூறியுள்ளார். "ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை முன்வைத்திருக்காவிடின் சீனப்புரட்சி வெற்றிவாகை சூடியிருக்கமுடியாது" என்று தோழர் மாவோ கூறியிருக்கிறார். "44 வருட பாராளுமன்ற ஜனநாயகப் பாதையால் எந்த பயனும் இல்லை. அதனை நிராகரித்து ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தபாதையை முன்னெடுப்பதன் மூலமே இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சி வெற்றி பெற முடியும்" என்று தோழர் சண்முகதாசன் கூறுகிறார். இவர்களை யாரும் பயங்கரவாதி என்று கூறியதில்லை. இவர்கள் முன்வைத்த ஆயுதப் போராட்ட பாதையை யாரும் பயங்கரவாதப் போராட்டம் என்றும் கூறுவதில்லை. ஆனால் இவர்களின் வழிகாட்டலில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் தமிழரசனை மட்டும் பயங்கரவாதி என்றும் அவர் முன்னெடுத்த போராட்டத்தை பயங்கரவாத போராட்டம் என்றும் குறை கூறிவருகின்றனர்.

மக்கள் யுத்தத்தின் யுத்த தந்திர, தந்திரோபாயங்கள் பற்றிய தோழர் மாவோ அவர்களின் தத்துவத்தில் நீண்டகால கொரில்லா யுத்தம் பற்றிய தத்துவம் பிரிக்கமுடியாத ஒரு பகுதியாகும். தோழர் மாவோ அவர்கள் கொரில்லா யுத்தத்தை யுத்ததந்திர மட்டத்திற்கு உயர்த்தினார். ஏன் என்றால் புரட்சிகர ஆயுதப்படைகள் பலமான எதிரியை தோற்கடிக்க வேண்டுமானால் தமது சக்திக்கும் எதிரியின் சக்திக்கும் இடையில் பெரும் அசமத்துவம் நிலவும்போது விளைவுகளைப் பொருட்படுத்தாமல் மூர்க்கத்தனமாய் போரிடக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் பாரதூரமான நஸ்டங்களால் பாதிக்கப்பட்டு புரட்சிக்கும் பெரும் பின்னடைவுகளைக் கொண்டுவருவர். கொரில்லா யுத்தம் என்பது எதிரிக்கு எதிராக மக்களின் எல்லா சக்திகளையும் அணிதிரட்டி பிரயோகிக்கக்கூடிய ஒரே ஒரு வழி. யுத்தத்தின் போக்கில் எமது சக்திகளைப் பெருக்கி எதிரியை தேய்த்து பலவீனப்படுத்தி, எதிரிக்கும் எமக்கும் இடையில் உள்ள நிலைமையை படிப்படியாக மாற்றி கொரில்லா யுத்தத்தை நடமாடும் யுத்தமாக உயர்த்தி இறுதியில் எதிரியை தோற்கடிக்கும் ஒரே வழியாகும்.

தோழர் மாவோ அவர்கள் கொரில்லா யுத்தத்தின் அடிப்படை தந்திரோபாயங்களை பின்வருமாறு வகுத்தார். "எதிரி முன்னேறும்போது நாம் பின்வாங்குவோம். எதிரி முகாமிடும்போது நாம் தொந்தரவு கொடுப்போம். எதிரி களைத்திருக்கும்போது நாம் தாக்குவோம். எதிரி பின்வாங்கும்போது நாம் துரத்துவோம்".

