Sunday, July 29, 2018

அகதி மாணவி மருத்துவம் படிக்க பிரான்ஸ் அனுமதிக்கிறது- ஆனால் இந்தியா மறுக்கிறது ஏன்?

•அகதி மாணவி மருத்துவம் படிக்க
பிரான்ஸ் அனுமதிக்கிறது- ஆனால்
இந்தியா மறுக்கிறது ஏன்?
பிரான்ஸ் LORRAINE மாகாணத்தில் முதல் தடவையாக ஈழ தமிழ் அகதி மாணவி ஒருவர் டாக்டராக தெரிவாகியுள்ளார்.
பிரான்ஸ் நாடு தமிழர்களின் தொப்புள்கொடி நாடு இல்லை. பிரான்சில் ஏழரைக்கோடி தொப்புள்கொடி உறவுகளான தமிழரும் இல்லை.
எல்லாவற்றுக்கும்மேலாக பிரான்ஸ் தன்னைத்தானே “வந்தாரை வாழவைக்கும் நாடு” என்று பெருமை பேசியதும் இல்லை.
இருந்தும் அகதியாக வந்த ஈழத் தமிழ் மாணவி மருத்துவம் படித்து டாக்டராக வருவதற்கு அனுமதித்துள்ளது.
ஆனால் எமது தொப்புள்கொடி உறவு நாடு என சொல்லிக்கொள்ளும் இந்தியா அகதி மாணவர்கள் உயர் கல்வி பெறுவதை மறுக்கிறது.
அகதிமுகாமில் இருந்த மாணவியான நந்தினி என்பவர் மருத்துவம் படிப்பதற்கான புள்ளிகளைப் பெற்றிருந்தும் அகதி என்பதால் மருத்துவ கல்வி மறுக்கப்பட்டது.
ஈழத் தாய் என்று அழைக்கப்பட்ட ஜெயா அம்மையாரே அகதி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பை தடை செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றம்கூட இந்த அகதி மாணவிக்கு நியாயம் கிடைக்க வழி செய்யவில்லை.
பாகிஸ்தானில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் மோடி அரசு இந்து அகதிகளான ஈழ தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கவில்லை.
குடியுரிமை வழங்கவில்லை என்றாலும்கூட பரவாயில்லை. இந்த அகதிகளுக்கு உயர் கல்வி வாய்ப்பையாவது வழங்கியிருக்கலாமே?
ஈழத் தமிழ் தலைவர்களும் தமிழ்நாட்டில் இருக்கும் அகதிகள் பற்றி அக்கறை கொள்வதில்லை.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழக தலைவர்களும் தங்கள் மண்ணில் இருக்கும் இந்த அகதிகள் குறித்து கவலைப்படுவதில்லை.
இந்த அகதிகள் தமிழ்நாட்டிற்கு செல்லாமல் வேறு ஏதாவது ஒரு நாட்டிற்கு அகதியாக சென்றிருந்தால் இந்நேரம் குடியுரிமையும் கிடைத்திருக்கும். பிள்ளைகளும் நல்ல கல்வியும் பெற்றிருப்பார்கள்.
குறிப்பு- மூன்று கேள்விகள்
(1) தம் மண்ணில் இருக்கும் அகதிகளுக்கு உயர்கல்வி வாய்ப்பை பெற்றுக்கொடுக்காத தமிழக தலைவர்கள் ஈழத் தமிழருக்கு தமிழீழத்தை பெற்றுக்கொடுப்பார்கள் என்று எப்படி நம்புவது?
(2) தமிழ்நாட்டில் அகதியாக இருக்கும் காசி ஆனந்தன் அய்யாவின் இரண்டு மகள்களுக்கும் மருத்துவ கல்வி வாய்ப்பை பெற்றுக்கொடுத்த வைகோ ஏன் மற்ற அகதி மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு பெற்றுக் கொடுக்கவில்லை?
(3) இந்து தமிழீழம் கேட்டால் மோடி உதவுவார் என்று கூறும் காசிஆனந்தன் அய்யா ஏன் இந்து அகதி மாணவர்களின் கல்வி வாய்ப்புக்கு மோடி உதவில்லை என்று கூறுவாரா?

No comments:

Post a Comment