Sunday, July 29, 2018

என் கண்களை ஒரு தமிழ் சிறுமிக்கு பொருத்துங்கள். அதன்மூலம் மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்- குட்டிமணி

என் கண்களை ஒரு தமிழ் சிறுமிக்கு பொருத்துங்கள். அதன்மூலம் மலரப் போகும் தமிழீழத்தை நான் பார்ப்பேன்- குட்டிமணி
நீதிமன்றத்தில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டபோது குட்டி மணி கூறிய வார்த்தைகளே இவை.
அதனால்தான் வெலிக்கடை சிறையில் குட்டிமணியைக் கொன்ற சிங்கள காடையர்கள் அவர் கண்ணை தோண்டி எடுத்து புத்தரின் காலடியில் வீசினார்கள்.
அதையறிந்ததும் குட்டிமணியின் இறுதி ஆசையைக்கூட நிறைவேறாமல் செய்து விட்டார்களே என்ற வேதனை பிறந்தது.
ஆனால் இன்று சிங்கள காடையர்கள் செய்த கொடுமை குறித்து சிறிது ஆறுதலாக இருக்கிறது.
ஏனெனில் அவர் விரும்பியபடி அவர் கண்கள் ஒரு தமிழ் சிறுமிக்கு பொருத்தியிருந்தால் அக் கண்கள்,
எந்த இலங்கை அரசுக்கு எதிராக அவர் போராடினாரோ இன்று அந்த அரசின் பாராளுமன்ற பிரதி குழுத் தலைவராக அவர் இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இருப்பதை காண நேரிடும்.
எந்த பொலிஸ் அவரை பிடித்து அடைத்துவைத்து சித்திரவதை செய்ததோ அதே சிங்கள பொலிஸ் பாதுகாப்பில் அவர் இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை காண நேரிடும்.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எந்த ஜீப்பை அவர் எரித்தாரோ அதைவிட சொகுசு ஜீப் வாகனத்தில் தன் இயக்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வதை அவர் காண நேரிடும்.
அன்று தமிழர் தலைவர்கள் இவர்களை போராளிகள் என்று இவர்களுக்காக வழக்கு பேசினார்கள். ஆனால் இன்று தமிழர் தலைவர் சம்பந்தர் அய்யா போராளிகளை பயங்கரவாதிகள் என்று கூறுவதை காண நேரிடும்.
நல்லவேளை. இந்த கொடுமைகளை எல்லாம் குட்டிமணியின் கண்கள் காண நேரிடாமல் சிங்கள காடையர்களின் செயல் அமைந்துவிட்டது.

No comments:

Post a Comment