தோழர் தமிழரசன் "தமிழ்நாடு விடுதலைப்படை" என்னும் மக்கள் படையைக் கட்டினார். தமிழ்நாடு விடுதலைப் படையானது தோழர் தமிழரசன் காலத்திலும் அதன் பின்னரும் தோழர் மாவோ அவர்கள் சுட்டிக்காட்டிய கொரில்லா தாக்குதல்களை மேற்கொண்டது. ஒரு கொரில்லா தாக்குதல் ஆயிரம் பொதுக் கூட்டங்களுக்கு சமமானது என்ற தோழர் மாவோவின் கூற்று உண்மை என்பதை தனது அனுபவத்தின் மூலம் தோழர் தமிழரசன் கண்டு கொண்டார். அவர் மேற்கொண்ட  ராஜீவ்காந்தியின் வருகைக்கு எதிரான குடமுருட்டி வெடிகுண்டு தாக்குதல் அவரை தமிழ்நாட்டில்; அறிமுகம் செய்தது. அதையடுத்து அவர் மேற்கொண்ட அரியலூர் மருதையாற்று பாலத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதல் அவரையும் அவரது கோரிக்கையையும் முழு இந்தியாவிற்கும் அறியவைத்தது.

இந்திய மத்தியஅரசு பாலஸ்தீன விடுதலையை அங்கீகரித்திருந்தது. ஆனால் தமிழீழ விடுதலையை அங்கீகரிக்கவில்லை. இந்தியஅரசு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளிக்காமல் இலங்கையில் ஆக்கிரமிப்பதற்காக தமிழர் பிரச்சனையைக் கையாள்வதை தோழர் தமிழரசன் உணர்ந்துகொண்டார். எனவேதான் இந்தியமத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் மத்திய அரசுக்கு சொந்தமான ரயில் பாலத்தில் குண்டு வைத்தார். தமிழீழ விடுதலையை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அதில் வைத்தார்.

தோழர் தமிழரசன் பாலத்திற்குதான் குண்டு வைத்தார். அவர் ரயிலுக்கு குண்டு வைக்கவில்லை. ரயிலைக் கவிழ்ப்பதோ அல்லது மக்களைக் கொல்வதோ அவரது நோக்கமாக இருக்கவில்லை. எனவேதான் குண்டு வைத்துவிட்டு உடனே அதனை அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கும் தெரிவித்திருந்தார். அவரது நோக்கமெல்லாம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமது தமிழ்நாடு விடுதலைப்படையின் குரலை மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தெரிவிப்பதே.

ஆனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்றன. அவரது போராட்ட பாதையை பயங்கரவாதப் போராட்டம் என்று முத்திரை குத்தின. அதன்மூலம் அவர் முன்வைத்த ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கோரிக்கையை மறுத்தன. இங்கு ஆச்சரியம் என்னவெனில் வெள்ளைக்கார அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசிய தோழர் பகத்சிங் அவர்களை தியாகி என்று அழைப்பவர்கள் கொள்ளைக்கார இந்திய அரசுக்கு எதிராக ரயில் பாலத்தில் வெடிகுண்டு வைத்த தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்று அழைப்பதுதான்.

23.04.1994 யன்று தியாகி பகத்சிங் நினைவு தினத்தன்று அப்போதைய குடியரசுத் தலைவர் சர்மா அவர்கள் "தியாகியும் அவரது நண்பர்களும் குண்டு வீசியது கொல்ல வேண்டும் என்ற எண்ணத்திலான பயங்கரவாத நடவடிக்கை அல்ல. ஆனால் சுதந்திர வேட்கையின் குரல் மக்களின் காதுகளில் ஒலிக்க வேண்டும் என்பதற்கான நடவடிக்கை ஆகும்" என்று கூறினார். "பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தங்கள் உயிரைக் கொடுத்ததால்தான்  நாம் சுதந்திரமடைந்தோம். அவர்களது நினைவு தினத்தன்றாவது அவர்கள்  நாட்டுக்காக ஆற்றிய தியாக உணர்வு கொண்ட பெரும்பணியை  நாம் நினைவு கூர்ந்தாக வேண்டும்" என்று  குடியரசுத்தலைவர் சர்மா அவர்கள் மேலும் குறிப்பிட்டார் (ஆதாரம்- 24.03.94 தினமணி)  

