Thursday, February 15, 2024

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து

1991ல் ராஜிவ் காந்தி மரணத்தையடுத்து தமிழ்நாடு மீட்சிப்படையினைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் புலிகள் இயக்கதில் பயிற்சி மற்றும் ஆயுதங்கள் பெற்றவர்கள் என தடா சட்டத்தின் கீழ் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தேடப்பட்ட ஆறுமுகம் மற்றும் சுமி என்ற இருவர் தமிழ்நாட்டில் இருந்து தப்பி வன்னிக்கு செல்ல முயன்றனர். அவர்களை தமிழ்நாட்டில் இருந்து ஏற்றிவந்த படகினர் வன்னிப்பிரதேசம் எனக்கூறி நெடுந்தீவில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் அங்கிருந்த ஈபிடிபி யினரை புலிகள் என நினைத்து சென்றுள்ளனர். அப்புறம்தான் இரு தரப்பினருக்கும் ஒருவரை ஒருவர் யார் என்று தெரிந்திருக்கிறது. இதற்கிடையில் அருகில் இருந்த இலங்கை கடற்படை இவ் இருவரையும் பொறுப்பெடுத்துவிட்டது. அப்போது ஜனாதிபதியாக பிரேமாதாசா இருந்தார். அவர் இந்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்தார். இதனால் இலங்கை ராணுவப் புலனாய்வினர் இந்த இருவரையும் துன்புறுத்தவில்லை. இவர்கள் இந்திய அரசுக்கு எதிராக தமிழ்நாடு விடுதலைக்காக போராடுவதை அறிந்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை எப்படியோ அறிந்த இந்திய அரசு இந்த இருவரையும் உடனடியாக ஒப்படைக்கும்படி இலங்கை அரசை மிரட்டியது. அதன்படி இலங்கை ராணுவத்தினர் வேறு வழியின்றி இந்த இருவரையும் இந்திய அரசிடம் ஒப்படைத்தனர். இந்த இருவரையும் விசேட விமானத்தில் சென்று அழைத்து வந்தவர் தமிழக காவல்துறையை சேர்ந்த ஒரு அதிகாரியே. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகளை பலவந்தமாக இலங்கைகக்கு திருப்பி அனுப்பக்கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மூலம் பெற்றவர் பாமக கட்சி தலைவர் ராமாதாஸ் அவர்கள். ஆனால் இந்த உத்தரவுக்கு மாறாக கடந்த வருடம் சிறப்புமுகாமில் இருந்து ஒரு ஈழத் தமிழர் பலவந்தமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து பொலிசாரை வரவழைத்து திருச்சி விமானநிலையத்தில் வைத்து இந்த சிறப்புமுகாமில் இருந்த ஈழத் தமிழரை ஒப்படைத்துள்ளது தமிழக அரசு. அவர் இப்போது இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இங்கு இந்த இரு சம்பவங்களை சுட்டிக்காட்டுவது ஏனென்றால் இலங்கை இந்திய அரசுகள் தமக்கு தேவை என்றால் உடனடியாக தமிழரை பரிமாறிக் கொள்வார்கள் என்பதைக் காட்டுவதற்கே. ஆனால் சாந்தனுக்கு இலங்கை அரசின் அனுமதி 15 மாதமாகியும் இன்னும் கிடைக்க வில்லை என்கிறது இந்திய அரசு. இந்திய அரசின் இந்த பொய்யை உண்மை என்று அப்பாவி தமிழர்களும் நம்புகின்றனர். என்ன செய்வது?

No comments:

Post a Comment