Sunday, July 29, 2018

தமக்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்ற தலைவர்கள் தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை!

•தமக்கு பொலிஸ் பாதுகாப்பு பெற்ற தலைவர்கள்
தமிழ் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை இல்லை!
9வயது சிறுமி கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.
அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. 59 வயது பெண் அதுவும் கணவன் முன்னிலையில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.
கணவனுடன் இருந்த 59 வயது பெண்ணிற்கே இந்த நிலை என்றால் கணவன் இல்லாத விதவைப் பெண்கள் நிலையை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருந்த யுத்த காலத்தில்கூட இப்படி நடக்கவில்லையே.
இப்போது ஏன் இப்படி நடக்கிறது? இதற்கு முடிவேயில்லையா? இனி இது தொடர்கதையாக நடக்கப்போகிறதா?
யாராவது ஒரு தலைவரின் வீட்டில் இப்படி நடந்தபின்தான் இதற்கு முடிவு கட்டுவார்களா?
தாதாக்கள் நிரம்பிய கொழும்பு நகரில்கூட இந்தளவு மோசமான நிலை இல்லையே?
அமைதிக்கு பெயர் போன யாழ் நகரில் ஏன் இப்படி நடக்கிறது?
போதைப் பொருட்களும் சினிமாவும் கலாச்சார சீரழிவிற்கு காரணமாக இருக்கின்றன என கூறிவிட்டு அமைதியாக இருக்கப் போகிறோமா?
அல்லது, இப்படி செய்பவர்களை பிடித்து அவர்களின் ஆண் உறுப்பை வெட்ட வேண்டும் என்று கோபமாக பதிவு எழுதிவிட்டு அடங்கப் போகிறோமா?
முடியாது. எமது ஒவ்வொருவரின் வீட்டிலும் இப்படி நடக்கும்வரை பொறுமையாக இருந்துவிட முடியாது.
இனி இது நடக்கா வண்ணம் உறுதியான நடவடிக்கை எடுக்க நாம் வற்புறுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு சீர்குலையா வண்ணம் பேணுவதற்கு பொலிஸ் அதிகாரம் எமக்கு வேண்டும்.
பொலிஸ் அதிகாரம் எமது கையில் இருந்தால்தான் சமூகவிரோதிகளை அடக்க மூடியும்.
அதுமட்டுமன்றி சமூகவிரோதிகள் உருவாதற்குரிய காரணங்கள் கண்டறிந்து அவற்றை பொக்க வேண்டும்.
ஆனால் எமது தலைவர்கள் பொலிஸ் அதிகாரம் கேட்பதில்லை. மாறாக தமக்கு 5 கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனம் கேட்டு பெறுகின்றனர்.
எமது தலைவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொள்வதில்லை. தமக்கு சிங்கள பொலிஸ் பாதுகாப்பு கேட்டுப் பெறுகின்றனர்.
தமது பிள்ளைகளை பாதுகாப்பாக வெளிநாடுகளில் தங்க வைத்திருக்கின்றனர். அதனால் சாதாரண மக்களின் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை.
இந்த நிலையில் அடுத்த மாகாணசபை முதல்வர் விக்கியா? மாவையா? என பட்டிமன்றம் நடத்துகின்றனர்.
இந்த நிலை தொடருமாயின் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாத நிலை வரும்.

No comments:

Post a Comment