அன்று வெள்ளைக்கார அரசு வெடிகுண்டு வீசிய தோழர் பகத்சிங்கை பயங்கரவாதி என்றது. அவரை தூக்கில் இட்டுக்கொன்றது. ஆனால் மக்கள் அவரை தியாகி என்று போற்றி புகழ்ந்தார்கள். அதனால்தான் அவரைக் காட்டிக்கொடுத்த காங்கிரஸ்கட்சி இன்று தவிர்க்கமுடியாமல் அவரது நினைவு தினத்தை கொண்டாடுகிறது. அதேபோல் இன்றைய கொள்ளைக்கார இந்திய அரசு தோழர் தமிழரசனைப் பயங்கரவாதி என்று முத்திரை குத்திக் கொன்றுள்ளது. ஆனால் எதிர்கால  வரலாறு தோழர் தமிழரசனை தமிழின விடுதலையை முன்னெடுத்த ஒரு தியாகியாகவே காட்டும் என்பது உறுதி.

ஒரு கால கட்டத்தில் ரஸ்சியாவில் போல்சிவிக் கட்சி உருவாவதற்கு முன்னர் ஜார் மன்னனை கொல்வதற்கு  சிலர் சதி செய்தனர். அவர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். ஆம், அவர்கள் ஜார் மன்னனை கொன்றனர். ஆனால் அவர்களால் ஜார் எதேச்சதிகாரத்தை தோற்கடிக்க முடியவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவ்விதமான ஒரு சதியில் ஈடுபட்டதற்கான மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் லெனின் சகோதரர் இலியானோவும் ஒருவர். இச்சம்பவம் லெனின் மேல் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அவர் சகோதரரை மிகவும் நேசித்தார். அப்படியிருந்தும் அவர் திடமாக கூறினார் “ இந்த வழி எமக்கு உகந்தது அல்ல. வேறு வழிகளில் நாம் வெற்றியை தேட வேண்டும்” என்று. இதனடிப்படையில்தான் போல்சிவிக் கட்சியை கட்டியெழுப்பி அதன் மூலமாக லட்சக் கணக்கான  ரஸ்சிய மக்களை அணிதிரட்டி  பலாத்காரப் புரட்சியின் மூலமாக ஜார் எதேச்சிகாரத்தை லெனின் தோற்கடித்தார். இதுதான் பலாத்காரத்தைப்பற்றிய புரட்சியாளர்களின் கண்ணோட்டமாகும். புரட்சியாளரான தோழர் தமிழரசனின் கண்ணோட்டமும் இதுவேயாகும்.
புரட்சியாளரான தோழர் தமிழரசன் அவர்கள் ஆரம்பத்தில் வர்க்க எதிரிகளான தனி நபர்களை அழித்தொழிப்பதில் பங்குபற்றியிருந்தாலும் நாளடைவில் அதன் தவறுகளை இனம் கண்டு கொண்டார்.  தனி மனிதனை அழிப்பதன் மூலம் சமுதாயத்தை மாற்றிவிட முடியாது என்பதை அவர் நன்கு புரிந்துகொண்டார். எனவேதான் அவர் தமிழ்நாடு விடுதலைப்படையின் பாதையாக மக்கள் யுத்தப்பாதையை முன்வைத்தார்.

மாபெரும் ஆசான் மாவோ குறிப்பிட்டது போல் தோழர் தமிழரசன் “மக்கள் சக்தியே மகத்தான சக்தி” என்பதை புரிந்து ஏற்றுக்கொண்டவர். அதுமட்டுமல்ல தோழர் மாசேதுங் கூறியதுபோல் தோழர் தமிழரசன்  மக்களுடன் சேர்ந்து உணவு உண்டார். மக்களுடன் சேர்ந்து உறங்கினார். மக்களுடன் சேர்ந்து உழைத்தார். அதனால்தான் மக்கள் அவரை மிகவும் நேசித்தார்கள். மக்கள் அவரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கவில்லை. மக்களின் பெரு ஆதரவின் மூலமே எதிரியின் கையில் பிடிபடாமல் அவர் வாழ்ந்து வந்தார். இறுதியில் உளவுப்படை சதி செய்தே தோழர் தமிழரசனைக் கொல்ல முடிந்தது.

