Wednesday, September 20, 2023

1991ல் நான் மதுரை சிறையில்

1991ல் நான் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தவேளை எனது ஷெல் அருகில் மைக்கல் என்ற வெள்ளைக்காரர் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது கஞ்சா கேஸ் போடப்பட்டு அதற்கு பத்து வருடம் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்தேன். ஏனெனில் பொதுவாக கஞ்சா கேஸ்க்கு குறைவான தண்டனை வழங்கப்படும். ஹெரோயின் போன்ற போதைப் பொருள் கேஸ்களுக்கு மட்டுமே பத்து வருட தண்டனை வழங்கப்படுவது வழக்கம். இதைப் பற்றி அவரிடம் கேட்டபோது தான் கஞ்சாவில் ஆயில் தயாரித்ததாக கூறினார். அதாவது ஒரு பத்து கிலோ கஞ்சாவை காய்ச்சி அதில் ஒரு கிலோ ஆயில் வடித்து எடுக்கப்படும் என்றார். இவ் கஞ்சா ஆயில் ஹெரோயின் போதைப் பொருள் போன்று ஆபத்தான அதிக போதை தருவது. அதனால்தான் இவருக்கு பத்து வருடம் தண்டனை வழங்கப்பட்டதாம். லண்டனில் இருந்து வந்து கொடைக்கானலில் தங்கியிருந்து இவர் கஞ்சா ஆயில் காய்ச்சியது ஆச்சரியம் எனில் அதைவிட ஆச்சரியம் சிறையிலும் இவருக்கு தினமும் புகைப்பதற்கு கஞ்சா கிடைத்தது. சிலர் கஞ்சாவுக்கு அடிமையாகி விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கஞ்சா கிடைக்கவில்லை என்றால் வன்முறையில் இறங்கி விடுவார்கள். அதனால் சிறை நிர்வாகமே சிறிதளவு கஞ்சாவை எப்போதும் சிறைக்குள் புளக்கத்தில் விடுவார்கள். அவ்வாறே இந்த மைக்கலுக்கும் கஞ்சா கிடைத்து வந்தது. 1986ல் நான் மட்டக்கிளப்பு படுவான்கரை பிரதேசத்தில் இருந்தேன். அப்போது சில வீடுகளின் முன்பு முற்றத்தில் ஓரிரு கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் வருடப்பிறப்பு , தீபாவளி போன்ற விசேட தினங்களில் அந்த கஞ்சாவை பயன்படுத்தி பலகாரம் செய்வார்கள். அதனை கஞ்சா பலகாரம் என்பார்கள். இப்போது சில நாடுகளில் கடைகளில் கஞ்சா விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் எமது ஊர் கரவெட்டியில் பல வருடமாக நடனமுருகன் மருந்து கடையில் ஆயள்வேத மருந்து தயாரிப்பதற்கு கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்போது இலங்கையில் கஞ்சா பயிர் செய்கைக்கு அரசு அனுமதியளிக்கப்போவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் தயாராகும் கஞ்சா இந்திய கஞ்சாவைவிட தரமானதாகவும் மலிவானதாகவும் இருந்தால் மட்டுமே இந்தியாவில் இருந்து கஞ்சா கடத்தப்படுவது நிறுத்தப்படும். ஆனால் அதற்கான சாத்தியம் குறைவு என்றே தெரியவருகிறது. ஏனெனில் கேரள கஞ்சா தரமானதும் மலிவானதும் என்கிறார்கள். அது சரி, இராமாயன போரில் காயப்பட்டவர்களை குணப்படுத்த அனுமான் கொண்டுவந்த மூலிகைதான் கஞ்சா என்கிறார்களே. அது உண்மையா?

No comments:

Post a Comment