தோழர் தமிழரசனைக் கொன்றதன் மூலம் அவரது கொள்கைகளைக் கொன்றுவிட்டதாக தமிழக காவல்துறை கனவு கண்டது. ஆனால் அவரது கொள்கை இன்று மிக வேகமாக வளர்ந்து வருகின்றது. அதனால்தான் அவரது கொள்கைகளை முன்னெடுப்பவர்களை நசுக்குவதற்காக மத்திய மாநில அரசுகள் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளன. இல்லாத புலிகளுக்கு தடைவிதித்தது மட்டுமல்ல வழக்கத்திற்கு மாறாக இரண்டு வருடத்திற்கு பதிலாக ஒரேயடியாக ஜந்து வருடம் தடை நீடிக்கப்பட்டுள்ளது. அவ் தடை நீடிப்புக்கு காரணமாக மதுரையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தோழர் தமிழரசன் பாதையை முன்னெடுக்கும் போராளிகள் மீதான பைப் வெடிகுண்டு வழக்குகளை தமிழக அரசு காட்டியுள்ளது. இதிலிருந்தே தமிழக அரசு புலிகள் மீதான தடையை நீடித்திருப்பது தோழர் தமிழரசனின் ஆயுதப் போராட்ட பாதையை முன்னெடுக்கும் தமிழ் இன உணர்வாளர்களை நசுக்குவதற்கே என்பது நன்கு புலனாகிறது.

தோழர் மாவோ அவர்கள் "எல்லா பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகள். தோற்றத்தளவில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தத்தில் அவ்வளவு பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கில் இருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் மக்களேயாவர்" என்று தமது பிரசித்தி பெற்ற தத்துவத்தை எமக்கு தந்துள்ளார். ஏகாதிபத்தியவாதிகள் இத் தத்துவத்திற்கு அஞ்சி நடுங்கும் அதேவேளையில் நவீன திரிபுவாதிகள் இத் தத்துவம் எதிரியை குறைத்து மதிப்பீடு செய்வதாக கூறி அதனை தூற்றுகின்றனர். கடதாசிப் புலிக்கு அணு ஆயுதப் பற்கள் உண்டு என்று சொல்லி இத் தத்துவத்தை எள்ளி நகையாடுவதோடு மக்களையும் அஞ்சவைக்க முயலுகின்றனர்.

ஆனால் தோழர் மாவோ அவர்களின் "ஏகாதிபத்தியவாதிகளும் சகல பிற்போக்குவாதிகளும் கடதாசிப் புலிகளே" என்ற தத்துவம்  அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் கொடுப்பதில் சிறப்பாக இறுதி வெற்றியில் உறுதியான நம்பிக்கை ஊட்டுவதில் மகோன்னத முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது. இதனை தோழர் தமிழரசன் நன்கு உணர்ந்திருந்தார். அவர் இதனை இலங்கை இந்திய அரசுகளுடன் ஒப்பிட்டு கூறியதை நானே பலமுறை என் காதால் கேட்டிருக்கிறேன். ஒரு லட்சத்து இருபதாயிரம் ராணுவ வீரர்களுடன் இலங்கை வந்த இந்திய படையானது 3500 போராளிகளை கொண்டிருந்த புலிகள் இயக்கத்தை போரில் வெல்ல முடியாது திரும்பிச் சென்றதை நான் கண்டபோது தோழர் தமிழரசன் "பிற்போக்கு இந்திய அரசு ஒரு கடதாசிப் புலி" என்று கூறியது உண்மைதான் என்று உணர்ந்து கொண்டேன்.
இறுதியாக, உறுதியாக நான் இங்கு கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தோழர் தமிழரசன் பயங்கரவாதி அல்ல. அவர் ஒரு மகத்தான புரட்சியாளர். அவர் முன்னெடுத்த ஆயுதப் போராட்டப்பாதை பயங்கரவாதம் இல்லை. மாறாக அது மக்கள் யுத்தப் பாதையாகும்.

No comments:

Post a Comment